அடுத்த கைது கோட்டா தான்- அடித்துச் சொல்கிறார் வீரவன்ச
அடுத்ததாக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை கைது செய்ய முயற்சிகள் நடந்து வருவதாக, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் அரச புலனாய்வுச் சேவை தலைவர் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கோட்டாபய ராஜபக்சவும் கைது செய்யப்படவுள்ளதாக அவர் நேற்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
“சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டதைக் கொண்டு, அவர்களின் அடுத்த இலக்காக கோட்டாபய ராஜபக்சவே இருக்கிறார்.
ஈஸ்டர் தாக்குதல்களுக்கு மூளையாகச் செயற்பட்ட சஹ்ரான் காசிம் போன்ற ஒருவர், தீவிர சிங்கள பௌத்தராக அறியப்படும் கோட்டாபய ராஜபக்சவை அதிபராக்க தனது உயிரைத் தியாகம் செய்வார்களா? இது என்ன முட்டாள்தனம்?” என்று விமல் வீரவன்ச கேள்வி எழுப்பினார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் உண்மையான குற்றவாளிகளைப் பாதுகாக்கும் அதேவேளையில், தமிழ் புலம்பெயர்ந்தோரை திருப்திப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
“சஹ்ரானுடன் தொடர்புகளைப் பேணியதாக சாலே மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
புலனாய்வுத்துறை அதிகாரிகள் சஹ்ரான்கள் மற்றும் பிரபாகரன்களுடன் மட்டுமல்ல, அனைவருடனும் தொடர்பு கொள்கிறார்கள்.
தீவிரவாத நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தவுடன் சஹ்ரானை கண்காணிக்கத் தொடங்கியது புலனாய்வுத்துறைப் பிரிவுதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இப்போது நடப்பது ஒரு பெரிய துரோகம். இது ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் உண்மையான குற்றவாளிகளைப் பாதுகாக்கும் அதே வேளையில் தமிழ் புலம்பெயர்ந்தோரை திருப்திப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது,” என்றும் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.
