மேலும்

நாங்கள் ஒருபோதும் இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்ல- ரில்வின் சில்வா

நாங்கள் ஒருபோதும் இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்ல, அப்போதைய இந்திய அரசாங்கத்தை மட்டுமே எதிர்த்தோம் என்று ஜேவிபி பொதுச்செயலர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

அண்மையில் தனது முதல் இந்திய பயணத்தை முடித்த ஜேவிபி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, “சண்டே டைம்ஸ்“ இற்கு வழங்கியுள்ள செவ்வியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி: நீங்கள் ஏன் இந்தியா செல்ல முடிவு செய்தீர்கள்?

பதில்: நான் செல்வதற்கு முடிவு செய்யவில்லை. இந்திய கலாசார உறவுகளுக்கான சபையின் சிறப்பு பார்வையாளர்கள் திட்டத்தில், பங்கேற்க இந்திய தூதரகம் மூலம் எனக்கு அழைப்பு வந்தது. இது எனது முதல் இந்தியப் பயணம்.

கேள்வி: அவர்கள் நிகழ்ச்சி நிரலை உருவாக்கினார்களா, அல்லது நீங்கள் பார்வையிட இடங்களைத் தேர்ந்தெடுத்தீர்களா?

பதில்: அவர்கள்தான் அந்தத் திட்டத்தை உருவாக்கினார்கள், ஆனால் எனக்கு ஏதேனும் விருப்பத்தேர்வுகள் உள்ளதா என்று கேட்டார்கள். நான் கேரளாவுக்குச் செல்ல விரும்புவதாகச் சொன்னேன், ஏனெனில் அது சிறிலங்காவைப் போலவே இருப்பதாக உணர்ந்தேன்.

கேள்வி: நீங்கள் அமுல் கூட்டுறவு நிறுவனத்தைப் பார்வையிட்டீர்கள். முந்தைய அரசாங்கம் அமுலுடன் மில்கோ மற்றும் தேசிய கால்நடை அபிவிருத்தி சபையை நிர்வகிப்பதற்கு கையெழுத்திட்ட உடன்பாட்டை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முடிவில் உங்கள் பயணம் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்தியதா?

பதில்: இந்தியாவின் வளர்ச்சியை, குறிப்பாக பல துறைகளில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை வெளிப்படுத்த இந்த சுற்றுப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. பால் பண்ணையாளர்களின் நலனுக்காக தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட ஒரு இடமாக அமுல் இருந்தது. இது அவர்களின் வாழ்க்கைத் தரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது.

சிறிலங்காவில் பால் பண்ணைத் துறை அரசாங்கக் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று இந்திய அரசாங்கத்துடன் நாங்கள் வெளிப்படையாகக் கூறியுள்ளோம், ஆனால் இந்தத் துறையை மேம்படுத்துவதற்கான உதவியைப் பெற, குறிப்பாக இந்தத் துறைக்கு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த, நாங்கள் தயாராக இருக்கிறோம்,

கேள்வி: இந்திய விரோத நிலையில் இருந்த உங்கள் கட்சி, தலைகீழாக மாறி, இந்தியாவுடன் மிக நெருக்கமாக இருக்கத் தீர்மானித்துள்ளதாக  பரவலாகக் கூறப்படுகிறதே?

பதில்: நாங்கள் ஒருபோதும் இந்தியாவை எதிர்க்கவில்லை. நாங்கள் ராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய அரசாங்கத்தையும், சிறிலங்காவில் ஜே.ஆர். ஜயவர்தன அரசாங்கத்தையும், அவர்கள் பின்பற்றிய அரசியல் கொள்கைகளையும் தான் எதிர்த்தோம். எனவே, ராஜீவ் காந்தி மற்றும் ஜே.ஆர். ஜயவர்தன அரசாங்கங்களை நாங்கள் எதிர்த்து செயற்பட்டோம்.

இது இந்திய-சிறிலங்கா உடன்பாட்டின் விளைவாக  நடந்தது, இது இன்றும் நடக்கக் கூடாத ஒன்று என்று நாங்கள் கூறுகிறோம். அது 38 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு, இப்போது உலகம் மாறிவிட்டது. இந்தியா மாறிவிட்டது, நாமும் மாறிவிட்டோம். எதிர்கால உறவுகளுக்கு கடந்த காலத்தை நாம் ஒரு தடையாக மாற்ற வேண்டியதில்லை.

இந்த வாதத்தின்படி நாம் சென்றால், பிரித்தானியாவுடனும் நாம் தொடர்பு கொள்ள முடியாது. அவர்கள் எம்மை அடிமைப்படுத்தினர்; அவர்கள் 1815 கிளர்ச்சியை அடக்கினர், ஆனால் நாம் முன்னேறிவிட்டோம். வரலாறு என்பது வரலாறு, நாம் அனைவரும் அதிலிருந்து கற்றுக்கொண்டோம். நிகழ்காலத்திற்கு ஏற்ப நாம் செயற்பட வேண்டும். கடந்த காலத்தில் வாழ்வது தவறு.

கேள்வி: உங்கள் கட்சியின் இந்திய எதிர்ப்பு நிலைப்பாடு, குறிப்பாக 1988-90 காலகட்டத்தில், ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றி, பொதுச் சொத்துக்களை அழிப்பதைத் தடுத்திருக்க முடியுமா?

பதில்: அந்த அழிவை ஜே.ஆர். ஜயவர்த்தன தடுத்திருக்கலாம். அவர் தனது அமைச்சரவைக்குத் தெரிவிக்காமலும், பொதுமக்களை இருளில் மறைத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் இருந்திருந்தால், இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.

அவரது அமைச்சரவை அமைச்சரான காமினி ஜெயசூரிய, எதிர்ப்புத் தெரிவித்து பதவி விலகினார்.மக்கள் உடன்பாட்டிற்கு எதிராக அமைதியாகப் போராடினர். ஆனால் ஜே.ஆர். ஜயவர்தனவின் அரசாங்கம்தான் போராட்டக்காரர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு 100க்கும் மேற்பட்டவர்களைச் சுட்டுக் கொன்றதன் மூலம் அதை வன்முறைப் போராட்டமாக மாற்றியது.

கேள்வி: அரசாங்க நடவடிக்கைகளுக்கு உங்கள் கட்சி பதிலளித்த விதம் குறித்து உங்களுக்கும் கட்சிக்கும் ஏதேனும் வருத்தம் உள்ளதா?

பதில்: ஐசக் நியூட்டன் கூட ‘ஒவ்வொரு செயலுக்கும் சமமான மற்றும் எதிரான தாக்கம் உண்டு’ என்று கூறியுள்ளார். நாங்கள் செயல்படவில்லை. நாங்கள் எதிர்வினையாற்றினோம். 1983 ஆம் ஆண்டு கலவரத்தில் ஈடுபட்டோம் என்ற தவறான குற்றச்சாட்டின் கீழ் எங்கள் கட்சி தடை செய்யப்படாவிட்டால், எங்கள் கட்சி தலைமறைவாகி அரசியலில் ஈடுபட வேண்டிய அவசியமில்லை.

தடை செய்யப்படாவிட்டால், நாங்கள் வெளிப்படையாக அரசியலில் ஈடுபட்டிருப்போம். அண்மைய ஆண்டுகளில் செய்தது போல, நாங்கள் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்திருப்போம், ஆனால் அந்த உரிமை எங்களுக்கு மறுக்கப்பட்டது.

நடந்ததற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டியது அவர்கள்தான், நாங்கள் அல்ல. அவர்கள் எந்த வருத்தமும் காட்டவில்லை என்றால், நாங்கள் ஏன்? நடந்ததற்கு வருத்தம் தெரிவிக்கக்கூடாது என்று நாங்கள் நம்புகிறோம், ஆனால் அது நடந்து விட்டது. நாங்கள் பலமுறை இதைச் சொன்னோம்: நடந்ததற்குப் பொறுப்பு நாங்கள் அல்ல, அந்தக் கால அரசாங்கத்திடம் உள்ளது என்று.

ஜே.ஆரின் அரசாங்கம் அதன் எதிரிகளில் யாரையும் விட்டுவைக்கவில்லை. எங்களால் முடிந்த ஒரே வழியில் நாங்கள் எதிர்வினையாற்றினோம். நடக்கக்கூடாத சில விடயங்கள் நடந்திருந்தால், நாங்கள் வருத்தப்படுகிறோம். ஆனால் அந்த நேரத்தில் நடந்ததற்கு வருத்தப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியில்இதுவரை யாரும் கூறவில்லை.

கேள்வி: 1983 இல் நடந்ததற்கு ஜேவிபி எந்த வகையிலும் ஒரு தரப்பாக இருந்ததா? தமிழர் எதிர்ப்பு படுகொலை?

பதில்: நாங்கள் எந்த வகையிலும் ஈடுபட்டிருந்தால், எங்களுக்கு எதிராக குறைந்தபட்சம் ஒரு நீதிமன்ற வழக்கு இருந்திருக்க வேண்டும். கலவரத்தை உருவாக்கியதும், அதைப் பயன்படுத்தி சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நவ சமசமாஜக் கட்சி உடன் இணைந்து ஜேவிபியை தடை செய்ததும் ஐக்கிய தேசியக் கட்சி தான் என்பது தெளிவாகிறது.

கேள்வி: ஜேவிபி இந்திய-சீன உறவுகளை எவ்வாறு சமநிலைப்படுத்துகிறது?

பதில்: எங்கள் வெளியுறவுக் கொள்கை தெளிவாக உள்ளது. நாங்கள் எந்த நாட்டையும் ஏமாற்றவோ பொய் சொல்லவோமாட்டோம், எங்கள் நடவடிக்கைகள் நேர்நோக்கானது. இந்தியா எங்கள் அண்டை நாடு, எங்களுக்கு நெருக்கமான உறவுகள் உள்ளன. அதே வழியில், சீனா எங்கள் நண்பர். பாகிஸ்தானும் பங்களாதேஷும் எங்கள் நண்பர்கள்.

கொழும்பில் பாகிஸ்தான்-இந்தியா துடுப்பாட்டப் போட்டியை நடத்துவதில் கிடைத்த வெற்றி, எமது வெளியுறவுக் கொள்கை வெற்றிகரமாக உள்ளது என்பதையும், ஒரு நாட்டை மற்றொரு நாட்டிற்கு காட்டிக் கொடுக்கமாட்டோம் என்பதையும் காட்டுகிறது. தற்போதைய சகாப்தத்திற்கு ஏற்ற சிறந்த வெளியுறவுக் கொள்கை இது.

கேள்வி: இந்தியா மற்றும் சீனா உறவுகளை சமநிலைப்படுத்துவதில் தடைகள் இருந்ததா?

பதில்: இரு நாடுகளையும் நண்பர்கள் என்று நாங்கள் கருதுவதால் எந்த தடைகளும் இல்லை, மேலும் தேவைப்படும் நேரத்தில் இருவரும் எங்களுக்கு உதவியுள்ளனர். நான் சீனா மற்றும் இந்தியா இரண்டிற்கும் பயணம் செய்துள்ளேன், மேலும் இரு நாடுகளிடமிருந்தும் நாம் கற்றுக்கொள்ளக்கூடிய விடயங்கள் உள்ளன.

கேள்வி: ஜேவிபி நிறுவனர் ரோஹண விஜேவீர இந்தியாவை சந்தேகத்துடன் பார்த்து இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். நீங்கள் அவரது கொள்கைகளை கைவிட்டீர்களா?

பதில்: இந்தியாவும் சிறிலங்காவும் தொப்புள் கொடியைப் போல ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளன. எமது கலாசாரம் மற்றும் மதம் அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளன. பௌத்தம் இந்தியாவிலிருந்து வந்தது. இந்தியா எமது ஒரே உடனடி அண்டை நாடு.

எமது நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட இந்திய அரசாங்கங்கள் இருந்தபோது பிரச்சினைகள் எழுந்துள்ளன. நாங்கள் ஒருபோதும் இந்தியாவுக்கு எதிராக இருந்ததில்லை – அதாவது, நாடு மற்றும் அதன் மக்களுக்கு – ஆனால் சில இந்திய அரசாங்கங்களின் கொள்கைகளுக்கு எதிராக இருந்திருக்கிறோம்.

கேள்வி: ஜே.வி.பி-என்.பி.பி கட்சி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகளுடன் நன்கு ஒத்துப்போகிறதா?

பதில்: ராஜீவ் காந்திக்குப் பிறகு வந்த அனைத்து அரசாங்கங்களும் சிறிலங்காவுக்கு எதிராக வற்புறுத்தும் கொள்கையை கொண்டிருக்கவில்லை என்று நான் நினைக்கிறேன். எமது இறையாண்மையை நாம் பாதுகாத்து, மோடி அரசாங்கத்துடன் நட்பு முறையில் பணியாற்ற முடியும். மோடி அரசாங்கம் எங்களுக்கு உண்மையான நண்பர் என்று நாங்கள் உணர்கிறோம்.

கேள்வி: சிறிலங்கா மீதான இந்தியாவின் புவிசார் அரசியல் நிகழ்ச்சி நிரல் குறித்து இங்குள்ள பொதுமக்களிடையே இன்னும் சந்தேகம் இருப்பதாக நீங்கள் உணரவில்லையா?

பதில்: சில இந்திய அரசாங்கங்களின் நடவடிக்கைகளால் சந்தேகங்கள் உருவாக்கப்பட்டன. அந்த சந்தேகம் இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் நீங்கும். தற்போதைய இந்திய அரசாங்கத்தின் சிறிலங்கா மீதான கொள்கைகளால், சந்தேகங்கள் குறைந்து வருவதாக நான் உணர்கிறேன்.

இந்தியாவைப் பற்றி போலியான  ஒரு  கருத்தை உருவாக்க முயற்சிக்கும் சிலர் உள்ளனர். இந்தியாவின் முன் மண்டியிடவும் தயாராக இருப்பவர்கள் அவர்கள்தான். கடந்த காலத்தில் இந்தியா மீது எங்களுக்கு கோபம் ஏற்பட்டதற்குக் காரணம், அந்த நேரத்தில் சிறிலங்காவின் ஆட்சியாளர்களும் இந்தியாவின் அழுத்தத்திற்கு அடிபணிந்ததே ஆகும். அந்த அழுத்தங்களை எதிர்த்து நிற்க அவர்களுக்கு மன உறுதி இல்லை.

ஒரு அரசாங்கம் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தால், எந்தப் பகுதியிலிருந்தும் தேவையற்ற செல்வாக்கை அது வெல்ல முடியும்.

கேள்வி: இப்போது இந்தியாவிடமிருந்து எந்த அழுத்தமும் வரவில்லையா?

பதில்: இல்லை, எங்கள் மீது அத்தகைய அழுத்தம் இல்லை. நாங்கள் அவர்களிடம் பேசும்போது, ​​எங்கள் கொள்கைகள் குறித்து நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.

ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் அமுல் கூட்டுறவு நிறுவனத்துடன் கையெழுத்திட்ட உடன்பாட்டை எடுத்துக் கொள்ளுங்கள். இந்தத் துறை எங்களுக்கு ஒரு சொத்து என்றும், நாங்கள் அதை மாற்றமாட்டோம் என்றும், அதை மேம்படுத்துவதற்கான உதவியை மட்டுமே ஏற்றுக்கொள்வோம் என்றும் நாங்கள் அவர்களிடம் கூறினோம், அவர்கள் எங்கள் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டனர்.

நாங்கள் இந்தியாவை மதிக்கிறோம், அவர்கள் எங்களை மதிக்கிறார்கள். நான் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரைச் சந்தித்தபோது, ​​இந்தியா சிறிலங்காவுக்கு விசுவாசமான நண்பர் என்பதை தெளிவுபடுத்தினார்.

கேள்வி: நீங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், நீங்கள் கூறுவது போல், இந்தியாவுடனான உறவுகள் இவ்வளவு சுமூகமாக தொடரும் என்று நீங்கள் எதிர்பார்த்தீர்களா?

பதில்: எங்கள் வெளியுறவுக் கொள்கையில் நாங்கள் எப்போதும் உறுதியாக இருந்தோம். எங்கள் கொள்கைகள் தோல்வியடையும் என்று நினைத்தவர்கள் எதிர்க்கட்சியில் இருந்தவர்கள்தான். நாங்கள் எப்போதும் உறுதியாக இருந்தோம், ஏனென்றால் நாங்கள் பதவியேற்பதற்கு முன்னரே, இந்தியாவுடனும் சீனாவுடனும் உறவுகளை வளர்த்துக் கொண்டிருந்தோம்.

கேள்வி: இனப்பிரச்சினையைத் தீர்ப்பது, 13வது திருத்தத்தை செயற்படுத்துவது போன்றவற்றில் இந்தியாவிடமிருந்து உங்களுக்கு அழுத்தம் வரவில்லையா?

பதில்: இது போன்ற அரசியல் பிரச்சினைகள் குறித்து என்னுடன் எந்த கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை.

கேள்வி: சிறிலங்காவுக்கும் இந்தியாவிற்கும் இடையே பல புரிந்துணர்வு உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டன, ஆனால் இவை பகிரங்கப்படுத்தப்படவில்லை. இவற்றில் என்ன இரகசியம்?

பதில்: எந்த இரகசிய உடன்பாடுகளும் கையெழுத்திடப்படவில்லை, உடன்பாடுகளின் அனைத்து கட்டமைப்புகளும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஏதேனும் இரகசிய உடன்பாடுகள் இருந்தால், அவை இப்போது பகிரங்கமாகியிருக்கும்.

இந்த நாட்டைக் கட்டியெழுப்ப நாங்கள் வந்தோம், மேலும் நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் எந்த முடிவுகளையும் நாங்கள் எடுக்கமாட்டோம். நாங்கள் நாட்டைக் காட்டிக் கொடுக்கமாட்டோம்.ஆனால் எங்களுக்கு உதவ விரும்பும் எந்தவொரு நாட்டிலிருந்தும் எங்களால் முடிந்த உதவியைப் பெறுவோம்.

கேள்வி: அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையின் மீது இந்தியாவிற்கு ஏதேனும் அதிருப்தி இருந்ததா, அது அவரை இந்தப் பதவிகளில் இருந்து நீக்க வழிவகுத்ததா?

பதில்: தோழர் பிமலுக்கு துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையுடன் கூடுதலாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சுக்களும் இருந்தன. தோழர் கரு (அமைச்சர் அனுர கருணாதிலக) நகர அபிவிருத்தி அமைச்சை  நிர்வகித்தார்.

பதவியேற்ற ஓராண்டுக்குப் பின்னர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி  அமைச்சுக்கள் இணைந்து சிறப்பாகச் செயற்படும் என்பதை புரிந்து கொண்டோம். சம்பந்தப்பட்ட கடுமையான பணிகளுக்கு சிறந்த நபர் பிமல் ரத்நாயக்க. அதனால்தான் மாற்றங்கள் செய்யப்பட்டன.

வெளிப்புற அழுத்தங்களினால்  அல்ல, சரியானதன் படி நாங்கள் செயற்படுகிறோம் என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

கேள்வி: ஜே.வி.பியின் அரசியல் மற்றும் பொருளாதார தத்துவத்தில் என்ன மாற்றம் நிகழ்கிறது?

பதில்: எங்கள் நோக்கங்கள் மாறவில்லை. நாங்கள் ஒரு நியாயமான சமூகத்தை உருவாக்க விரும்புகிறோம். அது பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் நீதியான ஒரு சமூகமாக இருக்க வேண்டும், அங்கு தேசிய ஒற்றுமை மற்றும் ஜனநாயகம் உள்ளது. அதுதான் அப்போது எங்கள் நோக்கம், இப்போதும் அது எங்கள் குறிக்கோளாக உள்ளது.

எங்கள் பொருளாதார தத்துவத்தின் அடிப்படையில், பொருளாதார ஜனநாயகம் இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். பொருளாதார ஜனநாயகத்தின் அர்த்தம் என்னவென்றால், அது நாட்டின் பொருளாதாரத்தில் பங்கேற்க எவருக்கும் உரிமையை வழங்குகிறது.

இதில் நுண் பொருளாதார மட்டத்தில் உள்ளவர்கள் உட்பட பொது மற்றும் தனியார் துறைகள் இரண்டும் அடங்கும். அத்தகைய பொருளாதாரத்தின் நன்மைகள் நமது சமூகத்தில் நியாயமான முறையில் விநியோகிக்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் கருதுகிறோம். அந்த இலக்கை நோக்கி நாங்கள் செயல்பட்டு வருகிறோம். நிச்சயமாக, இதை அடைய சிறிது காலம் தேவை.

கேள்வி: ஜே.வி.பி ஒரு கம்யூனிஸ்டிலிருந்து ஒரு புதிய தாராளமய மனநிலைக்கு மாறிவிட்டதா?

பதில்: நாங்கள் ஒரு புதிய தாராளமய மனநிலையை ஆதரிக்கவில்லை. அத்தகைய முத்திரைகளை நம் மீது வைக்க முயற்சிப்பவர்களால் கம்யூனிசம் அல்லது புதிய தாராளமயம் என்றால் என்ன என்பதை விளக்கக்கூட முடியாது.

‘தாராளவாதம்’, ‘நவதாராளவாதம்’, ‘சமூக ஜனநாயகவாதி’, ‘ஜனநாயகவாதி’ அல்லது ‘கம்யூனிஸ்ட்’ போன்ற முத்திரைகள் எங்களுக்கு முக்கியமல்ல. எங்களிடம் இருப்பது ஒரு குறிக்கோள், அது நாட்டை பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதும், அந்த வளர்ச்சியின் பலன்கள் மக்களை நியாயமான முறையில் சென்றடைவதை உறுதி செய்வதும் ஆகும்.

இது மக்களிடையே உள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்து, மக்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ உதவும். அதுதான் எங்கள் குறிக்கோள், அதன் அடிப்படையில் யாராவது எங்கள் மீது ஒரு முத்திரையை குத்த விரும்பினால், அவர்கள் அவ்வாறு செய்யலாம்.

கேள்வி: ஆயுதப்படைகளின் பங்கை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக ஜே.வி.பி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது, அவர்களை ‘போர் வீரர்கள்’ என்று குறிப்பிட மறுக்கும் அளவிற்குச் சென்றுள்ளதா?

பதில்: நாம் கடந்த காலத்தில் வாழ்வதில்லை. கடந்த காலத்திலிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம், ஆனால் கடந்த காலத்தில் வாழ்வதில்லை. கடந்த காலத்தில் வாழ்பவர்களுக்கு இவை பிரச்சினைகள். இதுபோன்ற சொற்களைப் பற்றி நாங்கள் அதிகம் சிந்திப்பதில்லை; நாட்டில் உள்ள அனைத்து மக்களின் நலனுக்காகவும் நாங்கள் பாடுபடுகிறோம்.

சிலர் அவர்களை வீரர்கள் என்றும், சிலர் போர்வீரர்கள் என்றும் குறிப்பிடுகிறார்கள். சில சொற்களைப் பயன்படுத்துவதற்கு ஒழுங்கமைக்கப்பட்ட பரப்புரை இல்லை.

கேள்வி: பௌத்தம் அரசு மதமாக இருப்பது குறித்து உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன, அதை மாற்ற ஏதேனும் நடவடிக்கைகள் உள்ளதா?

பதில்: நாங்கள் இதை எங்காவது கூறியிருக்கிறோமா? இதைச் சொல்பவர்கள் தேர்தலுக்கு முன்னர் எங்களை பௌத்த எதிர்ப்பு என்று சித்தரித்து ஒரு போலியை உருவாக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் உண்மை அதற்கு நேர்மாறானது.

புனித நினைவுச்சின்னத்தின் சிறப்பு தரிசனத்தை நாங்கள் ஏற்பாடு செய்தோம். பௌத்தத்திற்கு நாங்கள் அரசு ஆதரவை வழங்கியுள்ளோம், அண்மையில் முதல் முறையாக, புத்தரின் புனித தேவ்னிமோரி நினைவுச்சின்னங்கள் இந்தியாவிலிருந்து இங்கு கண்காட்சிக்காக அனுப்பப்பட்டன.

சிறிலங்கா அதிபர் தொடர்ந்து தலதா மாளிகைக்குச் சென்று மகாநாயக்க தேரர்களுக்கு மரியாதை செலுத்துகிறார். நாங்கள் பௌத்தத்திற்கு எதிரானவர்கள் என்று சொல்பவர்கள் ராஜபக்சக்களின் பூனையின் பாதமாக இருந்தவர்கள், தங்கள் அதிகாரங்களை இழந்தவர்கள், இப்போது இதுபோன்ற கதைகளைப் பரப்புகிறார்கள்.

இதுபோன்ற விடயங்களைச் சொல்பவர்கள் பௌத்தத்திற்கு நன்மையை விட அதிக தீங்கு செய்கிறார்கள். நான் ஒரு பௌத்த குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் தம்ம பாடசாலைக்குச் சென்றேன். ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை, நான் ஒரு பிரிவேனாவில் படித்தேன். எனது உயர்தரப் பரீட்சைக்கு, பௌத்த கலாசாரம் உட்பட நான்கு பாடங்களை எடுத்தேன். நாங்கள் புத்தரின் போதனைகளின்படி வாழ்கிறோம்.

கேள்வி: பெலவத்தையில் உள்ள ஜேவிபி தலைமையகத்தின் அனுமதியின்றி ஊடகங்களுக்குப் பேசுவதற்கு தேசிய மக்கள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடைசெய்யப்பட்டுள்ளதா? சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் அவ்வாறு கூறியுள்ளனர்?

பதில்: கட்சியிடம் கேட்காமல் ஊடகங்களுக்குப் பேச முடியாது என்பது உண்மையல்ல. தொலைக்காட்சி விவாதங்களுக்குச் செல்லும் எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், அவர்கள் தயாராக இல்லாத கேள்விகள் கேட்கப்படும் நேரங்கள் உள்ளன.

உதாரணமாக, எங்கள் இந்திய சுற்றுப்பயணத்தில் நாங்கள் என்ன கலந்துரையாடினோம் என்பது அவர்களுக்குத் தெரியாவிட்டால், விவாதத்திற்குச் செல்வதற்கு முன்னர் அவர்கள் எங்களிடம் கேட்க வேண்டும்.

அதைத் தவிர, கட்சியின் முன் அனுமதியின்றி ஊடகங்களுக்குப் பேசுவதற்கு அவர்களுக்கு வேறு எந்தத் தடையும் இல்லை. அமைச்சர்கள் தங்கள் வேலையில் மும்முரமாக இருப்பதால், அவர்களைத் தொடர்பு கொள்ள முடியாத நேரங்கள் உள்ளன. கட்சி விடயங்களுக்காக நாங்களும் அவர்களைத் தொடர்பு கொள்ள முடியாத நேரங்கள் உள்ளன.

கேள்வி: ஓராண்டு பதவியில் இருந்த பின்னர், நீங்கள் சரியான பாதையில் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில்: எங்கள் தேர்தல் அறிக்கை மற்றும் தேர்தலின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளின்படி நாங்கள் செயல்படுகிறோம். தடைகள் இல்லை என்று நான் கூறமாட்டேன். அண்மைய சூறாவளி போன்ற சில இயற்கை தடைகள் உள்ளன, அதே நேரத்தில் சிலரின் பழைய பழக்கவழக்கங்களால் தடைகள் உள்ளன, ஆனால் நாங்கள் செய்யத் திட்டமிட்டவற்றில் பெரும் பகுதியை அடையும் பாதையில் இருக்கிறோம் என்று நாங்கள் நம்புகிறோம்.

இப்போதும் கூட, எங்கள் சாதனைகளை நீங்கள் தீங்கிழைக்காமல் பார்த்தால், எங்கள் நாட்டை நாம் பெருமைப்படக் கூடிய நிலையில் வைத்திருக்கிறோம். அனைத்துலக சமூகத்தை வென்றுள்ளோம், யாருக்கும் அடிபணியவில்லை. பொருளாதாரம் சிறப்பாக செயற்படுகிறது, மேலும் எங்கள் ஊழல் எதிர்ப்புத் திட்டம் நேர்மறையான முடிவுகளைத் தருகிறது.

கேள்வி: புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதற்கும், நிறைவேற்று அதிகார அதிபர் முறையை ஒழிப்பதற்கும் ஜே.வி.பி.யின் உறுதிமொழி என்ன?

பதில்: புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதற்கான செயல்முறையை நாங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டோம். ஒரு புதிய அரசியலமைப்பு  அரசாங்கத்தால் மட்டும் உருவாக்கக் கூடாது, ஆனால் அது மக்கள், பல்வேறு அமைப்புகள் போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு கூட்டு முயற்சியாக இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். இதற்கு சிறிது நேரம் எடுக்கும்.

கேள்வி: ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளராக நீங்கள் அரியணைக்குப் பின்னால் உள்ள உண்மையான அதிகாரமாக இருப்பதாக பொதுவான கருத்து உள்ளதே?

பதில்: முன்னர் அரசாங்கங்கள் ஒரு தனிநபரால் நடத்தப்பட்டன. ஒருவர் நிர்வாகத் தலைவராக ஆனபோது, ​​அவர் தனியாகச் செயல்பட்டார், மற்றவர்கள்  தலையாட்டும் மனிதர்களாக மாறி தலைவரைப் பின்பற்றினர்.

நாங்கள் வேறுபட்டவர்கள். நாங்கள் தேசிய மக்கள் சக்தியை உருவாக்கினோம், அதில் ஜேவிபி ஒரு பகுதியாகும். நாங்கள் ஏதேனும் புதிய முடிவுகளை எடுக்கும்போது, ​​நாங்கள் தேசிய மக்கள் சக்தியாகக் கலந்தாலோசித்து இந்த மாற்றங்களைச் செயல்படுத்துகிறோம்.

அதோடு, அமைச்சரவையும் அதன் சொந்த முடிவுகளை எடுக்கிறது. நாங்கள் கொள்கை முடிவுகளை எடுக்கும்போது, ​​தேசிய மக்கள் சக்தி தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி என்பதை நாங்கள் நினைவில் கொள்கிறோம், கூட்டு முடிவுகளை எடுக்கிறோம்.

ஒரு நபர் அனைத்து முடிவுகளையும் எடுத்து பின்னர் அவற்றை செயல்படுத்த முற்படுவதில்லை. உண்மையில், ‘அதிகாரம்’ என்ற வார்த்தையை நாங்கள் விரும்புவதில்லை. நம் அனைவருக்கும் ஒரு பொறுப்பு உள்ளது, அதை நிறைவேற்ற நாங்கள் உழைக்கிறோம்.

சிலர் உணருவது போல், பின்னால் இருந்து இழுக்கும் கண்ணுக்குத் தெரியாத சக்தி எதுவும் இல்லை. ஒற்றுமை மற்றும் பற்றுறுதியின் கொள்கைகளை நாங்கள் பின்பற்றுகிறோம். நாங்கள் அடிக்கடி கூடி, பிரச்சினைகளை ஒன்றாக விவாதித்து, தேவை ஏற்படும் போது முடிவுகளை எடுக்கிறோம்.

ஆங்கில வழிமூலம்- சண்டே ரைம்ஸ் (22.02.2026)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *