மேலும்

ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலருடன் கூட்டமைப்பு பிரதிநிதிகள் சந்திப்பு

TNA-UN-Jeffry Feltman (1)சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் ஜெப்ரி பென்ட்மனை, இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

கொழும்பில் உள்ள ஐ.நா பணியகத்தில் இன்று காலை 9.30 மணியளவில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பின் போது, அரசியலமைப்பு மாற்றம், நல்லிணக்க முயற்சிகள், ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும்  விவகாரத்தில் காணப்படும் மெத்தனப் போக்கு மற்றும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

TNA-UN-Jeffry Feltman (1)

TNA-UN-Jeffry Feltman (2)

இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட இரா.சம்பந்தன்,

” பெரும்பான்மை கட்சிகளுக்கு இடையில் காணப்பட்ட போட்டியின் காரணமாக தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டு வந்துள்ளார்கள். இந்தநிலை மீண்டும் இடம்பெறுவதற்கு இடமளிக்கக் கூடாது.

தற்போது தமிழ் மக்கள் தொடர்பாக, ஐ.நா கவனம் செலுத்தியுள்ளதுடன், உதவுவதற்கும் முன்வந்துள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்திற்கு,ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இரண்டு ஆண்டுகள் காலஅவகாசம் வழங்குவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை.

எனினும், பேரவையில் சிறிலங்கா வழங்கிய உறுதி மொழிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவே காலஅவகாசம் வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணக்கம் வெளியிட்டது.

தற்போது நான்கு மாதங்கள் கடந்துள்ளன. எனினும், ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்கள் போதுமானதாக இல்லை.  துரித கதியில் முன்னேற்றங்கள் இடம்பெற வேண்டும்.

சிறிலங்கா படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகள், காணாமல் போனவர்கள் விவகாரம் மற்றும் அரசியல் கைதிகள் சம்பந்தமான விடயங்கள் குறித்தும் இன்றைய சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது“ என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *