சிறிலங்காவின் நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்- நோர்வே
சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு நோர்வே முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராக இருக்கிறது என்று நோர்வே வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரென்டே தெரிவித்தார்.
ஒரு நாள் அதிகாரபூர்வ பயணமாக நேற்றுக்காலை கொழும்பு வந்த நோர்வே வெளிவிவகார அமைச்சர், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
” 11 ஆண்டுகளுக்குப் பின்னர் சிறிலங்காவுக்கு வெளிவிவகார அமைச்சராக வருகைதரும் வாய்ப்புக் கிடைத்தமை மகிழ்ச்சி தருகிறது.
சிறிலங்காவில் மிக முக்கியமான மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ள நிலையில் இந்தப் பயணம் இடம்பெற்றுள்ளது.
அனைத்துலக சமூகம் சிறிலங்காவுக்கு உதவிகளை வழங்குவதற்கு தயாராக உள்ளது.
நோர்வேக்கும் சிறிலங்காவுக்கும் இடையில், 1986 ஆம் ஆண்டில் இருந்து மிகவும் நெருக்கமான உறவு காணப்படுகிறது.
குறிப்பாக மீன்பிடி, விவசாய துறைகளில் சிறிலங்காவுடன் இணைந்து செயற்பட எதிர்பார்க்கிறோம். இதுகுறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பின்போதும் விரிவாக ஆராயப்பட்டது.
சிறிலங்காவின் பல்லின மற்றும் பல் கலாசார தன்மைதான் இந்த நாட்டுக்குப் பலமாக அமைந்துள்ளன. அதனை மேலும் பலப்படுத்த வேண்டும்.
அந்தவகையில் சிறிலங்காவின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு நோர்வே தயாராக உள்ளது.
வடக்கின் நிலைமைகள் குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
நோர்வேயை உங்களின் நெருங்கிய மற்றும் உண்மையான நண்பனாக பாருங்கள். நாங்கள் உங்களுக்கு உதவிகளை வழங்குவோம். உங்களின் நல்லிணக்க பணிகளுக்கு ஒத்துழைப்பை வழங்குவோம்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு சிறிலங்கா இணை அனுசரணை வழங்கியமைக்கு நன்றி தெரிவிக்கிறோம். சிறிலங்காவுடன் ஒத்துழைப்புடன் செயற்பட அர்ப்பணிப்புடன் இருக்கிறோம்.
முன்னேறிச் செல்வதற்கு சிறிலங்காவிடம் பாரிய ஆற்றல் காணப்படுகின்றது. அந்த ஆற்றலை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். ” என்றும் அவர் தெரிவித்தார்.