மேலும்

சிறிலங்காவில் நீதிக்கான தருணம் – ‘நியூயோர்க் ரைம்ஸ்’ ஆசிரியர் தலையங்கம்

New-York-Timesஒரு ஆண்டிற்கு முன்னர், சிறிலங்காவிலுள்ள வாக்காளர்கள் தமக்கான புதிய அதிபரைத் தெரிவு செய்வதற்காக ஒன்றுகூடினார்.

இதன் மூலம் தமது நாட்டில் 2009ல் நிறைவுக்கு கொண்டு வரப்பட்ட உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்ற பல்வேறு மீறல்கள் தொடர்பாக பொறுப்புக் கூறுவதுடன் வடுக்களை ஆற்றுவதற்கான ஒரு புதிய அரசாங்கத்தைத் தெரிவு செய்ய முடியும் என வாக்காளர் அதீத நம்பிக்கை கொண்டிருந்தனர்.

இதன்மூலம் சிறிலங்காவின் புதிய அதிபராகத் தெரிவு செய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேன மக்களின் நம்பிக்கைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.

ஆனால் சிறிலங்காவில் தற்போதும் நிலவும் போர் வடுக்களை ஆற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. கடந்த ஒக்ரோபரில் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் தீர்மானிக்கப்பட்டது போன்று சிறிலங்கா சிறப்பு கலப்பு நீதிப்பொறிமுறையை உருவாக்கும் வரை போரால் ஏற்பட்ட வடுக்கள் தீர்க்கப்பட முடியாது.

இது தொடர்பில் தனது அரசாங்கம் விரைந்து செயற்பட முடியாது என சிறிசேன குறிப்பிடுகிறார். இவரது இந்தக் கூற்று ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகும். ஏனெனில் உள்நாட்டு யுத்தத்தின் போது தமிழ்ப் புலிகளும் சிறிலங்கா இராணுவத்தினரும் பல்வேறு மீறல்களைப் புரிந்தனர். ஆகவே இவ்வாறான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் உடனடியாக விசாரணைக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.

சிறிசேன சிறிலங்காவின் ஆட்சியைப் பொறுப்பெடுத்த கடந்த ஓராண்டில் இவர் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கான போதியளவு காலஅவகாசத்தைப் பெற்றுள்ளார். இவர் தன்னால் வாக்குறுதி வழங்கப்பட்டவாறு நாடாளுமன்றத் தேர்தலை நடத்தினார். குடும்ப ஆட்சியை ஒழித்துள்ளார். தனக்கு முன்னாள் நாட்டை ஆட்சி செய்த மகிந்த ராஜபக்சவின் அதிகாரத்துவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தார்.

சிறிலங்காவின் சிறுபான்மை சமூகங்களான தமிழ் மற்றும் முஸ்லீம் சமூகத்தவர்களை உள்ளடக்கி அரசியல் சீர்திருத்தங்களை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளார். இத்துடன் மட்டுமல்லாது, அரசியற் கைதிகளை விடுவித்தல் மற்றும் கருத்துச் சுதந்திரம் போன்றவற்றிலும் அதிபர் சிறிசேன பல்வேறு முன்னேற்றகரமான நகர்வுகளை முன்னெடுத்துள்ளார்.

சீனாவை நோக்கிய ராஜபக்ச அரசாங்கத்தின் வெளியுறவுக் கோட்பாட்டை சிறிசேன முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார். அதுட்டுமல்லாது இந்தியா மற்றும் அமெரிக்காவுடன் சாதகமான வெளியுறவுக் கோட்பாடுகளை மீளவும் நிறுவியுள்ளார். உத்தேச புதிய அரசியல் யாப்பை வரைவதற்கான பணியை சிறிசேன இம்மாதம் ஆரம்பித்துள்ளார்.

சிறிசேனவின் இத்தகைய நகர்வுகள் வரவேற்கப்பட வேண்டியவையாகும். ஆனால் இவை நீதிப்பொறிமுறைக்கு பதிலாக ஏற்றுக்கொள்ள முடியாது.

சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெறும் சித்திரவதைகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

போரின் இறுதிக்கட்டத்தில் 40,000 இற்கும் மேற்பட்ட தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு கட்டளைகளை வழங்கிய சிறிலங்கா இராணுவ கட்டளைத் தளபதிகள் தற்போதும் உயர் பதவிகள் வகிக்கின்றனர். இவர்களுக்கு தற்போதும் பதவி உயர்வுகள் வழங்கப்படுகின்றன. சிங்கள தேசியவாதிகளால் மேற்கொள்ளப்படும் முஸ்லீம் எதிர்ப்பு நடவடிக்கைகள் சிறிலங்காவின் இனக் கட்டமைப்பை அச்சுறுத்தலிற்கு உள்ளாக்குகின்றன.

இறுதியாக, போர்க்குற்றங்கள் தொடர்பாக சிறிலங்கா உள்நாட்டில் சிறப்பு நீதிமன்றம் ஒன்றை உருவாக்குவதற்கான அனுமதியை ஐ.நா வழங்கியிருந்தது.

ஆகவே ஐக்கிய நாடுகள் சபைக்கும் தனது சொந்த நாட்டு மக்களுக்கு சிறிலங்கா அரசாங்கத்தால் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கடப்பாட்டையும் தார்மீக கடமையையும் விரைந்து நிறைவேற்ற வேண்டிய தேவை சிறிசேனவுக்கு உண்டு.

வழிமூலம் – New york Times
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *