மேலும்

இரண்டாம் முள்ளிவாய்க்கால் – பாகம்: 05

‘ஒரு விடுதலைப் போராட்டத்துக்கு உயிரைக் கொடுக்கத் துணிந்தவனையும்   உழைப்பை கொடுப்பவனையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கக் கூடாது. உயிரைக் கொடுக்கத்துணிந்தவன் தன்னுடைய செயற்பாட்டுக்கான வெகுமதியை எதிர்பார்க்க மாட்டான். அவனுடைய எதிர்பார்ப்பு ஆகக் கூடிய பட்சம் தன்னுடைய செயற்பாட்டுக்கான அங்கீகாரம் என்ற அளவில் தான் இருக்கும். 

ஆனால் உழைப்பை கொடுப்பவன் அப்படியல்ல. அவனுடைய  எதிர்பார்ப்பு  அங்கீகாரம் என்ற அளவைத்தாண்டி பட்டம், பதவி, புகழ் என்று நீண்டதாக இருக்கும்.’

0000

புலத்தில் திறக்கப்பட்ட இரண்டாம் முள்ளிவாய்க்காலுக்கான களமுனை

0000

முள்ளிவாய்க்காலுக்கான களமுனைகளை 26.07.2006 இல் திருகோணமலை மாவிலாற்றிலும் 10.07.2007 இல் மன்னார் பண்டிவிரிச்சானிலும் சிறீலங்கா அரசாங்கம் திறந்தது. அனைவருக்கும் தெரியும். அவற்றின் நகர்வுகள் மற்றும் அவற்றின் முடிவுகள் அனைத்துமே அனைவருக்கும் தெரியும்.

ஆனால் சத்தமின்றி யுத்தமின்றி 28.06.2007 இல் பாரிசிலே விடுதலைப்புலிகளுக்கு எதிரான ஒரு களமுனை மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தால் திறக்கப்பட்டது பலருக்குத் தெரியாது.

மகிந்த ராஜபக்சவுக்கு முன் சிறீலங்காவில் ஆட்சியில் இருந்த சந்திரிகா குமாரதுங்காவின் அரசாங்கம் லக்ஸ்மன் கதிர்காமரை முன்நிறுத்தி இராஜந்திர போர்முனை ஒன்றை திறந்து விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளாக்கி வெற்றிகண்டது. ஆனால் இந்த வெற்றி விடுதலைப்புலிகளின் வளர்ச்சியையோ புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் இருந்த அவர்களது ஆதரவுத்தளத்தையோ எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.

1995இல் விடுதலைப்புலிகளுக்கு யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஏற்பட்ட தோல்விகளும், யாழ்ப்பாண இடப்பெயர்வும் புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவுத்தளத்தை சிதைக்கும் என்று சந்திரிகா அரசாங்கம் எதிர்பார்த்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்புக்கு மாறாக மக்கள் தங்களது அமோக ஆதரவை விடுதலைப்புலிகளுக்கு தந்தார்கள்.

‘விடுதலைப்புலிகள் கொலைகாரர்கள். பணம் பறிப்பவர்கள். பிள்ளை பிடிப்பவர்கள் பாசிஸ்டுகள்’ என்று ஒத்தோடிகளை வைத்து கூவி கூவி சிறீலங்கா அரசாங்கம் பிரச்சாரங்களை செய்த போதிலும் அவற்றை மக்கள் செவி மடுக்கவில்லை.

‘விடுதலைப்புலிகளின் இருப்பும் அவர்களது பலமும் தான் பௌத்த சிங்கள பேரினவாதிகளை அச்சப்பட வைத்ததுடன், அவர்களது இனச்சுத்திரிப்பு, இன ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு தடையாகவும் இருந்தது’ என்ற உண்மையை நூற்றுக்கு 80 வீதமான புலம் பெயர்ந்த மக்கள் உணர்ந்திருந்தார்கள். அதனால் சந்திரிகா அரசாங்கத்தால் அவர்கள் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியவில்லை.

சந்திரிகாவும் மகிந்தவும் ஒரே கட்சியை சேர்ந்தவர்கள் என்றாலும் இரண்டு பேருக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் இருந்தன. சந்திரிகா தனது தந்தையினதும் தாயினதும் ரஷ்ய-சீன சார்பு பாரிம்பரியத்துக்கு மாறாக மேற்குலக சார்பாளராக இருந்தார்.

ஆனால் மகிந்தவோ தன்னை உண்மையான சிறீலங்கா சுதந்திரக் கட்சி பாரம்பரியத்தில் வந்த சீன -ரஷ்ய ஆதரவாளராக காட்டிக்கொண்டார்.  ஆனால் அமெரிக்காவினதும் இந்தியாவினதும் தேவைகளை நிறைவேற்றிக் கொடுத்தார். அவர் ஒரு நல்ல நடிகர். ‘விடுதலைப் புலிகளை ஒழிக்க எந்தச் சாத்தானுடனும் நான் கூட்டுச் சேருவேன்’ என்று சொன்ன ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் -அதாவது  ஐக்கிய தேசியக் கட்சியின் உண்மையான வாரிசு அவர்தான்.

சீனா தன்னுடைய ஆபிரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைக்கான கடல்வழிப் போக்குவரத்துக்கு விடுதலைப்புலிகள் அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்று கருதியது. அமெரிக்கா இந்து சமூத்திர பிராந்தியத்தின் மீதான தனது ஆளுமைக்கு அச்சுறுத்தலான அமைப்பாக அவர்களைப் பார்த்தது. இந்தியா தனது பிராந்தியமேலாதிக்க கொள்கைக்கு தடையாக இருக்கும் அமைப்பாகவும்  தன்னுடைய போலித் தேசியவாத கொள்கைக்கு ஆப்பு வைக்கக் கூடிய அமைப்பாகவும் விடுதலைப்புலிகளை கருதியது.

உலக பெருமுதலாளித்துவ சக்திகள் இந்தியாவையும் சீனாவையும் உள்ளடக்கிய தங்களுடைய பெரும் சந்தைக்கு விடுதலைப்புலிகளின் வளர்ச்சி சிக்கலை தோற்றுவிக்கும் என்று கணிப்பிட்டன. மொத்தத்தில் உலக பெரு முதலாளித்துவ அதிகார வர்க்கம் ஒன்று சேர்ந்து மகிந்தவை முன்நிறுத்தி தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தை நடத்தி முடித்து.

இந்த யுத்தத்தை திட்டமிட்டதும் வழிநடத்தியதும் உலக உளவு அமைப்புக்களும் உலக பெருமுதலாளித்துவ அமைப்புக்களின் பொருளாதா இராணுவ கொள்கை வகுப்பு மற்றும் திட்டமிடல் அமைப்புக்களும் ஆகும்.

இதனாலேயே மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் முன்னைய ஆட்சிக்காலங்களில்  இருந்து வேறுபட்ட விதத்தில்  புதிய நிழல் யுத்த களமுனையொன்று பாரிசில் திறக்கப்பட்டது. பாரிஸ் தான் நீண்ட காலமாக விடுதலைப்புலிகளின் புலம் பெயர்ந்த ஆதரவு தளத்தை நிர்வகிக்கும் தலைமை இடமாக இருந்ததால் இந்த களமுனை இங்கு திறக்கப்பட்டது.

சந்திரிகா அரசு விடுதலைப்புலிகளுக்கு எதிரான தனது இராஜதந்திர போரை சர்வதேச நாடுகளை குறிவைத்து நடத்தியது. ஆனால் மகிந்த அரசோ புலம் பெயர்ந்த தமிழ் மக்களை குறிவைத்து இந்தப் போரை நடத்தியது.

28.06.2007 அன்று பாரிசின் 8 வது நிர்வாகப் பிரிவிலுள்ள பிரபலமான 5 நட்சத்திர தங்கும் விடுதி ஒன்றில் இந்த களமுனையை திறப்பதற்கான ஒரு நாள் சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பின் பேசு பொருள் அல்லது தலைப்பு ‘பங்கரவாதிகளின் சர்வதேச வலையமைப்பை இல்லாதொழிப்பதற்கான திட்டமிடலும் சவால்களும்’.

இந்தச் சந்திப்பில் சிறீலங்கா தரப்பில் 2 அமைச்சர்கள் 2 அதிகாரிகள் (இதில் ஒருவர் பிரித்தானியாவை சேர்ந்த சர்வதேச கொள்கை வகுப்பு மூலோபாய அமைப்பொன்றின் உறுப்பினர்) 2 இராஜதந்திரிகள் உட்பட 6 பேரும் புலம் பெயர்ந்த சிங்கள அமைப்புகளின் சார்பில் 4 பேரும் (இதில் ஒருவர் முன்னாள் ஜேவிபி உறுப்பினர்) தமிழ் ஒத்தோடிகள் 5 பேரும் கலந்து கொண்டனர்.

காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணிவரை நடைபெற்ற இந்த சந்திப்பில் முதலில் விடுதலைப்புலிகளை அழித்தொழிக்க வேண்டிய தேவை, அதற்கு சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள்  பற்றிய விளக்கம் என்பன வந்திருந்தவர்களுக்கு கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் விடுதலைப்புலிகளின் புலம் பெயர்ந்த கட்டமைப்புகள் அவற்றின் செயற்பாடுகள் அவற்றிக்கு தலைமை தாங்குபவர்கள் பற்றியும்  விடுதலைப்புலிகளை  பயங்கரவாத அமைப்பாக தடை செய்த பின்பும் அவர்களால் எப்படி செயற்பட முடிகிறது என்பவை பற்றியும் ஆராயப்பட்டது.

மதிய உணவுக்குப் பின்பு விடுதலைப்புலிகளின் ஆதரவு தளத்தை சிதைப்பதற்கு வகுக்கப்பட வேண்டிய திட்டங்கள் மற்றும் அவற்றை செயற்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.

  1. விடுதலைப்புலிகளுக்கொன்று புலம்பெயர்ந்த நாடுகள் ஒவ்வான்றிலும் மக்களை அணி திரட்டுவதிலும் அவர்களிடமிருந்து நிதியாதாரத்தை பெறுவதிலும் நீண்ட அனுபவமும் ஆற்றலும் உள்ள பல மூத்த செயற்பாட்டாளர்கள் இருக்கிறார்கள்
  2. விடுதலைப்புலிகளின் அனைத்து செயற்பாட்டாளர்களிடமும் தங்களது சக செயற்பாட்டாளரைப் பற்றி பொது இடத்தில் குறைகூறும் விமர்சிக்கும் பழக்கம் கிடையாது. விடுதலைப்புலிகளுக்கு பாதகத்தை உண்டாக்கும் எந்தக் கருத்தையும் அவர்கள் எந்த இடத்திலும் தெரிவிக்க மாட்டார்கள். அது போன்ற எந்தச் செயற்பாடுகளிலும் அவர்கள் ஈடுபடமாட்டார்கள்;.
  3. விடுதலைப் புலிகளின் ஆதரவுத்தளம் என்பது தமிழ் சங்கங்கள் தமிழ்சோலை மற்றும் தமிழாலயம் முதலான பாடசாலைகள், விளையாட்டுக்கழகங்கள், ஊடக கட்டமைப்பு என்பவற்றிலேயே தங்கியிருக்கிறது.
  4. ஐரோப்பாவில் உள்ள விடுதலைப்புலிகளின் இராஜதந்திர செயற்பாடுகள் ஜெனிவாவை தளங்கொண்டே இயங்குகின்றன.

என்கின்ற விடயங்கள் அட்டவணைப்படுத்தப்பட்டு இவற்றை எப்படி உடைப்பது அல்லது மாற்றி அமைப்பது என்று ஆராயப்பட்டது.

  1. மூத்த செயற்பாட்டளார்களை மக்களிடம் இருந்து அந்நியப் படுத்தி மக்கள் அவர்களை வெறுக்கும் அல்லது அவர்களுடன் தொடர்பு கொள்ள அஞ்சும் சூழ்நிலையை உருவாக்குவது. இதன் மூலம் மக்களை அணிதிரட்டும் நிதிமூலங்களை திரட்டும் விடுதலைப் புலிகளின் ஆற்றலை கணிசமாக குறைக்கலாம் அல்லது மட்டுப்படுத்தலாம் என்று கூறப்பட்டது. இதற்கு இந்த மூத்த செயற்பாட்டாளர்கள் மீது தொடர்சியாக பலமுனைகளில் பொய்யான தகவல்களை உள்ளடக்கிய அவதூறு பரப்பரை மேற்கொள்வது.
  2. முதல் செயற்பாட்டின் தொடர்ச்சியாக விடுதலைப்புலிகள் இயக்க செயற்பாட்டாளர்கள் தங்களது சக செயற்பாட்டாளர்களை அல்லது முன்னாள் செயற்பாட்டாளர்களை மக்கள் மத்தியில் குறிப்பாக பொது வெளியில் விமர்சிப்பது தூற்றுவது போன்ற செயற்பாட்டை செய்யும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைப்பது- இதை தியாகி துரோகி என்ற ஒரு நீண்ட அரசியல் செயல் திட்டமாக நடைமுறைப்படுத்துவது. இதன் மூலம் விடுதலைப்புலிகள் பற்றி மக்கள் மத்தியில் இருக்கும் ஒழுக்கமானவர்கள் கட்டுப்பாடானவர்கள் என்ற பிம்பத்தை உடைப்பது.
  3. உப அமைப்புக்கள் என்று விடுதலைப்புலிகளால் அழைக்கப்படும் தமிழ் பாடசாலைகள் தமிழ் சங்கங்கள் விளையாட்டுக்கழகங்கள் என்பவற்றுக்குள் ‘தலைவர் வாழ்க போராட்டம் வாழ்க’ என்று அதி தீவிர தேசியம் பேசிக்கொண்டு ஊடுருவி அவற்றுக்குள் தியாகி துரோகி அரசியலை புகுத்துவது. குறிப்பாக தமிழ் பாடசாலைகளில் கல்வி கற்கும் இளவயதினர் மற்றும் குழந்தைகளின் மனங்களில் இந்த தியாகி துரோகி அரசியலை படிப்படியாக திணிப்பது. இதன் மூலம் தமிழ் தேசிய செயற்பாடுகளில் இளைய தலைமுறையின் ஒன்று பட்ட துடிப்பான செயற்பாடுகளை பிளவு படுத்தி திசைதிருப்பி வலுவிழக்கச் செய்வது.
  4. சுவிசில் மக்களின் வலுவான ஆதரவுடன் இடம்பெற்று வந்த விடுதலைப்புலிகளின் இராஜதந்திர செயற்பாட்டுத் தளத்தை ஐரோப்பிய ஒன்றித்தின் ஆதரவைப் பெறுவதற்கு சுவிசில் வேலை செய்து ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி, பெல்ஜியத் தலைநகருக்கு அந்த தளத்தை மாற்றுமாறு ஆலோசனை வழங்குவது. தமிழ் மக்கள் குறைவாக வாழும் அந்த நாட்டில் இந்தச் செயற்பாடுகளை முடக்குவதற்கான வேலைகளை செய்வது.
  5. இந்த நான்கு வேலைத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு சமூக வலைத்தளங்களையும் ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் பத்தி எழுத்தாளர்களையும் இனங்கண்டு பயன்படுத்துவது.

ஆகிய முடிவுகளுடன் இந்த ஒரு நாள் சந்திப்பு நிறைவுற்றது.

மகிந்தவுக்கு எதிரான புலம்பெயர்ந்த சிங்கள ஊடகவியலாளர்கள் மூலமாக பெறப்பட்ட இந்தத் தகவல்கள் ஒன்றுக்கு இரண்டு தடவை வெவ்வேறு தரப்புகள் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டு தகுந்த ஆதாரங்களுடன் ஒரு அறிக்கையாக தொகுக்கப்பட்டு 15.07.2007 அன்று தேசியத்தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

17.07.2007 அன்று இந்த அறிக்கை வன்னிக்கு கிடைத்ததாகவும் அதை தேசியத்தலைவரிடம் சேர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதை பெற்றுக்கொண்டவர்கள் அதை அனுப்பியவர்களுக்கு தகவல் தெரிவித்திருந்தனர்.

– சிவா சின்னப்பொடி

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *