மேலும்

சித்திரவதை குற்றச்சாட்டுகளால் கடும் அழுத்தங்களை எதிர்கொள்ளும் சிறிலங்கா

toutureஅண்மைக்காலங்களில் சிறிலங்காவில் 50இற்கும் அதிகமான தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டமை மற்றும் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டமை தொடர்பான அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்தின் விசாரணை அறிக்கை கடந்த வாரம் வெளியிடப்பட்டதை அடுத்து, சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.

இது தொடர்பாக ஏபி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

“கடந்த புதன்கிழமை, அசோசியேட்டட் பிரஸ் வெளியிட்டுள்ள புதிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மருத்துவர்கள், உளவியல் நிபுணர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட, அமெரிக்க செனட்டின் ஜனநாயக கட்சி உறுப்பினரும், வெளிநாடுகளுக்கான அமெரிக்க உதவிகள் குறித்த உபகுழுவில் இடம்பெற்றிருப்பவருமான, பற்றிக் லெஹி, “கைதுகள் தடுப்புகள் அனைத்துலக தரநியமங்களுக்கு ஏற்பவே இடம்பெற வேண்டும், போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளின் அடிப்படையிலேயே, அமெரிக்க செனட் ஒதுக்கீட்டுக் குழு  சிறிலங்காவுக்கு உதவிகளை வழங்கியுள்ளது.

2015ஆம் ஆண்டில் இருந்து சிறிலங்கா 76 மில்லியன் டொலரை அமெரிக்காவின் வெளிவிவகார உதவியாகப் பெற்றுள்ளது.

இந்தச் சித்திரவதைகள் கொடூரமானவை என்பதுடன், நல்லிணக்கம் மற்றும் நீதிக்கான சிறிலங்கா அரசாங்கத்தின் வாக்குறுதிகளுக்கு முரணானது.

இதற்குப் பொறுப்பானவர்களைத் தண்டிப்பதற்காக, சித்திரவதைகளுக்கான நம்பகமான ஆதாரங்களை தேடிக் கொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்த சித்திரவதைகள் தொடர்பாக சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் பலர், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

“தடயவியல் நிபுணர்கள் என்ற வகையில் நாங்கள், சிறிலங்காவில் சித்திரவதைகள் செய்யப்பட்டதையடுத்து, நாட்டை விட்டு வெளியேறிய நூற்றுக்கணக்கான இலங்கையர்களை பார்த்திருக்கிறோம்.

ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரும், சிறிலங்காவில் இருந்து கவலை தரும் எண்ணிக்கையில் இத்தகைய வழக்குகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன” என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு மருத்துவர்கள் தரப்பில் எழுதப்பட்ட கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை,  அமெரிக்காவின் நாடாளுமன்ற வெளிவிவகாரக் குழுவில் இடம்பெற்றுள்ள ஜனநாயக் கட்சியின் உயர்மட்ட பிரதிநிதிகள் சபை உறுப்பினரான, எலியட் ஏஞ்சல், வொசிங்டனில் உள்ள கொள்கை வகுப்பாளர்கள் இந்த சித்திரவதை அறிக்கைகளை உதாசீனப்படுத்த முடியாது என்று கூறியுள்ளார்.

இந்த அறிக்கைகளின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, இதுதொடர்பாக முழுமையாக  பொறுப்புக்கூறல் நடக்கும் வரை, சிறிலங்காவுடனான, அமெரிக்காவின் மேலதிக இராணுவ உறவுகள் விடயத்தில் அமெரிக்கா கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்துக்கு திரும்பத் திரும்ப அழைப்பை ஏற்படுத்திய போதும், பதிலளிக்கப்படவில்லை. வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்ட மின்னஞ்சலுக்கும் பதில் இல்லை” என்றும் ஏபி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *