2 மாதங்களுக்குள் வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறை
வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களைக் கையாளுவதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறையை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இறுதி செய்யப்படும் என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பெருங்கடலுக்கு ஏற்படக் கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தலைக் காரணம் காட்டி, சீன ஆய்வுக் கப்பல்கள் சிறிலங்காவின் கடற்பகுதிக்கு வருவதை அமெரிக்காவும் இந்தியாவும் கடுமையாக எதிர்த்தன.
இதைத் தொடர்ந்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆய்வுக் கப்பல்களைக் கையாளுவதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறையை உருவாக்குவதில் சிறிலங்கா இழுபறி நிலையில் உள்ளது.
“நாங்கள் நிலையான செயல்பாட்டு நடைமுறையை இறுதி செய்து சட்டமா அதிபரிடம் வழங்கியுள்ளோம்,” என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் சீனா தொடர்பான புவிசார் அரசியல் பிரச்சினைகள் காரணமாக, சிறிலங்கா தனது கடல் எல்லைக்குள் வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களை அனுமதிப்பதில் இராஜதந்திர சவால்களை எதிர்கொண்டு வருகிறது.
இந்தியப் பெருங்கடலுக்கு சீன ஆய்வுக் கப்பல்கள் வருகை தருவது குறித்த இந்திய கவலைகளுக்கு மத்தியில், கடல்சார் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திட சிறிலங்காவும் சீனாவும் ஒப்புக்கொண்டுள்ளன.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், சிறிலங்கா ஒரு பாதுகாப்பு ஒத்துழைப்பு புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திட்டது.
அதில், இரு அண்டை நாடுகளும் பரஸ்பர ஒப்புதலின் பேரில் கடல்சார் மற்றும் பிற துறைகளில் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் என்று, விரிவாகக் கூறப்படாமல், தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எந்தவொரு வெளிநாட்டுக் கப்பல்களின் வருகை குறித்தும் சிறிலங்கா, இந்தியாவிடம் அனுமதி பெறவோ அல்லது அதற்குத் தெரிவிக்கவோ தேவையில்லை என்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கடந்த ஆண்டு கூறியிருந்தார்.
இருப்பினும், இந்தியாவுடன் சிறந்த உறவுகளைப் பேணுவதற்காக சில முந்தைய அரசாங்கங்கள் இதுபோன்ற நடைமுறைகளைக் கடைப்பிடித்து வந்துள்ளதாக அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
