மேலும்

ஞானசார தேரருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிடியாணை

பொதுபல சேனாவின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்து ஒக்டோபர் 1 ஆம் நாள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு, மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று  உத்தரவிட்டுள்ளது.

சட்டமா அதிபர் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​ஞானசார தேரர் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையில் இருந்த அவருக்கு வழங்கப்பட்ட சிறிலங்கா அதிபரின் மன்னிப்பு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஞானசார தேரர் மீது விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை நடைமுறைப்படுத்துமாறு உத்தரவிட மேல்முறையீட்டு நீதிமன்றத்திடம் சட்டமா அதிபர்  கோரியுள்ளார்.

நீதிபதிகள் மாயாதுன்ன கொரியா மற்றும் லக்மாலி கருணநாயக்க ஆகியோர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வின் முன் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, ​​ஞானசார தேரருக்காக  முன்னிலையான சட்டவாளர்  அனுர மெட்டெகொட, தனது கட்சிக்காரர் உடல்நலக்குறைவு காரணமாக நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என்றும்,  சட்டமா அதிபரின் மனுவைப் படித்து வாதங்களை முன்வைக்க கூடுதல் அவகாசம் தருமாறும்  நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இருப்பினும், சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சட்டவாளர் சஜித் பண்டார, இந்த வழக்கு ஒரு குற்றவியல் வழக்கு சம்பந்தப்பட்டது எனச் சுட்டிக்காட்டி, குற்றம்சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில்  முன்னிலையாகத் தவறினால் பிடியாணை பிறப்பிக்கப்பட வேண்டும் எனக் கோரினார்.

இதையடுத்து, ​​மேல்முறையீட்டு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து, ஞானசார தேரரை ஒக்டோபர் 1 ஆம் நாள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு  உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *