மேலும்

அமைதிக்காலத்திலும் இயங்கும் சிறிலங்காவின் சித்திரவதை இயந்திரம்

Vijitha Pavanendranசிறிலங்காவின் புதிய அரசாங்கம் உள்நாட்டுப் போரின் பின்னான நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுத்தமை தொடர்பில் பாராட்டத்தக்க நிலையிலேயே இருப்பினும், அங்கு வாழும் மக்கள் தற்போதும் பல்வேறு சித்திரவதைகள் மற்றும் மீறல்களுக்கு உட்படுவதாக தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் பாதுகாப்புப் படையினர் தற்போது பொதுமக்களைக் கடத்துதல், சித்திரவதைகளுக்கு உட்படுத்துதல் மற்றும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துதல் போன்ற பல்வேறு மீறல்களில் ஈடுபடுவதாக இந்த அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கைத்தீவில் 1980களின் ஆரம்பத்தில் யுத்தம் ஆரம்பமாகியது. பெரும்பான்மை சிங்கள சமூகத்தால் ஓரங்கட்டப்பட்ட சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கு தனிநாட்டை அமைப்பதற்காக தமிழ்ப் புலிகள் யுத்தம் ஒன்றில் ஈடுபட ஆரம்பித்தனர்.

இந்த யுத்தமானது தமிழ்ப் புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்டு, 100,000 இற்கும் அதிகமானோரின் உயிர் இழப்புடன் 2009ல் முடிவை எட்டியது. இந்த யுத்தத்தில் பொதுமக்களே அதிகம் கொல்லப்பட்டனர்.

போரின் போது பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காணாமற் போயினர். இது ‘வெள்ளை வான்’ கடத்தல் என அறியப்படுகிறது. ஏனெனில் பாதுகாப்பு முகவர்கள் தமது கடத்தல் சம்பவங்களுக்கு வெள்ளை வான்களையே பயன்படுத்தினர்.

போரின் போது இடம்பெற்ற பல்வேறு மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கான அழுத்தத்தை அனைத்துலக சமூகம் வழங்கிய போது அதனை சிறிலங்கா அரசாங்கம் எதிர்த்தது. ஆனால் ஒரு ஆண்டிற்கு முன்னர் அதிபர் மைத்திரிபால சிறிசேன நாட்டின் ஆட்சிப் பொறுப்பை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததன் பின்னர் இந்த நிலைமை மாறியது.

இவரது அரசாங்கம் மீளிணக்கப்பாடு மற்றும் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு போன்றவற்றை நிறைவேற்றுவதை இலக்காகக் கொண்டு நிகழ்ச்சி நிரல்களை தயாரித்தது.

சிறிசேனவின் கடந்த ஓராண்டு ஆட்சிக்காலத்தில் கடத்தப்பட்ட 20 பேரிடமிருந்து பெறப்பட்ட சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு ‘அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்’ புதிய அறிக்கை ஒன்றைத் தயாரித்து வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் சிறிசேனவின் அரசாங்கம் எவ்வாறு நல்லிணக்கம் தொடர்பில் இதயசுத்தியுடன் செயற்பட்டிருக்க முடியும் எனவும் பாதுகாப்பு படைகள் மீது இந்த அரசாங்கம் எவ்வளவு கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது என்பது தொடர்பாகவும் ‘அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்’ தற்போது வெளியிட்டுள்ள தனது புதிய அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளது.

‘சிறிலங்காவின் வெள்ளை வான்கள் தற்போதும் செயற்படுகின்றன என்பது இங்கு மிகவும் கவலைக்குரிய விடயமாகும். வெள்ளை வான்கள் வழமை போன்று சிறிலங்காவில் கடத்தல்களில் ஈடுபடுகின்றன’ என அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்று இயக்குனர் ஜஸ்மின் சூகா புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தென்னாபிரிக்கா மற்றும் சியாராலியோன் ஆகிய நாடுகளின் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுக்களின் உறுப்பினராக சூகா செயற்பட்டுள்ளார். அத்துடன் சிறிலங்காவில் யுத்தம் தொடர்பான பொறுப்புக்கூறும் விவகாரம் மீதான ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் சட்ட ஆலோசகராகவும் சூகா செயற்பட்டுள்ளார்.

அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தில் பணியாற்றும் பெரும்பாலான உறுப்பினர்களின் தனிப்பட்ட விபரங்கள் அவர்கள் தொடர்ந்தும் சுயாதீனமாகப் பணியாற்றுவதற்காக இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த அமைப்பில் அனைத்துலக போர்க்குற்ற நீதிமன்றங்களில் பணியாற்றிய வழக்கறிஞர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

தென்னாபிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் தலைமைத்துவத்தின் கீழ் தென்னாபிரிக்க அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ‘மனித உரிமைகளுக்கான நிறுவகம்’ என்ற அமைப்பாலேயே ‘அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்’ நிர்வகிக்கப்படுகிறது.

அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தால் தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையில் பின்வரும் முக்கிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பாதிக்கப்பட்ட அனைவரும் தமிழர்களாவர். இவர்களில் பலர் வேறு நாடுகளிலிருந்து சிறிலங்காவிற்குச் சென்றவர்களாகவும் சிலர் சிறிலங்காவிற்குள்ளேயே தலைமறைவு வாழ்வை வாழ்ந்தவர்களுமாவர்.

சிறிசேன அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பெடுத்த பின்னர் சிறிலங்காவில் தமக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் எனக் கருதியே மீண்டும் அங்கு சென்றனர் மற்றும் தமது தலைமறைவு வாழ்விலிருந்து வெளிவந்தனர். இறுதியாக கடந்த மாதமும் சிறிலங்காவில் கடத்தல் சம்பவம் ஒன்று இடம்பெற்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதே.

நான்கு நாடுகளில் வாழும் 15 தமிழ் ஆண்கள் மற்றும் 05 தமிழ்ப் பெண்களிடம் அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் ஆய்வாளர்கள் நேர்காணல் மேற்கொண்டனர். இவர்களில் சிலரது உடல்களில் இன்னமும் ஆறாத காயங்கள் காணப்படுகின்றன.

பாதிக்கப்பட்டவர்களில் இருவரது காயங்களிலிருந்து நேர்காணல் மேற்கொள்ளும் வேளையிலும் குருதி வடிந்து கொண்டிருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்க சம்பவமாகும்.

நன்கு திட்டமிடப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்ட அறைகளிலேயே சித்திரவதைகள் இடம்பெற்றன. கடத்தப்பட்ட பலர் தலைகீழாகத் தொங்கவிடப்பட்டு இரும்புக் கம்பிகளால் சூடுவைக்கப்பட்டுள்ளனர். பெற்றோல் மற்றும் மிளகாயால் அடைக்கப்பட்ட பொலித்தீன் பைகளால் மூச்சுத்திணறுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவங்களும் சிறிலங்காவில் அரங்கேறியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் ஆராய்ச்சியாளர்களால் நேர்காணல் மேற்கொள்ளப்பட்ட பாதிக்கப்பட்ட தமிழர்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் இரு பாலாரும் மீண்டும் மீண்டும் சிறிலங்கா காவற்துறையினர் மற்றும் இராணுவப் புலனாய்வாளர்களால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இவ்வாறான சித்திரவதைகள், பாலியல் வன்புணர்வுகள் போன்றவற்றில் ஈடுபட்ட சிறிலங்கா காவற்துறையினர் மற்றும் இராணுவப் புலனாய்வாளர்களில் பெரும்பாலானவர்கள் மூத்த அதிகாரிகள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

முன்னாள் போர் வலயத்திலுள்ள இராணுவ முகாங்கள், கொழும்பிலுள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவின் தலைமையகம் மற்றும் நாடு பூராவும் அமைக்கப்பட்டுள்ள இரகசிய முகாம்களிலேயே இவ்வாறான சித்திரவதைகள் இடம்பெற்றுள்ளன.

இவ்வாறான கடத்தல் சம்பவங்கள் நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளன. சித்திரவதைகளின் போது பாதிக்கப்பட்டவர்களின் கடந்த கால அரசியல் செயற்பாடுகள் குறிப்பாக அமைதி வழி ஆர்ப்பாட்டங்கள் மற்றும் தேர்தல் செயற்பாடுகள் போன்றன குறிப்பிடப்பட்டே சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டன.

மீண்டும் புலிகள் இயக்கத்தை ஆரம்பிப்பதற்கு முயற்சி செய்ததாகவும் பாதிக்கப்பட்ட சிலர் மீது கடத்தல்காரர்களால் குற்றம் சுமத்தப்பட்டது.

நேர்காணல் மேற்கொள்ளப்பட்ட பாதிக்கப்பட்டவர்களுள் ஒருவரைத் தவிர ஏனைய 19 பேரும் சிறிலங்காவிலிருந்து தப்பிச் செல்வதற்காகப் பாதுகாப்புப் படையினருக்கு இலஞ்சம் வழங்கியிருந்தனர். இந்த இலஞ்சத் தொகையானது வதைமுகாம்களிலிருந்து விடுவிப்பதற்கு 2500 டொலரிலிருந்து 7000 டொலர் வரையும், பின்னர் நாட்டிலிருந்து வேறு நாடுகளுக்குக் கடத்துவதற்கு 17000 டொலரிலிருந்து 35,000 டொலர் வரையும் செலுத்தப்பட்டது.

தமிழ் மக்களை சித்திரவதைகளுக்கும் அடக்குமுறைக்கும் உட்படுத்தும் நோக்குடன் சிறிலங்காவின் பாதுகாப்புப் படைகளுக்குள் நன்கு திட்டமிடப்பட்ட ஒழுங்குபடுத்தப்பட்ட கடத்தல் ‘பொறிமுறை’ நடைமுறையில் உள்ளதாக அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தால் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் சிறிலங்காவிற்குள் இடம்பெறுகின்றது என்கின்ற குற்றச்சாட்டை நிராகரிப்பதை நிறுத்துமாறும் இவ்வாறான மீறல் சம்பவங்களை உடனடியாக நிறுத்தி குற்றவாளிகளுக்கு உரிய நடவடிக்கையை உடனடியாக முன்னெடுக்குமாறும் அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

ஆங்கில மூலம் – Jared Ferrie

மொழியாக்கம் – நித்தியபாரதி

வழிமூலம்   – Irin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *