மேலும்

எவ்பிஐ அதிகாரிகளை அழைத்தது யார்?- நழுவும் சிறிலங்கா சட்ட அமுலாக்க அமைப்புகள்

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மூலம்,  சிறிலங்கா காவல்துறை மா அதிபர் எவ்பிஐ உதவியைக் கோரியிருந்த போதிலும், ஆறு அமெரிக்க புலனாய்வுஅதிகாரிகள் சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பான சட்ட அதிகாரம் மற்றும் நிர்வாக நடைமுறைகள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

இந்தக்குழுவை தாங்கள் அழைக்கவில்லை என்று சிறிலங்காவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறிலங்கா காவல்துறை, பொது பாதுகாப்பு அமைச்சின் நிர்வாக அதிகார வரம்பின் கீழ் உள்ளபோதிலும், தனது அமைச்சு எவ்பிஐயின் உதவியைக் கோரவில்லை என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, ‘தெரிவித்துள்ளார்.

இருப்பினும், காவல்துறைமா அதிபர் அமெரிக்கத் தூதரகம் மூலம்  எவ்பிஐ உதவியைக் கோரியிருந்ததை, காவல்துறை ஊடகப் பேச்சாளர் எவ். யூ. வூட்லர் உறுதிப்படுத்தினார்.

இந்தக் கோரிக்கை காவல்துறை மா அதிபரிடம் இருந்து விடுக்கப்பட்டதா என்று வினவப்பட்டபோது, வூட்லர் ஆம் என்று பதிலளித்தார்.

இந்த முரண்பட்ட நிலைப்பாடுகள், சிறிலங்கா அதிகார வரம்பிற்குள் நடத்தப்படும் விசாரணைகளில் ஒரு வெளிநாட்டு சட்ட அமுலாக்க அமைப்பின் ஈடுபாட்டைக் கோருவதற்கு முன்னர், காவல்துறைமா அதிபர் பொது பாதுகாப்பு அமைச்சுடன் கலந்தாலோசித்தாரா அல்லது தேவையான நிர்வாக அனுமதியைப் பெற்றாரா என்பது குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன.

சிறிலங்கா அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரில் எவ்பிஐ குழுவின் வருகை ஏற்பாடு செய்யப்பட்டதாக அமெரிக்க தூதரகம் அறிவித்திருந்த நிலையில் இந்த சர்ச்சை எழுந்துள்ளது.

ஆறு எவ்பிஐ அதிகாரிகள் சிறிலங்கா காவல்துறை தலைமையகத்திற்கு வருகை தந்து, உள்ளூர் புலனாய்வு அதிகாரிகளுக்கு ஒரு பயிற்சி அமர்வை நடத்தியதாக வூட்லர் மேலும் உறுதிப்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, எவ்பிஐ அதிகாரிகள் சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்கவை  மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்; அப்போது சுமார் 30 நிமிடங்கள் கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

எவ்பிஐயின் ஈடுபாடு குறித்து தங்கள் திணைக்களத்திடம் கலந்தாலோசிக்கப்படவில்லை என்பதை சட்டமா அதிபர் திணைக்களத்துடன் இணைக்கப்பட்ட – பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மூத்த அதிகாரி,  உறுதிப்படுத்தினார்.

“எவ்பிஐயின் ஈடுபாடு குறித்து எங்களிடம் கலந்தாலோசிக்கவோ அல்லது தெரிவிக்கப்படவோ இல்லை. அவர்கள் நாட்டிற்கு வந்த பின்னரே நாங்கள் இதை அறிந்தோம். அவர்கள் மரியாதை நிமித்தமாக மட்டுமே சந்தித்தனர்,” என்று அந்த அதிகாரி கூறினார்.

சிறிலங்காவுக்குள் எவ்பிஐக்கு சுதந்திரமான புலனாய்வு அதிகார வரம்பு இல்லை என்றும், உள்ளூர் சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கு தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் நிபுணத்துவத்தை வழங்குவதோடு மட்டுமே அதன் ஈடுபாடு நின்று விடும் என்றும் அந்த அதிகாரி வலியுறுத்தினார்.

மின்னணு சாதனங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள் அல்லது பிற விசாரணைப் பொருட்கள் எவ்பிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுமா என்று கேட்கப்பட்டபோது, அந்த மூத்த அதிகாரி அதிகார வரம்புக் கட்டுப்பாடுகளைக் காரணம் காட்டி, எதிர்மறையாகப் பதிலளித்தார்.

சிறிலங்காவின் 2002-ஆம் ஆண்டின் 25-ஆம் இலக்க ‘குற்றவியல் விவகாரங்களில் பரஸ்பர உதவிச் சட்டம்’ (2018-ஆம் ஆண்டின் 24-ஆம் இலக்கச் சட்டத்தினால் திருத்தப்பட்டது) மற்றும் ‘குற்றச் செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான சட்டம்’ (2025-ஆம் ஆண்டின் 5-ஆம் இலக்கச் சட்டம்) ஆகியவற்றின் கீழ், குற்றவியல் விசாரணைகளில் அனைத்துலக ஒத்துழைப்புக்கு இடமுள்ளது.

2002-ஆம் ஆண்டின் சட்டத்தின் பிரிவு 4, நீதி அமைச்சின் செயலாளரை ‘பரஸ்பர சட்ட உதவிக்கான மத்திய அதிகார அமைப்பாக’ (Central Authority) நியமிக்கிறது.

பிரிவு 5, முறையான கோரிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கான நடைமுறைகளை வரையறுப்பதுடன், இத்தகைய கோரிக்கைகள் நேரடியாக உரிய அதிகார அமைப்புகளுக்கு அனுப்பப்படும் பட்சத்தில், அது குறித்து மத்திய அதிகார அமைப்பிற்குத் தெரிவிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது.

மேலும், பிரிவு 13பி-இன் கீழ், சிறிலங்கா மற்றும் வெளிநாட்டு புலனாய்வாளர்கள் இணைந்து விசாரணைகளை மேற்கொள்வதற்கான சட்டக் கட்டமைப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், ‘குற்றச் செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான சட்டத்தின்’ பிரிவு 55(1)(எவ்), உரிய அனுமதியுடன், சிறிலங்கா புலனாய்வாளர்கள் வெளிநாட்டு சட்ட அமுலாக்க அமைப்புகளுடன் இணைந்தோ அல்லது அவர்களின் உதவியுடனோ குற்றச் செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளை நடத்த வழிவகை செய்கிறது.

இருப்பினும், தற்போது இடம்பெறும் எவ்பிஐஇன் ஈடுபாடானது, இந்தச் சட்ட விதிகளின் கீழ் வருகிறதா, அல்லது இது காவல்துறைக்கு இடையிலான ஒரு தனிப்பட்ட ஒத்துழைப்பு ஏற்பாடா, அல்லது தொழில்நுட்ப உதவியை மட்டுமே நோக்கமாகக் கொண்ட ஒரு ஒப்பந்தமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

வெளிநாடுகளில் தங்களுக்குச் சுதந்திரமான சட்ட அமுலாக்க அதிகாரங்கள் இல்லை என்பதையும், தாங்கள் அந்தந்த நாட்டு அதிகாரிகளுடன் இணைந்துதான் செயல்பட வேண்டும் என்பதையும் எவ்பிஐயே ஒப்புக்கொள்கிறது.

சிறிலங்காவில் வெளிநாட்டவர்கள் சம்பந்தப்பட்டதாகக் கருதப்படும் சைபர் குற்றச் செயல்கள் குறித்த கவலைகள் அதிகரித்து வரும் சூழலில், எவ்பிஐஇன் இந்த வருகை இடம்பெறுகிறது.

ஓகஸ்ட் மாதம் காவல்துறையினர் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, 2026-ஆம் ஆண்டில் சைபர் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் 1,093 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது 2024-இல் 573 ஆகவும், 2025-இல் 26 ஆகவும் இருந்தது.

கைது செய்யப்பட்டவர்களில் சீன நாட்டவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்; இவர்களுடன் இந்தியா, வியட்நாம் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்களும் உள்ளனர்.

மியான்மர் மற்றும் கம்போடியாவிலும் இது போன்ற நாடுகடந்த மோசடி வலைப்பின்னல்கள் கண்டறியப்பட்டுள்ளன. அனைத்துலக இணைய மோசடிகளை முறியடிப்பதில் எவ்பிஐ ஏற்கனவே பிராந்திய சட்ட அமுலாக்க அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *