மேலும்

போர்க்காலத்தில் பாகிஸ்தான் செய்த உதவியை மறக்கமாட்டோம் – சிறிலங்கா அதிபர்

maithri-nawasபோர்க்காலத்தில் சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பாகிஸ்தான் வழங்கிய ஆதரவு அளப்பரியது என்று புகழாரம் சூட்டியுள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு, சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நேற்று அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்வில் உரையாற்றிய போதே மைத்திரிபால சிறிசேன இவ்வாறு குறிப்பிட்டார்.

“சிறிலங்காவில் போர் இடம்பெற்ற காலத்தில் எமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்காக பாகிஸ்தான் வழங்கிய ஆதரவையும், உதவிகளையும் நாம் ஒரு போதும் மறக்கமாட்டோம்.

இதனை எமது அரசாங்கமும் நாட்டு மக்களும் கௌரவத்துடன் நினைவு கூருகிறோம்.

அதே போன்று ஐ.நா. சபையிலும், ஐ.நா. மனித உரிமை பேரவையிலும் ஐ.நா.வுக்கான பாகிஸ்தானிய நிரந்தரப் பிரதிநிதி சிறிலங்காவுக்கு வழங்கிய ஆதரவை மறக்கமாட்டோம். அதற்காக என்றும் நன்றியுடையவர்களாய் இருப்போம்.

இரண்டு நாடுகளுக்கிடையேயும் வலுவான நட்புறவு நிலவி வருகின்றது. இன்று எமது நாட்டுக்கு பாகிஸ்தான் பிரதமர் வருகை தந்தமை பெருமைக்குரியது.

கடந்த ஆண்டில் நான் பாகிஸ்தானுக்கு விஜயத்தை மேற்கொண்டபோது இரு தரப்பினருக்கிடையே பல நட்புறவு உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டன. அவற்றை நடைமுறைப்படுத்துவதில் நாம் அக்கறையுடன் செயல்படுகிறோம்.

அதேபோன்று இன்று இரு நாடுகளுக்கிடையே 8 உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இவையணைத்தும் நடைமுறைப்படுத்தப்படும்.

அடுத்த சார்க் மாநாடு பாகிஸ்தானில் இடம்பெறவுள்ளது. இதற்கான அழைப்பை பிரதமர் விடுத்தார். அதனை ஏற்றுக் கொள்கிறோம்.” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *