மேலும்

மீண்டும் பிளவுபடும் சுதந்திரக் கட்சி – மகிந்த பக்கம் பாய்கிறது மற்றொரு அணி

பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படவுள்ள, அந்தக் கட்சியின் மாநாட்டில் தாம் கலந்து கொள்ளப் போவதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் 11ஆம் நாள் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் மாநாடு நடைபெறவுள்ளது. இதில் மகிந்த ராஜபக்ச கட்சியின் தலைவராக பங்கேற்கவுள்ளதுடன், தமது அதிபர் வேட்பாளரின் பெயரையும் அறிவிக்கவுள்ளார்.

இந்த மாநாட்டில் பங்கேற்பதா இல்லையா என்பது குறித்து, கடந்த 6ஆம் நாள் சிறிலங்கா அதிபரின் இல்லத்தில் சுதந்திரக் கட்சியின் முக்கிய தலைவர்கள் கூடிய ஆராய்ந்திருந்தனர்.

இதன்போது, மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என ஒரு தரப்பும், பங்கேற்கக் கூடாது என மற்றொரு தரப்பும் வாதிட்டன.

இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான கூட்டணி தொடரபான முடிவு இன்னமும் எடுக்கப்படாத நிலையில், பொதுஜன பெரமுனவின் மாநட்டில் பங்கேற்க வேண்டாம் என சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சிறிலங்கா அதிபர் கோரியிருந்தார்.

அதன் பின்னர் அவர் நேற்று அதிகாலை கம்போடியாவுக்குப் புறப்பட்டுச் சென்று விட்டார்.

சுதந்திரக் கட்சியின் இந்த முடிவை நேற்று கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர அறிவித்திருந்தார்.

எனினும், சுதந்திரக் கட்சி தலைமையின் இந்த முடிவுக்குக் கட்டுப்படப் போவதில்லை என, சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

தயாசிறி ஜயசேகர தவிர்ந்த சுதந்திரக் கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக எஸ்.பி.திசநாயக்க தெரிவித்தார்.

அத்துடன் பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளருக்கு தாம் ஆசி வழங்கப் போவதாகவும் அவர் கூறினார்.

தானும் இந்த மாநாட்டில் பங்கேற்கப் போவதாக, சுதந்திரக் கட்சியின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான டிலான் பெரேராவும் கூறியுள்ளார்.

இதற்கிடையே, இரண்டு கட்சிகளுக்கும் இடையில் கூட்டணியை உருவாக்குவது தொடர்பாக பேச்சுக்கள் நடத்தப்படுகின்ற நிலையில், சிறிலங்கா  சுதந்திரக் கட்சித் தலைமை, மாநாட்டில் பங்கேற்க தடைவிதித்துள்ளமை குறித்து பொதுஜன பெரமுன கடும் அதிருப்தி அடைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *