சர்ச்சைக்குரிய இரு சட்டமூலங்களையும் மீளப் பெறுமாறு சிறிலங்கா அதிபருக்கு கடிதம்
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம், ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டமூலம்’ ஆகியவற்றைத் திரும்பப் பெறுமாறு, சிறிலங்கா அதிபரிடம் ‘சர்வஜன நீதி ‘ (Justice for All) அமைப்பு, கோரிக்கை விடுத்துள்ளது.
நவம்பர் 19 நாள், 29 பிரமுகர்கள் கையொப்பமிட்டு, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
அதில், இந்த இரண்டு சட்டமூலங்கள் குறித்து மனித உரிமைகள் ஆர்வலர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று சிறிலங்கா அதிபர் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பை வரவேற்பதாகவும், அந்த அறிவிப்பின் அடிப்படையில் தாங்கள் இந்தக் கடிதத்தை எழுதுவதாக வும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சிறிலங்காவில் மனித உரிமைகளுக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் தீங்கு விளைவிக்கும் சரத்துகளைக் கொண்டுள்ள இந்த இரண்டு சட்டமூலங்களையும் திரும்பப் பெறுமாறு நாங்கள் உங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை’ ரத்து செய்ய வேண்டும் என்று பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
இந்த இரண்டு சட்டமூலங்களிலும் மிகக் கடுமையான, அடக்குமுறை சார்ந்த சரத்துகள் உள்ளன. இவை, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் காணப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்வதற்கு வழிவகுக்கக் கூடும்; ஜனநாயக நாட்டில் இத்தகைய சட்டங்களுக்கு இடமில்லை.
சட்ட சீர்திருத்தங்கள் குறித்து ஆலோசனை நடத்துவதற்கான சிறிலங்கா அதிபரின் முன்முயற்சியை வரவேற்கும் அதேவேளையில், வெளிப்படையான மற்றும் நேர்மையான கலந்துரையாடலை எதிர்பார்க்கிறோம்.
எங்கள் கவலைகளை முன்வைக்க சிறிலங்கா அதிபருடன் விரைவில் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்யுமாறும் கோருகிறோம்.
நவம்பர் 16 அன்று நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலேயே இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
கொழும்பு 8-இல் உள்ள அனைத்துலக கொள்கை ஆய்வு மையம் – வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலுக்கு, நவம்பர் 9 நாளிட்ட கடிதத்தின் மூலம், சிறிலங்கா அதிபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது; அவர் நேரில் வர இயலாத பட்சத்தில், தமக்குப் பதிலாக ஒரு பிரதிநிதியை அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
அரசாங்கத்தின் பிற உறுப்பினர்களுக்கும், 2022-2023 காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட பிரசாரத்தில் பங்கேற்ற மற்றவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
முந்தைய அந்தக் கடிதத்தில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, 2022- 2023 ஆம் ஆண்டுகளில் நாட்டின் அனைத்து 25 மாவட்டங்களிலும் மகையொப்ப இயக்கம் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகளைத் தாங்கள் மேற்கொண்டதாக ‘சர்வ ஜன நீதி’ அமைப்பு குறிப்பிட்டிருந்தது.
அந்தப் பிரசாரத்திற்கு சிறிலங்கா அதிபரும், அவரது கட்சியின் மூத்த உறுப்பினர்களும் ஆதரவு அளித்திருந்ததை அது நினைவுபடுத்தியுள்ளது.
“அந்தக் காலகட்டத்தில், நாடு முழுவதும் நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டது உட்பட, நீங்களும் உங்கள் கட்சியின் மூத்த உறுப்பினர்களும் வழங்கிய ஆதரவையும் ஒற்றுமையையும் நாங்கள் நன்றியுடன் நினைவுகூருகிறோம்” என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் சமூகம், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் பிற பங்குதாரர்களை ஈடுபடுத்துவது இந்தச் சட்டத்தை ரத்து செய்வதற்கும் இரண்டு சட்டமூலங்களைப் பற்றி விவாதிப்பதற்கும் இன்றியமையாதது என்று அது கூறியுள்ளது.
சிறிலங்காவின் சட்ட சீர்திருத்தத்தில், மனித உரிமைகள், பொருளாதாரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றுக்கான தாக்கங்களுடன், இத்தகைய ஆக்கபூர்வமான ஈடுபாடு முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அந்த அமைப்பின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தில், கரு ஜயசூரிய, பேராசிரியர் ஜயதேவ உயங்கொட, பேராசிரியர் சாவித்திரி குணசேகர, கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன, கலாநிதி தினேஷா சமரரத்ன, எரான் விக்கிரமரத்ன, சந்திர ஜயரத்ன, எம்.ஏ. சுமந்திரன், ஜெஹான் பெரேரா, சாலிய பீரிஸ் , றோகண ஹெட்டியாராச்சி , ஏ.எம்.பாயிஸ், லக்சான் டயஸ், சாணக்கியன் இராசமாணிக்கம், எம். அமித பிரியந்தி, பவானி பொன்சேகா, ஹெஜாஸ் ஹிஸ்புல்லா, எர்மிசா டெகல், கெஹான் குணதிலக்க, நடிஷானி பெரேரா, சந்துன் துடுகல, ஜெருஷா க்ரோசெட்-தம்பையா, மஹேஷிரா ஹேரத், பெனிஸ்லஸ் துஷான், ஜீவரத்தினம் சுரேஸ், சம்பத் சமரகோன், செல்வராஜா ராஜசேகர், மஞ்சுள கஜநாயக்க மற்றும் நபீலா இக்பால் உள்ளிட்டவர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

