மேலும்

ஏனைய தமிழ்க் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் – பொதுமன்னிப்பில் விடுதலையான ஜெனிபன்

jenebanதனக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தது போல, மற்றைய தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளார் அண்மையில் விடுதலையான சிவராசா ஜெனிபன்.

மைத்திரிபால சிறிசேன அமைச்சராக இருந்த போது,- 2006ஆம் ஆண்டு அவரைக் கொல்ல முயன்றதாக கைது செய்யப்பட்டு, 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சிவராசா  ஜெனிபன், கடந்த வெள்ளிக்கிழமை சிறிலங்கா அதிபரால் பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

கடந்த சனிக்கிழமை கோப்பாயில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பிய சிவராசா ஜெனிபன் நேற்று பிபிசியிடம் கருத்து வெளியிடுகையில்,

‘2006 ஆம் ஆண்டு எப்ரல் மாதம், மட்டக்களப்பில் இருந்து வவுனியா நோக்கி பேருந்தில் பயணம் செய்தபோது, சிவிலுடையில் வந்தவர்கள் என்னைக் கைது செய்தனர்.

கிளைமோர் குண்டை வெடிக்க வைத்து, மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக பொலன்னறுவ மற்றும் யாழ். மேல் நீதிமன்றங்களில் என் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

ஆனால், நான் பேருந்தில் இருந்து கைது செய்யப்பட்டபோது, என்னிடம் கிளைமோர் குண்டு எதுவுமே இருக்கவில்லை.

jeneban

எனக்கு எதிரான வழக்குகள் குறித்த விபரங்கள் எதனையும் கூற விரும்பவில்லை. அவ்வாறு தெரிவிக்கப்படுகின்ற விபரங்கள் திரிபுபடுத்தப்பட்டு, என்னை விடுதலை செய்த சிறிலங்கா அதிபரின் நல்லெண்ணத்திற்கு  ஊறு விளைவித்து விடக்கூடும்.

சிறிலங்கா அதிபரின் இந்த நல்லெண்ணச் செயற்பாடு இன்னும் தொடர வேண்டும்.

சிறை வாழ்க்கை கொடுமையானது. அதிலும் விசாரணைகளின்றியும், என்ன நடக்கப் போகின்றது என்று தெரியாத நிலையிலும், சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது மிகவும் மோசமானது.

சிறையிலுள்ள மற்றைய தமிழ் அரசியல் கைதிகளையும் சிறிலங்கா அதிபர் மற்றும் அரசாங்கம் விடுதலை செய்வார்கள் என திடமாக எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு கருத்து “ஏனைய தமிழ்க் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் – பொதுமன்னிப்பில் விடுதலையான ஜெனிபன்”

  1. Karthigesu Indran
    Karthigesu Indran says:

    ஒரு விடயம் விளங்கவில்லை.2006.ம் ஆண்டு கைது செய்யப்பட்ட ஒருவர் .2015.ம் ஆண்டுவரை சுமார் ஒன்பது வருடங்களுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்து இருக்கிறார்.இதுவரை சிறையில் இருந்த காலங்களையும் கருத்தில் கொண்டு என்றுதான் தீர்ப்பு வழங்குவது நடைமுடை .இவர் ஒரு பெரும்பான்மை இனத்தவராக இருந்தால் உடனே பிணை வளங்க பட்டிருக்கும் .எப்படியும் பத்து வருட சிறைத்தண்டனை பெற்றவர் எட்டு வருடங்களில் தண்டனை காலம் முடிந்து வெளியில் வருவது நடை முறை இலங்கை இந்தியா இரு நாடுகளிலும் தமிழர்களுக்கு என்றே சட்ட நடைமுறைகள் செயல் படுத்த படுகிறது?????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *