மேலும்

காணாமற்போனோரின் கதி என்ன? – 12 மாதங்களுக்குள் அறியத் தருவாராம் பரணகம

Maxwell Parakrama Paranagamaதமது ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை இன்னும் 12 மாதங்களுக்கு நீடித்தால், காணாமற்போனோர் தொடர்பான 20 ஆயிரம் முறைப்பாடுகளுக்கு நிச்சயம் தீர்வு பெற்றுக் கொடுப்போம் என்று தெரிவித்துள்ளார் காணாமல்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வல் பரணகம.

“ காணாமற்போனோர் குறித்து விசாரணை நடத்தும் ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை மேலும் 12 மாதங்களுக்கு நீடிக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்திருக்கிறோம். இன்னும் இரண்டு வாரங்களில் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்படுமென எதிர்பார்க்கிறோம்.

ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டவுடன் யாழ்ப்பாணத்திலும், அதையடுத்து  கிழக்கு மாகாணத்திலும், விசாரணை அமர்வுகளை நடத்தவிருக்கிறோம்.

கிழக்கு மாகாணத்தில் விசாரணை அமர்வுகளை நடத்தும்போது திருகோணமலை மாவட்டத்தில் செயற்பட்டதாக கூறப்படும் இரகசிய முகாம் குறித்தும் விரிவான விசாரணைகளை நடத்துவதற்கும் எதிர்பார்க்கிறோம்.

குறித்த இரகசிய முகாம் எனக்கூறப்படும் முகாமுக்கு நேரில் சென்று அங்குள்ள அதிகாரிகளுடன் பேச்சு நடத்தவும், எமது விசாரணையாளர்களை அங்கு அழைத்து சென்று நிலைமைகளை ஆராயவும் திட்டமிட்டுள்ளோம்.

எமது ஆணைக்குழுவிற்கு இந்த இரகசிய முகாம் தொடர்பில் முறைப்பாடு செய்தால் நாம் அங்கு செல்வது இலகுவாக இருக்கும். இல்லாவிடினும் நாங்கள் அந்த முகாமுக்க செல்வதற்கு நடவடிக்கை எடுப்போம்.

எமது ஆணைக்குழுவின் செயற்பாடுகளை நிறுத்துமாறு ஐ.நா உள்ளிட்ட அனைத்துலக அமைப்புக்கள் கூறியுள்ளதாக அறிகிறோம்.

ஆனால் ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை இன்னும் 12 மாதங்களினால் அரசாங்கம் நீடிக்கும் பட்சத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காணாமற்போனோர் பிரச்சினைகளுக்கு நாங்கள் நிச்சயம் தீர்வைப் பெற்றுக்கொடுப்போம்.

காணாமற்போனவர்கள், இறந்து விட்டனரா அல்லது உயிரோடு இருக்கிறார்களா என்பதை எம்மால் கூறமுடியும்.

ஒருவேளை இந்த இரண்டு முடிவுகளுக்கும் வர முடியாவிடின் அது தொடர்பில் மேலதிகமாக செயற்படுவதற்கான தேவையையும் நாம் முன்வைக்கலாம்.

காணாமற்போனவர்கள் எங்கு வைத்து யாரால் அழைத்து செல்லப்பட்டனர் என்ற விபரங்களை நிச்சயம் நாங்கள் 12 மாதங்களில் காணாமற்போனோரின் உறவுகளுக்கு பெற்றுக்கொடுப்போம் .

அத்துடன் கடத்தப்பட்டவர்கள் எங்கு வைத்து கடத்தப்பட்டார்கள், யாரால் கடத்தப்பட்டார்கள் என்ற விபரங்களைக் கூட எம்மால் 12 மாதங்களில் வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கும்.

இவ்வாறு காணாமற்போனோர் விவகாரத்திற்கு தீர்வை வழங்குவதற்கு எதிர்பார்க்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

ஒரு கருத்து “காணாமற்போனோரின் கதி என்ன? – 12 மாதங்களுக்குள் அறியத் தருவாராம் பரணகம”

  1. Sivarajah Vathsala Kanagasabai
    Sivarajah Vathsala Kanagasabai says:

    வேதாளமும் முருக்கமரமும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *