மேலும்

மாலிக்கு அனுப்பப்படவுள்ள சிறிலங்கா படையினர் குறித்து ஐ.நா அதிகாரிகள் பேச்சு

UN-defenceமாலியில் ஐ.நா அமைதிப்படையில் சிறிலங்கா படையினரை பணியில் ஈடுபடுத்துவது தொடர்பாகவும், அமைதிப்படையினருக்கான பயிற்சிகள் தொடர்பாகவும், ஐ.நா அதிகாரிகள் நேற்று முன்தினம் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியுள்ளனர்.

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நடந்த இந்தக் கூட்டத்தில், சிறிலங்காவுக்கான ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி உனா மக் கோலியும், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பயிற்சி, அமைதிப்படையில் பணியாற்றுவதற்காக படையினரைத் தெரிவு செய்யும் முறை, பணியில் அமர்த்துவதற்கு முந்திய பயிற்சிகள், மொழிகள், சமூக, கலாசார பின்னணி,  பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகள் உள்ளிட்ட மனித உரிமைகள் பற்றிய அறிவு என்பன தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

UN-defence

ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றுவதற்காக தெரிவு செய்யப்படும் சிறிலங்கா படையினருக்கான பயிற்சித் தரத்தை அதிகரிப்பதற்குத் தேவையான வசதிகள், வளங்கள் மற்றும் ஏனைய தேவைப்படும் உதவிகளை வழங்குவதற்கும் தயாராக இருப்பதாக, ஐ.நா வதிவிட இணைப்பாளர் உனா மக் கோலியும், ஏனைய ஐ.நா அதிகாரிகளும் உறுதியளித்துள்ளனர்.

படையினரைத் தெரிவு செய்வதற்குப் பொருத்தமான முறைகள் தொடர்பாகவும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்திக்கான ஐ.நா ஆலோசகர் கீதா சபர்வால், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலர் சரத் குமார, பிரதி இராணுவ இணைப்பதிகாரி பிரிகேடியர் வீரசிங்க, மற்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சுக்களின் அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *