மேலும்

துயிலுமில்லங்களில் வேண்டாம் அரசியல் – மாவீரர் குடும்பங்களின் சார்பில் கோரிக்கை

baseer-kakka-pressமாவீரர் நாளன்று மாவீரர் துயிலுமில்லங்களில், பிரதான சுடரை  மாவீரர் ஒருவரின் மனைவி, கணவன், பெற்றோர் அல்லது பிள்ளைகள் மட்டுமே ஏற்ற வேண்டும் என்று மாவீரர் குடும்பங்கள் சார்பில், முன்னாள் போராளியும், மாவீரரின் தந்தையுமான பசீர் காக்கா எனப்படும், முத்துக்குமாரு மனோகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், விடுதலைப் புலிகளின் ஆரம்பகாலப் போராளிகளில் ஒருவரான பசீர் காக்கா இந்த வேண்டுகோளை விடுத்தார்.

“மாவீரர் நாளையொட்டி சிரமதானப் பணிகளில் உணர்வெழுச்சியுடன் பங்கு பற்றி வரும் அனைவருக்கும் மாவீரரின்களின் பெற்றோரின் சார்பில் பணிவான வணக்கங்கள்.

இந்த நிகழ்வானது எந்தவொரு அரசியல் கட்சியினதும் அல்லது அரசியல்வாதியினதும், அரசியல் தேவைகளுக்கு எந்தவிதத்திலும் பயன்படுத்தப்படக் கூடாது என நாம் எதிர்பார்க்கிறோம்.

2009ஆம் ஆண்டுக்கு முன்னர் எந்த உணர்வுடன் துயிலுமில்ல மண்ணை மிதித்தோமோ, எவ்வாறான மனநிலையில் வெளியே வந்தோமோ, அந்த மனோநிலை அவ்வாறே இப்போதும் பேணப்பட வேண்டும் என வேண்டுகிறோம்.

இதற்கு அரசியல்வாதிகளினது மாத்திரமன்றி,  ஊடகவியலாளர்களின் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கிறோம்.

baseer-kakka-press

இந்த வணக்க உணர்வுநிலைக்கு இடையூறு ஏற்படும் வகையில், மாவீரர் நிகழ்வுச் சூழலில் அரசியல் விவகாரங்கள் தொடர்பாக செவ்விகள் எடுப்பதனைத் தவிர்க்குமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம்.

அத்துடன், துயிலுமில்லங்களில் பிரதான சுடரை ஒரு மாவீரரின் மனைவியோ, கணவனோ, பெற்றோரோ அல்லது பிள்ளைகளோ மட்டுமே ஏற்ற வேண்டும்.

சமரசம் உலாவிய இடமாக துயிலுமில்லங்கள் திகழ்கின்றன. பிரிகேடியர் முதல் காவல்துறை , எல்லைப்படை, துணைப்படை, போருதவிப்படை வீரர்கள் என எல்லோரையும் சமமாகவே தன்னுள் ஏற்றுக்கொண்டது இந்த மண். அந்த நிலை தொடர்ந்து பேணப்பட வேண்டும்.

முதன்மைச் சுடர் ஏற்றுபவரைத் தெரிவு செய்யும் போது, மாவீரரின் பதவி நிலைகளைக் கணக்கிலெடுக்கத் தேவையில்லை என்பது எமது தாழ்மையான கருத்து.

பிரிபடாத தமிழ் தேசத்தினதும் அதன் இறையாண்மையினதும் அங்கீகாரம் என்பதேஎமது போராட்டத்தின் அடிப்படையாகும். எமது இந்த பிறப்புரிமைக்காக லெப். ஜுனைதீன் (ஜோன்சன்) முதல் 43 முஸ்லிம் மாவீரர்கள், 1985 ஆம் ஆண்டு முதல் 1990 ஆண்டு வரை, வீரச்சாவடைந்துள்ளனர்.

2000ஆம் ஆண்டின் பின்னரும் இருவர் மாவீரர்களாகியுள்ளனர். எனவே முஸ்லிம் மாவீரர்களின் உறவுகளும் கௌரவிக்கப்பட வேண்டும்.

தமிழ் தேசத்தைப் பொறுத்தவரை ஒரே ஒரு பிரபாகரன் தான். அவரது நிலையில் யாரும் தம்மை வைத்துப் பார்ப்பதையோ, அல்லது அவராகத் தம்மைச் சித்தரிக்கும் முனைவதையோ எமது இனம் அனுமதிக்காது.

அத்துடன், மாவீரர் நாள் நிகழ்வுக்கு முன்னதாகவோ, பின்னதாகவோ எந்த ஒருவரது உரையும் தேவையற்றது.

மாவீரர் நாள் நிகழ்வுக்கு முன்னதாகவோ, பின்னதாகவோ எந்த ஒர் அரசியல் கட்சிக்கும் அல்லது அரசியல்வாதிக்கும் சார்பாகவோ அல்லது எதிராகவோ பிரசுரங்களை வழங்க வேண்டாம்.

நிகழ்வு தொடர்பான அறிவுறுத்தல்களை ஒலிபெருக்கி ஊடாக வழங்குவோரும் இந்த வழிமுறையைப் பின்பற்றுவதே சிறந்தது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *