மேலும்

நாளாந்தம் 2 மணிநேரம் கைத்தொலைபேசியில் அரட்டையடிக்கும் 9 இலட்சம் அரச பணியாளர்கள்

சிறிலங்காவில் அரச பணியாளர்கள் நாளொன்றுக்கு வேலை நேரத்தில் இரண்டு மணிநேரம் கைத்தொலைபேசியில் அரட்டையடிப்பதாகவும், இதனால், நாளாந்தம் 1.8 மனித மணித்தியாலங்கள் அரச சேவைகள் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

சிறிலங்காவில் உள்ள 1.5 மில்லியன் அரச பணியாளர்களில், 60 வீதமானோர், வேலை நேரத்தில் நாளொன்றுக்கு தலா 2 மணிநேரம் கைத்தொலைபேசியில் பேசிக் கொண்டிருப்பதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது என்று, அரச மற்றும் மாகாணசபை பணியாளர் தொழிற்சங்க சம்மேளனத்தின் செயலாளர் அஜித் கே. திலகரட்ன தெரிவித்துள்ளார்.

45 வயதுக்குட்பட்ட அரச பணியாளர்களிடம் இந்தப் பழக்கம் அதிகளவில் காணப்படுவதாகவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த விவகாரத்தைக் கவனத்தில் எடுத்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது, பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் பொறுப்பு என்று அஜித் கே. திலகரட்ன குறிப்பிட்டுள்ளார்.

ஒன்பது இலட்சம் அரச பணியாளர்கள் தமது 8 மணிநேர கடமை நேரத்தில், இரண்டு மணிநேரத்தை கைத்தொலைபேசியில் பேசுவதற்குச் செலவிடுவதால்,  1.8 மில்லியன் மனித மணித்தியாலங்களின் உழைப்பு பாழாகிறது.

இதனால் சிறிலங்காவின் அரச மற்றும் மாகாணசபை பணியாளர்கள் பணி நேரத்தில் கைத்தொலைபேசி பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும்,பணியாளர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *