மேலும்

தமிழ் அரசுக் கட்சியுடனான உறவுகளை முறித்துக் கொண்டது ஈபிஆர்எல்எவ்

Suresh-Premachandranதமிழ் அரசுக் கட்சியுடன் இனிமேல் இணைந்து செயற்படப் போவதில்லை என்றும், அதன் சின்னத்தில் போட்டியிடப் போவதில்லை என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈபிஆர்எல்எவ் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன்,

“தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றாத, அரசியலமைப்பு திருத்த யோசனைகளுக்கு தமிழ் அரசுக் கட்சி ஆதரவளிப்பதன் மூலம் தமிழ் மக்களுக்கு துரோகம் செய்கிறது.

தமிழ் மக்களின் ஆணையை தமிழ் அரசுக் கட்சி நிறைவேற்றவில்லை. எனவே எதிர்காலத்தில் அந்தக் கட்சியுடன் இணைந்து செயற்படவோ, அதன் சின்னத்தில் போட்டியிடவோ போவதில்லை.

தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதில்லை என்ற போதிலும், கூட்டமைப்பின் உள்ள அதன் பங்காளிக் கட்சிகளுடன், இணைந்து செயற்படுவோம்.

இது தமிழ் அரசுக் கட்சி மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா என்று தெரியவில்லை. ஆனால், யாராவது பாரிய கூட்டணியை அமைக்க முன்வந்தால், அவர்களுடன் இணைந்து பணியாற்றுவேன்.

ஈபிஆர்எல்எவ்வுக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்கள் முழுவதும் செயலகங்கள் உள்ளன. 4000இற்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர்.

உள்ளூராட்சித் தேர்தலில், தமிழ் அரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிடப் போவதில்லை.” என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *