16 ஆண்டுகளுக்குப் பின் நாடு திரும்பிய ‘லங்கா ஈ நியூஸ்’ ஆசிரியர் கைது
16 ஆண்டுகளுக்குப் பின்னர் சிறிலங்கா திரும்பிய லங்கா ஈ நியூஸ் இணையத் தள ஆசிரியர் சந்தருவன் சேனாதீர கட்டுநாயக்க காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர், கொழும்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார் என்றும், இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் ஆசிரியர் சந்தருவன் சேனாதீர, 16 ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று மதியம் மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய போது, கைது செய்யப்பட்டார்.
லங்கா ஈ நியூஸ் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டதை அடுத்தும், ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ஊடக நிறுவனம் தாக்கப்பட்டதை அடுத்தும், தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் காரணமாக சந்தருவன் சேனாதீர, சிறிலங்காவை விட்டுத் தப்பிச் சென்று பிரித்தானியாவில் புகலிடம் தேடியிருந்தார்.
16 ஆண்டுகளின் பின்னர் நாடு திரும்பிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், லங்கா ஈ நியூஸ் ஆசிரியரின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு, சுதந்திர ஊடக இயக்கம், சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லசந்த டி சில்வா மற்றும் செயலாளர் திலிஷா அபேசுந்தர ஆகியோர் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“நீண்ட காலமாக வெளிநாட்டில் வசித்து வந்த லங்கா ஈ நியூஸ் ஆசிரியர் சந்தருவன் சேனாதீர, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஊடகவியலாளர் சந்தருவன் சேனாதீர தனது ஊடகப் பணியின் விளைவாக எதிர்கொண்ட மரண அச்சுறுத்தல்கள் காரணமாக நீண்ட காலமாக நாட்டிற்கு வெளியே தங்கியிருந்தார்.
எனவே, அவர் காவலில் இருக்கும்போது கூட அவரது உயிருக்கும் தனிப்பட்ட பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் .
அவரைக் கைது செய்வதற்கான நீதிமன்ற உத்தரவு 2016 ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்டது.
இருப்பினும், தற்போதைய கைது அந்த உத்தரவு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டதா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
சுதந்திர ஊடக இயக்கம் அவரது பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கிறது, அதே நேரத்தில் ஒரு பாரபட்சமற்ற மற்றும் நியாயமான சட்ட செயல்முறைக்கான அவரது உரிமையையும் பாதுகாக்க வேண்டும். என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
