மேலும்

எந்தக் காரணம் கொண்டும் வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதியேன் – சிறிலங்கா அதிபர் சூளுரை

maithripala-srisenaபோர்க்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள எந்தக் காரணம் கொண்டும் வெளிநாடுகளில் இருந்து நீதிபதிகளை கொண்டு வரமாட்டேன் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

பிபிசி செய்திச் சேவைக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே சிறிலங்கா அதிபர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கேள்வி : போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்படும் என நீங்கள் அதிகாரத்திற்கு வந்தவுடன் கூறப்பட்டது. ஆனால் ஒரு ஆண்டு கடந்து விட்டது. எனினும் இதுவரை எந்தவொரு தயார் நிலையையும் நாம் காணவில்லை.

பதில் : மனித உரிமை மீறல் குறித்து குற்றச்சாட்டே காணப்படுகிறது. ஐ.நா. மனித உரிமை பேரவையில் இது தொடர்பில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது அதற்கான அடிப்படை அடித்தளத்தை நாங்கள் தயாரித்து வருகிறோம். அந்த இடத்தில் ஐ.நா. மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட யோசனையில் எமக்குத் தேவையான எம்மால் நிறைவேற்றக் கூடிய பரிந்துரைகளை நாம் பரிசீலிக்க வேண்டும். அவற்றில் எம்மால் எடுக்க முடியாத சில விடயங்கள் உள்ளனவா என பார்க்க வேண்டும்.

இந்த விடயங்கள் தொடர்பான விசாரணைக்கு நாம் இணக்கம் தெரிவித்துள்ளோம். அந்த விசாரணைகளை நியாயமான ரீதியில் நடத்த நாம் உடன்பட்டுள்ளோம். உள்ளக விசாரணை பொறிமுறை ஊடாக இந்த விசாரணைகளை நடத்த நான் இணக்கம் வெளியிட்டுள்ளேன். அது மட்டுமன்றி இந்த விசாரணைகள் எமது அரசியலமைப்புக்கு உட்பட்டவாறே முன்னெடுக்கப்படும். எக்காரணம் கொண்டும் வெளிநாடுகளிலிருந்து நீதிபதிகளை கொண்டு வந்து உள்ளக விசாரணை நடத்தும் நோக்கம் எனக்கில்லை. அதற்கு நான் ஒருபோதும் உடன்படமாட்டேன்.

அரசியலமைப்புக்கு உட்பட்டு சட்ட திட்டங்களுக்கு அமைவாக உள்ளக விசாரணை பொறிமுறை ஊடாக இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் நடத்தப்படும். இந்த நாட்டின் நீதித் துறையில் எனக்கு நம்பிக்கை உள்ளது. விசாரணைப் பிரிவிலுள்ள அதிகாரிகள் தொடர்பில் நம்பிக்கை உள்ளது. இதற்கு எவரையும் இறக்குமதி செய்வதற்கு அவசியமில்லை. எமது நாட்டிலுள்ள இந்த பிரச்சினையை எமது நாட்டு மக்களே தீர்க்க வேண்டும்.

கேள்வி : ஆனால், இந்த விசாரணை செயற்பாட்டில் அனைத்துலகம்  தலையீடு செய்வதற்கு எதிர்பார்க்கிறது. அது தொடர்பில்.?

பதில் : இல்லை. இல்லை. அனைத்துலக தலையீட்டுக்கு நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.

கேள்வி : ஐ.நா. மனித உரிமை பேரவை கலப்பு நீதிமன்றம் குறித்தும் பேசப்பட்டிருந்தது?

பதில் : இல்லை. இந்த செயற்பாட்டுக்கு அனைத்துலக தலையீடு தேவையில்லை. அதனை நான் முழுமையாக நிராகரிக்கிறேன். எந்தவொரு பிரச்சினையையும் எமது நாட்டிலுள்ளவர்களைக் கொண்டு தீர்க்க முடியும். அதற்கு தேவையான கல்வியாளர்கள் துறைசார் நிபுணர்கள் எம்மிடம் உள்ளனர்.

நாட்டு பிரச்சினையை தீர்ப்பதற்கு அனைத்துலக தலையீடு தேவையில்லை. ஆனால், உண்மையில் எமது நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதே அனைத்துலகத்தின் தேவையாக உள்ளது. உள்ளக அரசியலுக்கோ நாட்டை ஆட்சி செய்வதிலோ நிர்வகிப்பதிலோ அனைத்துலக  உதவி தேவையில்லை. அவற்றை செய்வதற்கான திறமையானவர்கள் எமது நாட்டில் உள்ளனர்.

கேள்வி : எனினும் நீங்கள் சொல்லுகின்ற இந்த உள்ளக விசாரணை ஒரு ஆண்டு கடந்தும் இன்னும் ஆரம்பிக்கப்பட வில்லை. அரசாங்கம் காலம் கடத்தும் செயற்பாட்டில் ஈடுபடுகின்றதா?

பதில் : அவ்வாறு இல்லை. நாம் அடிப்படை வேலைத் திட்டங்களை மேற்கொண்டு செயற்பட்டு வருகிறோம். இவை 24 மணி நேரத்தில் செய்யக்கூடியவை அல்ல.  உலகில் வேறு நாடுகள் எவ்வாறு செயற்பட்டன என்று நாம் பார்க்க வேண்டும். அவற்றுக்கு எவ்வளவு காலம் எடுத்தது என்பதை பார்க்க வேண்டும். ஆனால், நாம் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும்.

கேள்வி : அப்படியானால், கால அட்டவணை குறித்து கூற முடியாதா?

பதில் : அவ்வாறு கூறமுடியாது. ஆனால், இதனை செய்வோமென உறுதி கூறுகிறேன். கால அட்டவணைக்கு ஏற்ப ஒன்றும் செய்ய முடியாது.

கேள்வி : எனினும் தமிழ் மக்கள் பார்வையில் இது ஒரு அநீதியான விடயமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக காலத்தை இழுத்தடிப்பது?

பதில் : இது தமிழ் மக்களின் பிரச்சினை என்றும் மட்டும் கூற முடியாது.

கேள்வி : குற்றச் சாட்டுக்கள் இராணுவத்திற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளனவே?.

பதில் : ஐ.நா. அறிக்கையில் கூட எவரது பெயர்களும் குறிப்பிடப்படவில்லை. இராணுவத்திற்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டால் அதிலிருந்து நாம் விடுபட வேண்டும். என்ன நடந்ததென்பதை நாம் அறிய வேண்டும். தவறு இடம்பெற்றிருந்தால் அதற்கு பொறுப்புக் கூற வேண்டும். ஆனால், அதற்கு முழு இராணுவமும் பொறுப்புக் கூற முடியாது.

கேள்வி : இராணுவத்தில் தவறு செய்தவர்கள் இருந்தால் தண்டனை அளிக்க தயாரா?

பதில் : விசாரணையின் பின்னர் தவறு இழைக்கப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.

கேள்வி : அரசாங்கம் இதனை இழுத்தடிப்பதாக அனைத்துலகம் கூறுகிறது. இது தொடர்பில்?

பதில் : அனைத்துலகம் அவ்வாறு எதனையும் கூறவில்லை. ஒருவேளை புலிகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் அவ்வாறு கூறலாம். ஐ.நா.வும் அவ்வாறு கூறவில்லை.

கேள்வி : இந்த விடயத்தில் ஜூன் மாதம் முன்னேற்றத்தை எதிர்பார்ப்பதாக பிரித்தானியா கூறுகிறதே?

பதில் : அது அவர்களின் கருத்தாகும். எமது நாட்டின் இறைமைக்கு யாரும் எதனையும் கூற முடியாது. ஆனால், கருத்து வெளியிடலாம்.

கேள்வி : உங்களை கொல்ல வந்த குற்றவாளியை நீங்கள் விடுவித்தீர்கள். உலகம் உங்களை பாராட்டியது. அது குறித்து,?

பதில் : என்னை கொல்ல வந்தவர் பத்து ஆண்டுசிறைத்தண்டனையை கடந்த ஜூன் மாதம் பெற்றார். நான் பௌத்தன் என்ற ரீதியிலேயே அதனை செய்தேன். சமாதானத்துக்காக நாம் இவ்வாறு ஒன்றிணைய முடியாதா? என்ற செய்தியையும் முன்வைக்க இவ்வாறு செய்தேன். சிலர் இதனை சரி என்கின்றனர். சிலர் எதிர்க்கின்றனர். கடந்த அரசாங்கத்தில் பிள்ளையான் முதலமைச்சரானார். கே.பி.சுதந்திரமாக இருக்கிறார். இவர்கள் புலிகள் அமைப்பின் உயர் தலைவர்கள்.

கேள்வி : ஏனைய அரசியல் சிறைக் கைதிகள் கவலையாக உள்ளனரே?

பதில் : ஏனைய சிறைக் கைதிகள் குறித்தும் நாம் செயற்பட்டு வருகிறோம். ஒரு தொகுதியை விடுதலை செய்தோம். நீதிமன்றத்தின் இணக்கப்பாடும் இதற்கு அவசியம்.

கேள்வி : உங்கள் ஆட்சியிலும் தமிழ் மக்கள் சித்திரைவதைக்கு உட்படுவதாக அனைத்துலக அறிக்கைகள் கூறுகின்றன?

பதில்: அதனை முழுமையாக நிராகரிக்கி றேன். புலி ஆதரவாளர்களே இவ்வாறு கூறுகின்றனர். அவ்வாறு எதுவும் இந்த நாட்டில் இல்லை. புலி தொடர்பான கனவு காண்பவர்கள் கடலுக்கு அப்பால் உள்ளனர். அவர்கள் இவ்வாறு பேசுகின்றனர்.

கேள்வி : இது தொடர்பில் ஒளிப்படங்கள் வெளியிடப்பட்டிருந்தன விசாரிக்கலாம் தானே?

பதில்: ஒளிப்படங்கள் இந்த யுகத்தில் எவ்வாறும் எடுக்கப்படலாம். ஆனால் தேவையெனின் விசாரணை நடத்தலாம். கோரிக்கை விடுத்தால் விசாரணை நடத்தலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *