மேலும்

போர்க்குற்ற நீதிமன்றில் படையினரை நிறுத்த அனுமதியேன் –சிறிலங்கா அதிபர் உறுதி

maithri-army (2)சிறிலங்கா அதிபராக தான் இருக்கும் வரை, சிறிலங்கா படையினரை எந்தவொரு போர்க்குற்ற நீதிமன்றத்திலும் நிறுத்துவதற்கு அனுமதிக்கமாட்டேன் என்று மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

கொழும்பில் உள்ள சிறிலங்கா இராணுவ மருத்துவமனை அரங்கில் நேற்று மாலை சிறிலங்கா இராணுவ கட்டளை அதிகாரிகள், மற்றும் சார்ஜன்ட் மேஜர் தர அதிகாரிகள் 350 பேரை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சந்தித்தார்.

சிறிலங்கா பாதுகாப்பு செயலர் கபில வைத்தியரத்ன, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க ஆகியோரின் ஒழுங்கமைப்பில், இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இங்கு உரையாற்றிய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன,

“நாட்டை காப்பாற்றுவதற்காகவும், தேசிய பேரழிவுகளின் போதும், உங்கள் உயிரையும் மதிக்காமல் நீங்கள் அரப்பணிப்புடன் பணியாற்றியுள்ளீர்கள். அதற்காக நாங்கள் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறோம்.

அண்மையில் நீங்கள் தேசிய பேரழிவுகள், தொற்றுநோய்கள், நிலச்சரிவுகள் போன்றவை எங்களைத் தாக்கியபோது, முன்னணியில் நின்று பணியாற்றினீர்கள்.

நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும், அமைதியான சமூகமாக நல்லிணக்கம், ஒற்றுமை, புரிந்துணர்வுடன் முன்நோக்கிச் செல்வதற்கும் உங்களின்  தொடர்ச்சியான ஆதரவு எமக்குத் தேவை.

நாட்டின் தலைவராக நான் இருக்கும் வரைக்கும், எந்தவொரு போர் நீதிமன்றத்தின் முன்னாலும் உங்களை நிறுத்துவதற்கு அனுமதிக்கமாட்டேன் என்று உறுதியாக கூறுகிறேன்.

maithri-army (1)maithri-army (2)maithri-army (3)maithri-army (4)

இருந்தாலும், தவறு செய்த இராணுவத்தினர், நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவதாக இருந்தால், நாட்டின் சட்டங்களுக்கு அமைவாகவே அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சில அதிருப்தி அரசியல்வாதிகளும், ஓய்வுபெற்ற இராணுவத்தினரும்,போர் வீரர்களைத் தண்டிக்க முயற்சி செய்வதாக  குற்றம்சாட்டி வருகின்றனர்.  நான் இந்த நாட்டின் அதிபர் என்ற வகையில், வெளிநாட்டு நீதிபதிகள் போன்றவர்களால் எவரையும் விசாரணை செய்ய அனுமதிக்கமாட்டேன்.

எனவே ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் தவறான அறிக்கைகளால்   நீங்கள் தவறாக வழிநடத்தப்படக்கூடாது.

உலகின் எந்த மனித உரிமை அமைப்புக்களும், எந்த அடிப்படையிலும், சிறிலங்கா இராணுவத்தை கட்டுப்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது.

ஒரு இறைமையுள்ள அரசு என்ற வகையில், எந்தவொரு தலையீடுகளும் இன்றி, எமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் ஆற்றல் இருப்பதாக, ஐ.நாவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கைகள், வதந்திகள் மற்றும் நம் எதிரிகளால் தவறாக வழிநடத்தப்படக் கூடாது, என்னை நம்புங்கள் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இயற்கை பேரழிவு காலங்களில் நீங்கள் வழங்கிய சிறந்த சேவைகளுக்கு நான் உங்களை பாராட்டுகிறேன், நாட்டில் நாட்டில் நல்லிணக்கம் மற்றும் சமாதான வாழ்வுக்கான உங்கள் சிறந்த ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த காலங்களில் போலல்லாமல், போர் வீரர்களின் வெளிநாட்டு நுழைவிசைவுகள் எதிர்காலத்தில் நிராகரிக்கப்படாது, என்றும், தங்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு எந்த தடங்கலும் ஏற்படாமல் உதவுவோம் என்றும் நான் வலியுறுத்திக் கூறுகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில், போர்க்குற்றம்சாட்டப்பட்ட – வெளிநாட்டுப் பயணங்களுக்கான நுழைவிசைவுகள் மறுக்கப்பட்ட மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே போன்ற சிறிலங்கா இராணுவ அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>