மேலும்

முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு மீதான தாக்குதல்

JO-protest (1)செப்ரெம்பர் 21 அன்று வெளியிடப்பட்ட சிறிலங்காவின் பரிந்துரைக்கப்பட்ட அரசியலமைப்பு மீதான இடைக்கால அறிக்கை தொடர்பாக பல்வேறு எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன. புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்த முயற்சிப்பவர்கள் தேசத்துரோகிகள் எனவும் இவர்கள் கொல்லப்பட வேண்டும் எனவும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன வலியுறுத்தியுள்ளார்.

இடைக்காலப் பரிந்துரைகளை உருவாக்குவதில் முன்னணி வகிப்பவர்களில் சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஒருவராவார் எனவும் இதனால் இவரது நடவடிக்கையைத் தான் எதிர்ப்பதாகவும் முன்னாள் இராஜதந்திர தயான் ஜெயதிலக சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதை எதிர்த்து ஒக்ரோபர் மாதத்தின் ஆரம்பத்தில் சிறிலங்காவைச் சேர்ந்த புலமைவாதியான அசோக பண்டாரகே தனது எதிர்ப்பை வெளியிட்டிருந்தார். இதேவேளையில், புதிய அரசியலமைப்பானது சிறிலங்காவின் ஒற்றையாட்சியைக் குழிதோண்டிப் புதைப்பதாக சிறிலங்காவைச் சேர்ந்த அதிகாரம் மிக்க பௌத்த மதகுருமார்கள் தெரிவித்திருந்தனர்.

பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பில் ‘பெரும்பான்மை அதிகாரப் பகிர்வு’ என்கின்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டுள்ளமையே பெரும் எதிர்ப்பு உருவாவதற்குக் காரணமாகும். ஏனெனில் இச்சொற்றொடரானது தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் பெரும்பான்மை அதிகாரங்களைப் பகிர்வதற்கு அனுமதிப்பதை பெரும்பான்மை சிங்களவர்கள் எதிர்க்கின்றனர்.

பெரும்பான்மை சிங்கள மக்கள் வாழும் நாட்டின் ஏனைய ஏழு மாகாணங்களும் வடக்கு கிழக்கு போன்றே பெரும்பான்மை அதிகாரப் பகிர்வைப் பெறுவதாக பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் இது தொடர்பாக எவ்வித வாதங்களும் முன்வைக்கப்படவில்லை.

இதற்கப்பால், மத்திய மயப்படுத்தப்பட்ட ஒற்றையாட்சி அரசியலமைப்பானது ஏற்கனவே சிங்கள மக்களுக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளது. 1948, 1972 மற்றும் 1978களில் வரையப்பட்ட ஒற்றையாட்சி அரசியலமைப்புக்களின் பிரகாரம் பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டமையாலேயே இந்த நாட்டில் யுத்தம் ஒன்று உருவாவதற்கும் இது 26 ஆண்டுகள் தொடர்வதற்கும் வழிவகுத்தது.

இவ்வாறான கொடிய யுத்தத்தின் பின்னரும் கூட மாகாணங்களுக்கு அரசியல் அதிகாரப் பகிர்வை வழங்குவதற்கு சிங்கள அரசியல் சக்தியின் கணிசமான பங்கினர் எதிர்ப்பை வெளியிடுகின்றனர்.

தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அரசியல் அதிகாரப் பகிர்வை வழங்குவதை எதிர்ப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவதாக, இவ்வாறு அதிகாரப் பகிர்வை வழங்குவதன் மூலம் தமிழ்மக்கள் தனியாகப் பிரிந்து செல்வதற்கான வழியேற்படலாம் என்கின்ற அச்சம் நிலவுகிறது.

இரண்டாவதாக, இலங்கைத் தீவானது பௌத்தமதத்தின் புனித வடிவம் என நீண்ட காலமாக நம்பப்படும் தேரவாத பௌத்தத்திற்குச் சொந்தம் என்பதால் பௌத்தர்கள் வாழாத வடக்கு மற்றும் கிழக்கிற்கு அரசியல் அதிகாரப் பகிர்வை வழங்கக் கூடாது எனக் கூறப்படுகிறது. இந்த மனோநிலையானது ‘அரசியல் பௌத்தம்’ என அடையாளம் காணப்படுகிறது.

தமிழ் மக்கள் வாழும் வடக்கு கிழக்குப் பிராந்தியமானது பிரிந்து செல்லாது எனவும் இந்த நாடானது தொடர்ந்தும் ‘பிளவுபடாத ஐக்கிய’ நாடாக இருக்கும் எனவும் இடைக்கால அறிக்கையில் முழுமையாக விளக்கப்பட்டுள்ளது. இக்கூற்றை மேலும் தெளிவுபடுத்துவதற்காக உத்தியோகபூர்வ சிங்கள மொழிமூல இடைக்கால அறிக்கையில் ‘ஏகிய’ (சிங்களத்தில் ஒற்றையாட்சி என்கின்ற கருத்தாகும்) என அரசியலமைப்பை விபரிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளையில் தமிழ் மற்று ஆங்கில மொழி மூல அறிக்கைகளில் ‘ஒற்றையாட்சி மற்றும் கூட்டாட்சி போன்ற பதங்கள் மிகக் கவனமாகத் தவிர்க்கப்பட்டுள்ளன. வடக்கு கிழக்கு பிரிந்து சென்றுவிடும் என்கின்ற அரசியல் பௌத்தத்தால் வடிவமைக்கப்பட்ட அச்சத்தின் காரணமாகவே இப்பதம் தவிர்க்கப்பட்டிருக்கலாம். பரிந்துரைக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு அரசியல் பௌத்தமே பெரும் தடையாக உள்ளது.

அரசியல் அதிகாரப் பகிர்வு முறைமையை ஆதரிக்குமாறும் உத்தேச அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மாற்றத்திற்கு ஆதரவளிக்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஒக்ரோபர் 30 அன்று நாடாளுமன்றில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வேண்டுகோளை விடுத்திருந்தார்.

சிறிலங்கா நாடாளுமன்றம் உருவாக்கப்பட்டு முதல் 30 ஆண்டுகளில் தமிழ் அரசியல்வாதிகள் பல்வேறு வேண்டுகோள்களை விடுத்த போதிலும் சிங்கள அரசியல்வாதிகள் இவற்றைத் தொடர்ந்தும் புறக்கணித்து வந்துள்ளனர். சிங்கள பெரும்பான்மை சமூகமானது ஒற்றையாட்சி அரசியலமைப்பின் கீழ் அரசியல் அதிகாரத்தை அனுபவித்து வந்துள்ளமையே இதற்கான காரணமாகும்.

தமிழ்த் தலைமையுடன் வரையறுக்கப்பட்ட சுயாட்சியுடன் கூடிய அரசியல் அதிகாரப் பகிர்வு தொடர்பாக இரண்டு தடவைகள் உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் சிங்கள பெரும்பான்மை சமூகத்தின்  எதிர்ப்பைத் தொடர்ந்து இவை கைவிடப்பட்டன. தமிழ் அரசியல்வாதிகளின் இவ்வாறான வேண்டுகோள்கள் எப்போதும் செவிடன் காதில் ஊதிய சங்குகள் போலாகியுள்ளன.

எதிர்காலத்தில் மீண்டுமொரு யுத்தம் இடம்பெறுவதைத் தவிர்க்க வேண்டுமாயின் தமிழ் மக்களின் கோரிக்கைகள் செவிசாய்க்கப்பட வேண்டும்.

இதேவேளையில், சிங்களத் தலைமையானது அரசியல் அதிகாரப் பகிர்வை வழங்குவதில் விருப்பம் காண்பிக்கவில்லை எனவும் இதனால் தமிழ் மக்கள் அனைத்துலகச் சட்டங்கள் மூலம் தமக்கான உரிமையைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும் எனவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அதாவது அனைத்துலகச் சட்டம் என்பது அனைத்துலக சமூகமானது தமிழ் மக்களின் பிரச்சினைகளில் தலையீடு செய்வதற்கான சூழலை உருவாக்குவதாகும் என்பதே உண்மையான அரசியலாகும்.

வடகிழக்குத் தன்னாட்சியானது கொழும்பில் அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்கை எதிர்ப்பதற்கு உதவும் என விக்னேஸ்வரனால்  தனது வாதத்தில் உறுதியாக இருக்க முடியுமானால், ஒன்றுபட்ட சிறிலங்காவிற்குள் தமிழ் மக்கள் சுயாட்சியைப் பெற்றுக் கொள்வதற்கு அனைத்துலக சமூகத்தின் ஆதரவை விக்னேஸ்வரனால் வெற்றிகரமாக வென்றெடுக்க முடியும்.

வழிமூலம்        – The diplomat
ஆங்கிலத்தில்  –  Ana Pararajasingham
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *