தியாகதீபம் திலீபன் உருவச் சிலை அகற்றப்பட்டதைக் கண்டித்து நல்லூரில் போராட்டம்
நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபன் நினைவிடத்தில் வைக்கப்பட்டிருந்த உருவச் சிலையை சிறிலங்கா காவல்துறையின அகற்றியதைக் கண்டித்தும், அந்தச் சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 5 மணியளவில் தியாக தீபம் திலீபன் நினைவிடம் முன்பாக இந்தப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், மதகுருமார், பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
அதேவேளை, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் ஒருவரின் சிலையை அமைப்பது அல்லது நினைவு கூர முடியாது என்பதால், நல்லூர் ஆலயத்திற்கு அருகில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் சிலை அகற்றப்பட்டதாகவும், இது தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிமன்றில் அறிக்கையிடப்படவுள்ளதாகவும் சிறலங்கா காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த சிலையை அங்கு வைப்பதற்கு நேற்று வரை மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டதாகவும், உரிய காலத்திற்கு பின்னர் அந்த சிலை அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா காவல்துறை குறிப்பிட்டுள்ளது.




