மேலும்

கூட்டுமுயற்சித் திட்டங்களை துரிதப்படுத்த வேண்டும் – சிறிலங்கா பிரதமரிடம் வலியுறுத்தினார் மோடி

ranil-modiசிறிலங்காவில் இந்தியாவின் கூட்டு முயற்சித் திட்டங்களை வேகமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

ஹைதராபாத் ஹவுசில் நேற்று நடந்த இருதரப்புப் பேச்சுக்களின் போதே, இந்தியப் பிரதமர் இதனை வலியுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விடயத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்கு கொண்டு செல்லுமாறும், கூட்டு முயற்சித் திட்டங்கள் கூடிய விரைவில் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டங்கள் சிறிலங்காவின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதாக மட்டும் இருக்காது. வேலைவாய்ப்பையும் உருவாக்கும் என்றும் இந்தியப் பிரதமர் கூறியுள்ளார்.

இதற்கு சிறிலங்கா பிரதமர், கூட்டு முயற்சித் திட்டங்களை வேகமாக முன்னெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க சிறிலங்கா தயாராக இருப்பதாகவும், இதிலுள்ள சில தடைகளை அகற்றுவதற்கு வேகமாகப் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ranil-modi

இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்துவதற்கு  சிறிலங்கா பிரதமர் எடுத்து வரும் முயற்சிகளுக்கும் இந்தியப் பிரதமர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் உள்நாட்டு அரசியலில் எதிர்ப்புகள் இருந்தாலும், இந்தியாவுடனான  நட்புறவை வலுப்படுத்துவதற்கு ரணில் விக்கிரைமசிங்க பெரும் முயற்சிகளை முன்னெடுத்து வருவதாகவும் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்பில் இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், இந்தியத் தூதுவர் தரன்ஜித்சிங் சந்து, இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச் செயலர் சஞ்சய் பாண்டா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *