பாகிஸ்தானிடம் போர் விமானங்களை வாங்குகிறது சிறிலங்கா – குழப்பத்தில் இந்தியா
இந்தியாவின் அழுத்தங்களுக்கு மத்தியில், பாகிஸ்தானிடம் இருந்து எட்டு, ஜே.எவ்-17 போர் விமானங்களை வாங்கும் உடன்பாட்டில் சிறிலங்கா கையெழுத்திட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் இந்திய ஊடகங்கள் இந்த செய்தியை முக்கியத்துவப்படுத்தி வெளியிட்டு வருகின்றன.
சிறிலங்காவுக்குப் பயணம் செய்துள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், நேற்று சிறிலங்கா அதிபர் தலைமையிலான குழுவினருடன் நடத்திய பேச்சுக்களின் போது, இந்த போர் விமானக் கொள்வனவு உள்ளிட்ட 8 உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவுடன், பாதுகாப்பு, தீவிரவாத எதிர்ப்பு வர்த்தகம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் சார்ந்த எட்டு உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும், சிறிலங்காவுக்கு முதல் கட்டமாக எட்டு ஜே.எவ்-17 போர் விமானங்களை பாகிஸ்தான் வழங்கும் என்றும், பாகிஸ்தான் பிரதமரின் குழுவில் இடம்பெற்ற பாதுகாப்பு அதிகாரிகள் டெய்லி ரைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் தொழில்நுட்ப உதவியுடன் பாகிஸ்தான் தயாரித்து வரும், ஜே.எவ்-17 போர் விமானம் ஒற்றை இயந்திரத்தைக் கொண்டது என்பதுடன், தாக்குதல், இடைமறிப்பு மற்றும் கண்காணிப்பு என்று பலநோக்குப் பயன்பாடுகளுக்கு உகந்தவையாகும்.
பாகிஸ்தான் விமானப்படை பயன்படுத்தி வரும் இந்தப் போர் விமானங்களை வாங்கும் முதல் வெளிநாடு சிறிலங்கா ஆகும்.
பாகிஸ்தானிடம் போர் விமானங்களை வாங்க சிறிலங்கா திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அதற்கு இந்தியத் தரப்பில் கடுமையான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
எனினும், தாம் இன்னும் எந்த போர் விமானங்களை வாங்குவது என்று முடிவு செய்யவில்லை என சிறிலங்கா விமானப்படை சில நாட்களுக்கு முன்னர் வரை கூறி வந்தது.
இந்தநிலையில், நேற்று பாகிஸ்தானிடம் போர் விமானங்களைக் கொள்வனவு செய்யும் உடன்பாட்டில் சிறிலங்கா கையெழுத்திட்டுள்ளது.
இதன்படி, எட்டு ஜே.எவ்-17 போர் விமானங்கள் அடுத்த ஆண்டுக்குள் சிறிலங்கா விமானப்படைக்கு வழங்கப்படும்.
இந்த இணக்கப்பாட்டுக்கு பாகிஸ்தான் ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளன.
அதேவேளை, இந்த இணக்கப்பாடு இந்தியாவுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக பாகிஸ்தான் ருடே செய்தி வெளியிட்டுள்ளது.