கொழும்பு வரும் ரஷ்ய சட்டமா அதிபர்- பாதுகாப்புக் குறித்து சிக்கல்
ரஷ்ய சட்டமா அதிபர் அலெக்சாண்டர் குட்சன் (Aleksandr Gutsan), அடுத்தவாரம் சிறிலங்காவிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
சிறிலங்கா சட்டமா அதிபரின் அழைப்பின் பேரில், தனிப்பட்ட ஜெட் விமானம் மூலம் ரஷ்ய சட்டமா அதிபரின் இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது.
எனினும், பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, ஹல்ப்ட்ஸ்டொப் பகுதியில் உள்ள சட்டமா அதிபர் பணியகத்தில் , சிறிலங்கா சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்கவைச் சந்திக்க ரஷ்ய சட்டமா அதிபர் மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்ய சட்டமா அதிபர் வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளைச் சந்தித்து, வழக்குத் தொடருதல் தொடர்பான விடயங்கள் குறித்துப் பேசவுள்ளார்.
எனினும், இந்தச் சந்திப்பு எங்கு நடைபெறும் என்பது இன்னும் வெளியிடப்படவில்லை.
ரஷ்ய சட்டமா அதிபர் வருகைக்கு முன்னதாக, கொழும்பு வந்த அவரது பாதுகாப்பு குழுவினர், சட்டமா அதிபர் திணைக்களத்திலோ அல்லது இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கோ அவர் செல்வது பாதுகாப்பானதல்ல என்று அறிவுறுத்தியுள்ளனர்.
