மேலும்

பெற்றோலிய கூட்டுத்தாபன பணியாளர்கள் வேலைநிறுத்தம் – இருளில் மூழ்கப்போகும் சிறிலங்கா

petrol punksசிறிலங்காவின் பெற்றோலியக் கூட்டுத்தாபன பணியாளர்கள் நேற்று நள்ளிரவு தொடக்கம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளதால், பாரிய எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மூன்று கோரிக்கைகளை முன்வைத்து பெற்றோலியக் கூட்டுத்தாபனப் பணியாளர்கள் நேற்று நள்ளிரவில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குறித்தனர்.

நள்ளிரவுடன் வேலை நிறுத்தம் ஆரம்பிக்கவுள்ளதாக நேற்று மாலை தகவல் பரவியதும், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களுடன் மக்கள் குவிந்தனர். நள்ளிரவு வரையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில், நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர்.

இந்தியன் ஓயில் நிறுவனத்திடம் இருந்து திருகோணமலை சீனக்குடா எண்ணெய்க் களஞ்சியத் தொகுதிகளை மீட்க வேண்டும், அம்பாந்தோட்டை துறைமுக எண்ணெய்க் களஞ்சியத் தொகுதிகளை பெற்றோலியக் கூட்டுத் தாபனம் பொறுப்பேற்க வேண்டும், சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு ஆலையை நவீன மயப்படுத்த வேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகளை முன்வைத்தே இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொலன்னாவவில் முத்துராஜவெலவுக்கான அனைத்து எரிபொருள் விநியோகமும் நள்ளிரவுடன் நிறுத்தப்படும் என்றும், விமானங்களுக்கான எரிபொருள் வழங்குவதையும், நிறுத்தப் போவதாகவும்,  பெற்றோலியக் கூட்டுத்தாபன தொழிற்சங்க அமைப்பாளர் ராஜகருண நேற்று தெரிவித்தார்.

இன்றைக்குள் தீர்வு ஒன்று தரப்படாவிடின், கப்பலில் இருந்து எரிபொருளை இறக்கும் பணிகளையும் நிறுத்துவோம் என்றும், அவர் கூறினார்.

மேலும், மின்சார உற்பத்திக்கான எரிபொருள் விநியோகமும் நிறுத்தப்படுவதால், ஒன்று அல்லது இரண்டு நாட்களில் நாடு இருளில் மூழ்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *