மேலும்

வதைமுகாம் இரகசியங்கள்

touture-campயாழ்ப்பாணத்தில், இராணுவத்தினரின் பிடியில் இருந்து புதிதாக விடுவிக்கப்பட்ட 701 ஏக்கர் பரப்பளவு பிரதேசத்தில் உள்ள வீமன்காமம் பகுதியில், இரண்டு வீடுகளில் காணப்பட்ட வதைமுகாம்களுக்குரிய தடயங்கள் பெரும் பரபரப்பைத் தோற்றுவித்துள்ளன.

அருகருகே காணப்பட்ட இரண்டு வீடுகளின் அமைப்புகள் மாற்றப்பட்டு,  கூரைகளுக்குக் கீழாக முட்கம்பிகள் பொருத்தப்பட்டிருந்ததும், வெளிச்சம் வரும் வழிகள் அடைக்கப்பட்டு இருட்டறையாகப் பயன்படுத்தப்பட்டிருந்ததும், ஏனைய இராணுவ அதிகாரிகள் கூட நுழையத் தடைவிதிக்கும் அறிவிப்பு பலகை காணப்பட்டதும், அந்த சந்தேகங்களை எழுப்பியிருந்தது.

ஏற்கனவே இதுபோன்றதொரு வதைமுகாம் தடயம், வரணியில் இருந்த 52ஆவது டிவிசன் படைத்தளம், மிருசுவில் பகுதிக்கு மாற்றப்பட்ட பின்னரும், கண்டுபிடிக்கப்பட்டது. ஆனாலும் அதுபற்றிய தகவல்கள், படங்கள் தாமதமாகவே வெளியாகின.

அதேவேளை, அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடச் சென்ற பொதுமக்கள், வீமன்காமத்தில் இரண்டு வீடுகள், வரணியில் இருந்ததை ஒத்த அமைப்புடன் இராணுவத்தினரால் மாற்றியமைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது இராணுவத்தினரின் இரகசிய வதைமுகாமாக இருக்கலாம் என்ற செய்தி பரவலாக ஊடகங்களில் வெளியாகியது. ஆனால், இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர அதனை நிராகரித்திருக்கிறார்.

அது வதைமுகாம் அல்ல, இராணுவத்தினர் வதைமுகாம்களை வைத்திருக்க வேண்டிய தேவை இல்லை என்று கூறியிருப்பதுடன், அது. இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட மருத்துவ ஆய்வு கூடம் என்றும், புலிகளின் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவே, கூரைக்கு முட்கம்பிகள் பொருத்தப்பட்டதாகவும் விளக்கமளித்திருக்கிறார்.

இராணுவப் பேச்சாளரின் விளக்கம் விந்தையானதாகவும், குழப்பம் நிறைந்ததாகவும் உள்ளது.

அதுமட்டுமன்றி, அந்த வதைமுகாம் செய்தி வெளியான பின்னர், அங்கு இரவோடு இரவாக தடயங்கள் அழிக்கப்பட்டு, வர்ணம் பூசி மறைக்கப்பட்டது ஏன் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் இருக்கின்றன.

அதைவிட, பலாலியில் இராணுவத்தினருக்கென சகல வசதிகளையும் கொண்ட ஒரு தள மருத்துவமனையே இருக்கிறது. அப்படியிருக்க, அதற்கு அருகில், எந்த வசதியும் இல்லாத, மின் இணைப்புக் கூட இல்லாத ஒரு மருத்துவ ஆய்வு கூடத்தை இராணுவத்தினர் வைத்திருந்தனர் என்பது எவராலும் நம்பமுடியாத விடயம்.

புலிகளின் தாக்குதலில் இருந்து பாதுகாக்க கூரைக்கு முட்கம்பி பொருத்தியதாக கூறப்படும் விடயம் அதைவிடப் பெரிய முரண். கூரை வழியாகத் தப்பிவிடக் கூடாது என்பதற்காகவே, அவ்வாறு முட்கம்பி பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

எவ்வாறாயினும், இராணுவத் தரப்பு அதனை ஒரு வதை முகாம் என்று ஏற்கும் மனோநிலையில் இல்லை, அதனால் தான், இந்த தகவல்கள் வெளியானதும் எஞ்சிய தடயங்கள் எரித்தும், வர்ணம் பூசி மறைத்தும் அழிக்கப்பட்டிருக்கின்றன.

அதேவேளை, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர குறிப்பிட்டது போன்று, இராணுவத்தினர் வதைமுகாம்களை வைத்திருக்க வேண்டிய தேவையில்லை என்ற கருத்து முக்கியமானது.

இராணுவத்தினர் ஏதோ யாரையும் கைது செய்யாதது போன்றும், விசாரணை செய்யாதது போன்றும், அவரது கருத்து அமைந்திருக்கிறது. இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டவர்கள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள், எவ்வாறு விசாரணை செய்யப்பட்டார்கள் என்பது உலகறிந்த உண்மை.

வடக்கிலும், கிழக்கிலும் மட்டுமன்றி, இலங்கை முழுவதிலும் உள்ள அத்தனை இராணுவ முகாம்களும், ஏதோ ஒரு காலகட்டத்தில், கைது செய்யப்பட்டவர்களை விசாரிக்கும் முகாம்களாகவே இருந்தன.

இரண்டு முறை நடந்த ஜேவிபி கிளர்ச்சிகளின் போது, கைது செய்யப்பட்ட சிங்கள இளைஞர்கள், இராணுவ முகாம்களில் எவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டனரோ அதுபோலத் தான், முப்பதாண்டுப் போரின் போதும் அதற்குப் பின்னரும், தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டனர்.

மூன்று தசாப்த போர்க்காலத்தில், இராணுவத்தினரின் சுற்றிவளைப்புகளில் எத்தனை ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர் என்ற ஒரு கணக்கு கூட இராணுவத்தினரிடம் இருக்காது. அது ஆயிரம் அல்ல, இலட்சங்களைக் கூட தாண்டக்கூடியதாகவே இருக்கும்.

சுற்றிவளைப்புகளிலும், தேடுதல்களிலும், கொல்லப்பட்டவர்கள் போக, பிடித்துச் செல்லப்பட்டவர்களில் பல ஆயிரம் பேர் மீண்டு வரவேயில்லை. எனினும் பெரும்பாலானவர்கள் மீண்டு வந்தனர் என்பதில் சந்தேகமில்லை.

மீண்டு வந்தவர்களும், மீளவராதவர்களும், இராணுவ முகாம்களில் விசாரணை என்ற பெயரில், சித்திரவதை செய்யப்பட்டனர். இராணுவ விசாரணை என்பது சித்திரவதையோடு இணைந்த ஒன்றுதான்.

தலைகீழாக கட்டித் தொங்க விட்டு தாக்குவது, பெற்றோல் பையை தலையில் கட்டி மூச்சுத் திணற வைப்பது, மண்நிரப்பிய குழாய்களால் தாக்குவது, நகங்களை பிடுங்குவது, தீயால் சுட்டுக் காயங்களை ஏற்படுத்துவது, என்று ஏகப்பட்ட சித்திரவதை வழிமுறைகள் கடந்த காலங்களில் கையாளப்பட்டன.

ஆட்சிமாற்றத்தின் பின்னரும் கூட அத்தகைய வதைகள் தொடர்வதாக, தென்னாபிரிக்க சட்ட நிபுணர் யஸ்மின் சூகா தலைமையிலான சர்வதேச மனித உரிமை அமைப்பு ஒன்று கடந்த வாரத்தில் கூட குற்றம்சாட்டியிருக்கிறது.

ஒவ்வொரு இராணுவ முகாமிலும், பின்புறமாக ஒரு இடத்தில் விசாரணைக்கூடம் இருக்கும். கைது செய்யப்பட்டவர்களைத் தடுத்து வைத்திருக்கும் கூடங்கள் இருக்கும்.

பெரும்பாலும் ஊர் அடங்கிப் போன பின்னர், இரவு 10 மணிக்கு மேல் தான் அங்கு விசாரணைகள் தொடங்கும், நள்ளிரவு தாண்டியும் அந்த விசாரணைகள் தொடரும். இது தான் வடக்கு கிழக்கில் இருந்த இராணுவ முகாம்களில் நாளாந்தம் நடந்தது.

இராணுவத்தினர் வதைமுகாம்களை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று இராணுவப் பேச்சாளர் கூறியுள்ளதைப் பார்த்தால், அவர்கள் யாரையுமே பிடிப்பதில்லை, விசாரிப்பதில்லை என்பது போலத் தான் உள்ளது.

ஆனால், இராணுவத்தினரின் கையில் அகப்பட்ட சித்திரவதைகளை  அனுபவித்த ஆயிரக்கணக்கான சாட்சிகள், எங்கெங்கு சித்திரவதை செய்யப்பட்டனர் என்பதை என்பதை வெளிப்படுத்த தயாராகவே இருப்பார்கள்.

படையினரின் பிடியில் இருந்த பிரதேசங்களில் வாழ்ந்த இளைஞர்களில் பெரும்பாலானவர்களுக்கு இத்தகைய வதைமுகாம் அனுபவங்கள் கிடைக்காமல் போயிருக்காது.

எனவே இராணுவத்துக்கு வதைமுகாம்கள் பற்றி எதுவுமே தெரியாது, அப்படி ஒன்றை அவர்களை வைத்திருந்ததே கிடையாது என்ற கதையை தமிழர்கள் மட்டுமல்ல, சிங்களவர்கள் கூட நம்பமாட்டார்கள். இது இரராணுவப் பேச்சாளருக்கும் கூடத் தெரியாத விடயமல்ல.

வீமன்காமத்தில் கண்டுபிடிக்கப்பட்டது அண்மைக்காலங்களில் பயன்படுத்தப்பட்ட ஒரு வதை முகாமாக இல்லாதிருக்கலாம். ஆனால் ஏதோ ஒரு காலத்தில், அது சட்டரீதியான தேவைகளுக்கு அப்பால் பயன்படுத்தப்பட்டது என்பதை மட்டும் உணர்த்தியிருக்கிறது.

சில காலங்களுக்கு முன்னர் இத்தகைய வதைமுகாம்கள் பற்றிய கேள்விகளை எழுப்பியிருந்தால் அதனை பெரிய விடயமாக இராணுவத்தரப்பு எடுத்திருக்காது. பதிலளிக்காமல் தட்டிக்கழித்திருக்கும்.

ஆனால் இப்போது, மனித உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க வேண்டிய நிலையில் படைத்தரப்பு உள்ளதால், இத்தகைய குற்றச்சாட்டுகளை பொய்யானதாக காட்ட முனைகிறது.

எவ்வாறாயினும், இரகசியமாகவோ, வெளிப்படையாகவோ தடுத்து வைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட ஒவ்வொரு முகாம்களின் பின்னாலும் சித்திரவதைகள் பற்றிய ஆயிரக்கணக்கான கதைகள் இருக்கும். அவையெல்லாம் வெளிச்சத்துக்கு வரும் என்றில்லை.

ஆனால் வெளிச்சத்துக்கு வருகின்ற குற்றச்சாட்டுகளை படைத்தரப்பு தட்டிக்கழிக்க முடியாது.

இத்தகைய தடயங்கள், உண்மைகள் வெளிப்பட்டு விடக் கூடாது என்பதற்காகக் கூட, படைத்தரப்பு உயர்பாதுகாப்பு வலயங்களாக பல இடங்களை தமது பிடியில் வைத்திருக்க முற்படுகிறதா? விடுவிக்க மறுக்கிறதா என்ற கேள்விகளும் உள்ளன.

இந்தக் கேள்விகளின் பின்னால் வலுவான நியாயங்கள் இருப்பதை மறுக்க முடியாது.

– கபில்

வழிமூலம் – வீரகேசரி வாரவெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *