இந்தியப் பயணத்தை முடித்து நாடு திரும்பினார் சிறிலங்கா கடற்படைத் தளபதி
சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னான்டோவின் இந்தியப் பயணம், சிறிலங்கா கடற்படையின் திறன் மேம்பாடு மற்றும் பயிற்சிக்கான கூடுதல் வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.
சிறிலங்கா கடற்படைத் தளபதியின் இந்தியப் பயணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில்,
சிறிலங்கா கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, இந்திய கடற்படைத் தளபதியின் அழைப்பின் பேரில் மேற்கொண்ட மூன்று நாள் அதிகாரபூர்வ இந்தியப் பயணத்தை நிறைவு செய்துள்ளார்.
மூத்த இந்திய பாதுகாப்பு மற்றும் இராணுவ அதிகாரிகளுடன் தொடர்ச்சியான மூலோபாய கலந்துரையாடல்களை நடத்திய பின்னர், வைஸ் அட்மிரல் பெர்னாண்டோ ஓகஸ்ட் 30ஆம் நாள் சிறிலங்கா திரும்பினார்.
ஓகஸ்ட் 27ஆம் நாள் புதுடெல்லியில் உள்ள சவுத் புளொக்கில் அமைந்துள்ள இந்திய கடற்படைத் தலைமையகத்திற்குச் சென்ற சிறிலங்கா கடற்படைத் தளபதிக்கு சம்பிரதாய அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இந்திய கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதனுடன் அதிகாரபூர்வ சந்திப்பு இடம்பெற்றது.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு ஆதரவாக, இரு கடற்படைகளுக்கும் இடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.
மேலும், பயிற்சி வாய்ப்புகள் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களை விரிவுபடுத்துவது குறித்தும், இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பிற துறைகள் குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
புதுடெல்லியில் வைஸ் அட்மிரல் பெர்னாண்டோ, இந்தியாவின் பாதுகாப்புப் படைத் தலைமைத் தளபதி ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி, பாதுகாப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங், விமானப் படைத் துணைத் தலைமைத் தளபதி ஏர் மார்ஷல் அஷுதோஷ் தீட்சித் மற்றும் பாதுகாப்புத் தொழில் துறைப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தினார்.
இந்தக் கூட்டங்களில் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, கூட்டுப் பயிற்சித் திட்டங்கள் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் வான் மற்றும் கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்துக் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.
கடற்படைப் பயிற்சி மற்றும் தொழில்முறை மேம்பாட்டில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, வைஸ் அட்மிரல் பெர்னாண்டோ, கேரளாவின் கொச்சியில் உள்ள இந்தியாவின் தெற்கு கடற்படைத் தலைமையகத்தில், அதன் தலைமைத் தளபதியான வைஸ் அட்மிரல் சமீர் சக்சேனாவையும் சந்தித்தார்.
தற்போதுள்ள கடற்படைப் பயிற்சிப் பரிமாற்றத் திட்டங்கள் மற்றும் மேலும் பயிற்சி முயற்சிகளை அறிமுகப்படுத்தி விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளனர்.
இந்திய கடற்படையின் பயிற்சி மையமான ஐ.என்.எஸ். துரோணாச்சார்யாவில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. அங்குதான் சிறிலங்கா கடற்படைத் தளபதி, முன்னர் நீண்ட தூர பீரங்கி மற்றும் ஏவுகணைப் பயிற்சியை முடித்திருந்தார்.
இந்தப் பயணம், சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதோடு, சிறிலங்கா கடற்படையின் திறன் மேம்பாடு மற்றும் பயிற்சிக்கான கூடுதல் வாய்ப்புகளையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பிற்கான முக்கியப் பங்குதாரர்களாக இருப்பதால், இரு கடற்படைகளுக்கும் இடையிலான இந்த மேம்பட்ட ஒத்துழைப்பு, பிராந்தியத்தில் அமைதி மற்றும் உறுதித்தன்மையை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



