மேலும்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 10 ஆயிரம் ரூபா மேலதிக கொடுப்பனவு

sri lanka parliamentசிறிலங்காவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்துக்கு மேலதிகமாக, 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு கடந்த ஒக்ரோபர் மாதம் முதல் வழங்கப்படுவதாக சிறிலங்கா நாடாளுமன்ற மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

262 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மரணமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனைவிமார் 220 பேரும், ஓய்வூதியத்தைப் பெற்று வருகின்றனர்.

இவர்களுக்கு கடந்த மாதம் தொடக்கம், மேலதிகமாக 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படுகிறது. இதனால் அரசாங்கத்துக்கு, 26.2 மில்லியன் ரூபா மேலதிக செலவு ஏற்பட்டுள்ளது.

ஐந்து ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவர்கள் இந்த ஓய்வூதியத்தைப் பெறுவதற்கு தகுதி வாய்ந்தவர்களாவர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஒருவர் பெறும் ஆகக் குறைந்த ஓய்வூதியம், 18,095 ரூபாவாகும்.

அதேவேளை, 15 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவருக்கு, 36,190 ரூபா ஓய்வூதியமாக வழங்கப்படும்.

அமைச்சரவை முடிவுக்கமையவே, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிக கொடுப்பனவு 10 ஆயிரம் ரூபா வழங்கப்படுகிறது.

பல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது குறைகளை சபாநாயகருக்கு எடுத்துக் கூறியிருந்ததுடன், தமக்கு குறைந்தளவு ஓய்வூதியமே வழங்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தனர்.

சபாநாயகர் இதனை அரசாங்கத்திடம் தெரிவித்ததை அடுத்தே, அமைச்சரவையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *