மேலும்

இம்மாத இறுதிக்குள் பணவீக்கம் 9 சதவீதத்தை தாண்டும்

தற்போது 8.3 சதவீதமாக உள்ள சிறிலங்காவின் பணவீக்கம், இந்த மாத இறுதியில் 9 சதவீதத்தைத் தாண்டும் என்று, சிறிலங்கா மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க  தெரிவித்தார்.

மத்திய வங்கியின் நாணயக் கொள்கைக் குழு கூட்டத்தைத் தொடர்ந்து, நேற்று காலை மத்திய வங்கி வளாகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பணவீக்கம் எதிர்பார்த்ததை விட அதிக மட்டத்தில் நீடிக்கும் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன.

இந்த மாத இறுதியில் அது 9 சதவீதத்தைத் தாண்டி, வரும் மாதங்களிலும் அதே அளவிலோ அல்லது அதைவிடச் சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம்

மேற்காசியாவில் நிலவும் மோதல் எதிர்பார்த்ததை விட நீண்டகாலம் நீடித்ததே பணவீக்கம் அதிகரிப்பதற்குக் காரணம்.

இந்த மோதல் விரைவில் முடிவுக்கு வரும் என்றும், எரிபொருள் விலைகள் சீரடையும் என்றும் நாங்கள் எதிர்பார்த்தோம்.

ஆனால், மிக அண்மைக் காலம் வரை விலைகள் உயர் மட்டத்திலேயே இருந்தன. இதன் விளைவாக, கடந்த மாதம் பணவீக்கம் எதிர்பார்த்ததை விட அதிகமாக உயர்ந்தது.

அதிகரித்து வரும் பணவீக்க அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய வங்கி தனது நாணயக் கொள்கையை மேலும் இறுக்கியுள்ளது. இதன்படி, முக்கிய கொள்கை வட்டி வீதத்தை 8.75 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக, அதாவது 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது.

பணவீக்கத்தை, மத்திய வங்கியின் இலக்கான 5 சதவீதத்திற்கு மீண்டும் கொண்டு வருவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.

பணவீக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது அதிகரித்திருப்பதாலும், குறுகிய காலத்தில் மேலும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாலும், கொள்கை வட்டி வீதத்தை உயர்த்த நாணயக் கொள்கைக் குழு தீர்மானித்தது.

பணவீக்கத்தைச் சீரான நிலைக்குக் கொண்டு வர நாணயக் கொள்கையை இறுக்குவது அவசியமாகும்.

எனவே, கொள்கை வட்டி வீதத்தை 8.75 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக, 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

பணவீக்கம் பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். ஆனால் அதன் காரணம் எதுவாக இருந்தாலும், அது இறுதியில் மக்களின் வாங்கும் திறனைக் குறைத்து விடுகிறது.

இருப்பினும், பணவீக்கத்தை மீண்டும் மத்திய வங்கியின் இலக்கான 5 சதவீதத்திற்குள் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் சிறிலங்கா மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *