மேலும்

ரஷ்ய- சிறிலங்கா கடற்படைத் தளபதிகள் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பேச்சு

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் அழைப்பின் பேரில் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா கடந்த ஜூலை மாதம் 27ஆம் நாள் தொடக்கம் 30ஆம் நாள் வரை, ரஷ்யாவின் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

சென் பீற்றர்ஸ்பேர்க்கில் அமைந்துள்ள ரஷ்ய கடற்படைத் தலைமையகத்துக்கு சிறிலங்கா கடற்படைத் தளபதி மேற்கொண்ட  முதலாவது பயணம் இதுவாகும்.

இருதரப்பு கடற்படை ஒத்துழைப்பு வளர்ச்சியில் இது ஒரு அடையாள மைல் கல்லாக அமைந்துள்ளது.

கடற்படைத் தளபதியுடன்,  அவரது உதவியாளரும், கடற்படைத் தளபதியின் செயலருமான கப்டன் ஜிஎஸ்எச்ஜி டி சில்வா, கடற்படைத் தளபதியின் இணைப்பு அதிகாரி லெப்.கொமாண்டர் திசநாயக்க, ஆகியோரும் இந்தப் பயணத்தை மேற்கொண்டிருந்தனர்.

இவர்கள் ரஷ்யாவின் மிகப்பெரிய அனைத்துலக கடல்  நிகழ்வான பிரதான கடற்படை அணிவகுப்பிலும் பங்கேற்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த அணிவகுப்பில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், மற்றும் இந்தியா, சிறிலங்கா உள்ளிட்ட 13 நாடுகளின் கடற்படைத் தளபதிகளை உள்ளிட்ட பிரதிநிதிகள் உள்ளிட்ட 26 நாடுகளின் உயர்மட்டக் குழுக்கள் பங்கேற்றன.

இந்தப் பயணத்தின் போது, ரஷ்ய கடற்படைத் தளபதி அட்மிரல் நிகோலாய்  எவ்மெனோவ்வுடன், சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பாக பேச்சு நடத்தினார்.

இந்த அணிவகுப்பு நிகழ்வின் மற்றொரு பக்கத்தில், மொஸ்கோவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பணியாற்றும் பாதுகாப்பு ஆலோசகரும்,  தூதுவரின் இணைப்பதிகாரியும், ரஷ்ய கடற்படைத் தலைமையகத்தின் அனைத்துலக உறவுகளுக்கான அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தினர்.

எதிர்காலப் பயணங்கள் தொடர்பாகவே இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

திருகோணமலை கடற்படை பயிற்சி அக்கடமி மற்றும் சென் பீற்றர்ஸ்பேர்க்கில் உள்ள ரஷ்ய கடற்படையின் அட்மிரல் குஸ்நெட்சோவ்  கடற்படை அகடமியின் முதன்மை கல்வி மற்றும் ஆய்வு மையம் அகியவற்றுக்கிடையில் முதலாவது பரிமாற்றப் பயங்கள் உள்ளிட்ட  சிறிலங்கா- ரஷ்ய கடற்படை கல்வி நிறுவனங்களுக்கிடையிலான மேலதிக ஒத்துழைப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *