மேலும்

நீதிபதியை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அடையாளம் காணப்பட்டார்

CCTV-footageயாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து கடந்த சனிக்கிழமை மாலை, நல்லூரில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் செல்வராசா ஜெயந்தன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர், ‘துப்பாக்கிச் சூடு நடத்திய பிரதான சந்தேக நபர் தொடர்பான தகவல்களை காவல்துறை விசாரணைக் குழுக்கள் கண்டறிந்துள்ளன.

செல்வராசா ஜெயந்தன் என்ற 39 வயதுடைய நபரே அவர் என்று கண்டறியப்பட்டுள்ளது. இவர் 1998ஆம் ஆண்டு தொடக்கம் 2004ஆம் ஆண்டு வரை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்திருந்தார். இதன் போது அவர் ஆயுதப் பயிற்சிகளையும் பெற்றுள்ளார்.

பிரதான சந்தேக நபரின் மூத்த சகோதரரான, செல்வராசா மகிந்தன் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நேற்று இந்த தகவல்களை காவல்துறை அதிகாரிகளிடம் வெளியிட்டார்.

பிரதான சந்தேக நபர் ஏற்கனவே, 2012ஆம் ஆண்டு கோப்பாயில் நடந்த ஒரு கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபராகவும் இருக்கிறார். இந்த வழக்கு யாழ். மேல்நீதிமன்ற விசாரணையில் உள்ளது.

கோப்பாய் கொலை தொடர்பாக, செல்வராசா ஜெயந்தன் மற்றும் அவரது சகோதரர், மைத்துனர் உள்ளிட்ட 8 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்தக் கொலைக்காக, செல்வராசா ஜெயந்தன் ஏழு மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

தலைமறைவாக இருக்கும் சந்தேக நபரைக் கைது செய்வதற்கு நான்கு சிறப்பு காவல்துறைக் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர் திருமணம் செய்தவர் என்றும், பேருந்து சாரதியாக பணியாற்றி வந்தார்.  இரண்டாவது மனைவியுடன் நல்லூரில் வசித்து வந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *