மேலும்

நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு வெளிநாட்டவரின் உதவி தேவையில்லை – சிறிலங்கா

maheshini-kolonneசிறிலங்காவின் நல்லிணக்கச் செயற்பாடுகளை முடுக்கி விடுவதற்கு, அமைதி ஏற்பாட்டாளர் என்ற பெயரில் எந்த வெளிநாட்டவரின் உதவியும் தேவையில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பில் நடக்கும் பொருளாதார மன்ற மாநாட்டில் பங்கேற்க பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் ரொனி பிளேயர் சிறிலங்கா வந்துள்ளார்.

இவர் சிறிலங்காவின் நல்லிணக்க முயற்சிகளில் ஏற்பாட்டாளராக பங்கேற்கவுள்ளதாக பரவலான ஊகங்கள் வெளியாகியிருந்தன.

இந்தநிலையில், நேற்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும், ரொனி பிளேயருக்கும் இடையிலான பேச்சுக்கள் இடம்பெற்றிருந்தன.

எனினும், ரொனி பிளேயர் சிறிலங்காவின் நல்லிணக்க செயற்பாடுகளில் ஈடுபடமாட்டார் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மகேஷினி கொலன்னே தெரிவித்துள்ளார்.

“தேசிய நல்லிணக்க  செயற்பாடுகள் அனைத்தும் அரசாங்கத்தின் கீழேயே இடம்பெறுகின்றன. அதன் அனைத்து அரசியல் செயற்பாடுகளுக்கும் அரசாங்கமே பொறுப்பு.

நல்லிணக்கச் செயற்பாடுகளில் ரொனி பிளேயர் ஆலோசகராகப் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுவதில் உண்மையில்லை.

நாட்டில் தற்போது போர் நடக்கவில்லை எனவே,வெளிநாட்டு அமைதி ஏற்பாட்டாளர்களின் தலையீடு எமக்குத் தேவையில்லை.

எனக்குத் தெரிந்தவரையில் சிறிலங்காவின் நல்லிணக்க செயற்பாடுகளில் ரொனி பிளேயரின் தலையீடு இருக்காது.

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் ரொனி பிளேயரை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்துள்ளார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் அவர் கதிர்காமர் நினைவுரை ஆற்றுவதற்கு கொழும்பு வந்திருந்த போதும், மங்கள சமரவீர சந்தித்தார்.

அவர் ஓய்வுபெற்று ஒரு வாரத்துக்குப் பின்னர் சுற்றுலா வந்திருந்த போதும், மங்கள சமரவீர சந்தித்திருந்தார்.

எனினும் சிறிலங்காவின் நல்லிணக்க செயற்பாடுகளில் அதிகாரபூர்வ பங்கை ஆற்றுவது குறித்து மங்கள சமரவீரவோ, ரொனி பிளேயரோ எத்தகைய கலந்துரையாடலையும் மேற்கொள்ளவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *