மேலும்

அனைத்துலக பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்

சிறிலங்காவில் அனைத்துலக பங்களிப்புடன் கூடிய வலுவான பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கு, அனைத்துலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என, மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தியப் பணிப்பாளர் எலைன் பியர்ஸன் (elaine pearson) தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நேற்று நடைபெற்ற  நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்தகால மீறல்களால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுடன் தோளோடு தோள் நிற்பதற்கும், இந்தத் தருணத்தை நினைவு கூருவதற்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் இங்கே நிற்கவேண்டியது மிக அவசியமாகும்.

சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்டப்போரில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.

ஆனால் 17 ஆண்டுகள் கடந்தும் இன்னமும் பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படவில்லை.

பல குடும்பங்கள் இப்போதும் அவர்களது அன்புக்குரியவர்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்,  அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்து கொள்வதற்காகக் காத்திருக்கிறார்கள்.

இந்த மீறல்களை நிகழ்த்திய குற்றவாளிகள் என்றேனுமொரு நாள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

பொறுப்புக்கூறலை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் அந்தத் தீர்மானங்கள் மாத்திரம் போதாது.

மாறாக அனைத்துலக பங்களிப்புடன் கூடிய வலுவான பொறுப்புக்கூறல் பொறிமுறையைக் கோரி அனைத்துலக நாடுகளின் அரசாங்கங்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி மிக நீண்டகாலமாகத் தாமதிக்கப்பட்டிருப்பதாகவே நான் கருதுகிறேன்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் உரையாடும்போது, அவர்கள் வெகுவாக சோர்வடைந்திருப்பதை உணரமுடிகிறது.

அவர்கள் இன்னமும் பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படுவதை விரும்புகிறார்கள். இத்தகைய மீறல்கள் மீண்டும் இடம்பெறாது என்பதற்கான உத்தரவாதமே அதுவாகும்.

தற்போதைய அரசாங்கம் கூட, ஆட்சிபீடம் ஏறுவதற்கு முன்பதாகப் பொறுப்புக்கூறல் குறித்து பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது.

அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய நேரம் இதுவாகும்.

17 ஆண்டுகளின் பின்னராவது ஏதோவொரு வடிவில் பொறுப்புக்கூறல் நிறைவேற்றப்பட்டிருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டிய முன்னுரிமைக்குரிய பல விடயங்கள் இருப்பதை நான் புரிந்து கொள்கிறேன்.

ஆனால் சிறிலங்கா வரலாற்றின் இந்த இருண்ட அத்தியாயத்திலிருந்து நாடு முன்நோக்கிப் பயணிக்க வேண்டுமானால், இந்த விவகாரத்துக்கு அரசாங்கம் முன்னுரிமையளிக்க வேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தியப் பணிப்பாளர் எலைன் பியர்ஸன்  வலியுறுத்தியுள்ளார்.

சுவிஸ் மனித உரிமைகள் இல்லத்தின் பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

நினைவேந்தல் நிகழ்வின் பின்னர், மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தியப் பணிப்பாளர் எலைன் பியர்ஸன் உள்ளிட்ட சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.

படங்கள்- குமணன் (எக்ஸ் தளம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *