மேலும்

உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகிறார் அமெரிக்க தூதுவர் – கம்மன்பில குற்றச்சாட்டு

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்கிறார் என, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

‘நிறுத்து அமெரிக்கா’ அமைப்பினால் கண்டியில் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“அமெரிக்க தூதுவர் இப்போது மிகவும் துடிப்புடன் செயற்படுகிறார். பல்வேறு நபர்களைச் சந்திக்கிறார். பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார்.

அவர் சிறிலங்காவின் அரசாங்கத்தில் அதிகம் தலையிடுகிறார். மைத்திரி – ரணில் கூட்டா அல்லது அமெரிக்க தூதுவரா உண்மையில் நாட்டை ஆளுகிறார் என்று எங்களுக்கு சந்தேகம் உள்ளது.

அவர் ஆட்சியில் தலையிடுவது மட்டுமல்லாமல், எதிர்கால அரசாங்கத்தையும் எச்சரிக்கிறார்,

தற்போதைய அரசாங்கத்தால் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடுகளை  வருங்கால அரசாங்கங்கள் செயற்படுத்துவது கட்டாயம் என்று கூறுகிறார்.

டொலருக்கு டொலர் என்பதே அமெரிக்காவின் கொள்கை. தனக்குப் பயன் இல்லையென்றால், அமெரிக்கா ஒரு டொலரைக் கூட செலவிடாது.

இவ்வாறான நிலையில் அமெரிக்கா 480 மில்லியன் டொலரை வழங்குவதென்பது மிகப் பெரிய சூழ்ச்சி.

நவோமி க்ளீன் என்ற கனேடிய எழுத்தாளர் எழுதிய The Shock Doctrine என்ற நூலில்,  ஒரு குறிப்பிட்ட நாட்டில் தலையீடு செய்ய வேண்டும் என அமெரிக்கா கருதினால், அந்த நாட்டில் ஒரு பிரச்சினை ஏற்படும் போது, அதற்கு உதவுவதாகக் கூறி அமெரிக்கா அங்கு நுழைகிறது  என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தோனேசியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் ஆகிய விவகாரங்களில் அமெரிக்கா தலையிட்டதால், எதிர்மறையான பாதிப்புகளே ஏற்பட்டன.

ஒரு நாட்டின் விவகாரங்களில் தலையிடுவதில் அமெரிக்கா மிகவும் திறமையானது என்பது தெளிவாகிறது, அவ்வாறு செய்வதற்கான காரணங்களை உருவாக்குகிறது.

ஒரு நாட்டின் விவகாரங்களில் தலையிடுவதற்கான காரணங்களை உருவாக்குவதில் அமெரிக்கா மிகவும் திறமையானது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை அடுத்து அமெரிக்கா ஆரம்பத்தில் சிங்கள-முஸ்லிம் மோதலைத் தூண்ட முயற்சித்தது.  பின்னர் நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட்டது.

நாங்கள் மோதல்களில் ஈடுபடாத போது, அவர்கள் சிலாபம், குளியாப்பிட்டி மற்றும் மினுவாங்கொடாவில் உள்ள முஸ்லிம்களைத் தாக்கினர். ஆனால் இன்னும் நாங்கள் யாரையும் தாக்கவில்லை.

அதிபர் தேர்தலுக்கு முன்னர் அமெரிக்கா நாட்டில் மற்றொரு மோதலை உருவாக்கும், எனவே நாடு தயாராக இருக்க வேண்டும்.

அமெரிக்க இராணுவத்திற்குள் நிலவும் மிகப்பெரிய பிரச்சினை பாலியல் துன்புறுத்தல்கள் தான்.

பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து, அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2018 ஆம் ஆண்டில் மட்டும் 13,000 பெண் அதிகாரிகள் மற்றும் 7,500 ஆண் அதிகாரிகள் உட்பட 20,500 இராணுவ வீரர்கள், ஏனைய இராணுவ வீரர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

2016ஆம் ஆண்டு இடம்பெற்றதை விட, 2018ஆம் ஆண்டில் இடம்பெற்ற பாலியல் துன்புறுத்தல்கள் 25 வீதத்தினால் அதிகரித்துள்ளது.

ஈராக், தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய மூன்று ஆசிய நாடுகள் அமெரிக்க இராணுவத்தால் பாதிக்கப்பட்டுள்ளன, இந்த நாடுகளில் அமெரிக்கா இராணுவ தளங்களை நிறுவியுள்ளது.

அமெரிக்க இராணுவம் சிறிலங்காவுக்கு வந்தால், மிகவும் ஆபத்தான நிலைமை ஏற்படும். நாங்கள் அவர்களை திருப்பி அனுப்ப முடியாது.

இந்த அமெரிக்க தலையீடு நிறுத்தப்பட வேண்டும்.   எங்களால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்” என்றும் அவர் தெரிவித்தார்.

ஒரு கருத்து “உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகிறார் அமெரிக்க தூதுவர் – கம்மன்பில குற்றச்சாட்டு”

  1. Arinesaratnam Gowrikanthan says:

    இலங்கையில் அமெரிக்க தலயிடுவதன் நோக்கம் கட்டுரையில் குறிப்பிட்டதுபோல் டொலரல்ல. அதைவிட முக்கியத்துவமானது தெற்காசியாவை தனது இராணுவ செல்வாக்கு வலயமாக மாற்றுவது. இதன் மூலம் அமெரிக்கா இரு இலக்குகளை எட்ட முயற்சிக்கிறது; முதலாவது; கட்டுரையாளர் சொல்வதப்போல் டாலர். அதாவது தெற்காசிய பொருளாதார வளங்கள். இரண்டாவது; SCO ஷங்காய் ஒத்துளைப்பு அமைப்புக்கு எதிராக ஆசியாவில் பெலமான ஒரு இராணுவ பொருளாதார வலயத்தை உருவாக்குவது. இக்குறிக்கோளை நிறைவேறுவதற்காக இலங்கையைத் தனது தளமாகப் பாவிக்க முடிவெடுத்து விட்டது.

Leave a Reply to Arinesaratnam Gowrikanthan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *