மேலும்

7 பேரையும் விடுவிக்க உதவுங்கள் – சோனியாவுக்கு நீதிபதி தோமஸ் கடிதம்

Justice-K-T-Thomasராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும்,  பேரறிவாளன் உட்பட 7 பேரும், மன்னிப்பு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட வேண்டும் என்று,  இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ஒருவரான கே.டி.தோமஸ் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர்  சோனியா காந்திக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி  கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

ராஜிவ் கொலை வழக்கை விசாரித்த,  நீதிபதிகள் கே.டி.தோமஸ், வாத்வா, சையத்ஷா முகமது குவாத்ரி ஆகிய 3 பேர் அடங்கிய அமர்வு நீதிமன்றம், இவர்களில் நால்வருக்கு மரணதண்டனையையும், மூவருக்கு ஆயுள்தண்டனையையும் உறுதி செய்து கடந்த 1999ம் ஆண்டு  தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை அளித்த நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி கே.டி.தோமஸ் கடந்த மாதம் 18ஆம்  ஆம் நாள், சோனியா காந்திக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் அவர், “ ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் 25 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் நீங்களும் ராகுல் காந்தியும் (முடிந்தால் பிரியங்கா காந்தியும்) மன்னிப்பு அளிக்கவேண்டும்.

இது தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு நீங்கள் கடிதம் அனுப்பினால் அவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதி என்ற அடிப்படையில் நான் இந்த கோரிக்கையை உங்கள் முன் வைக்கிறேன்.

இந்த வழக்கில் விசாரணை நடத்திய மத்திய புலனாய்வுப் பிரிவு( சிபிஐ) சில தவறுகளை செய்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 40 லட்சம் ரூபா கைப்பற்றப்பட்டது என சிபிஐ கூறியுள்ளது. ஆனால் அது உண்மையல்ல.

தற்போது சிறையில் உள்ளவர்கள் தங்களது தவறுக்கான தண்டனையை அனுபவித்து விட்டனர்.

இதுபோன்ற நிலையில் கடவுள் மட்டுமே அவர்களை மன்னிக்க முடியும். எனவே நீங்கள் பெரிய மனதுடன் அவர்களுக்கு மன்னிப்பு அளிக்கவேண்டும்.

அப்படி மன்னிப்பு அளித்தால் கடவுள் மிகவும் மகிழ்வார். நான் இந்த கோரிக்கையை முன் வைப்பதில் தவறு இருந்தால் என்னை மன்னிக்க வேண்டும்.” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *