நீதிவானிடம் சாட்சியமளிக்க சுரேஷ் சாலே விருப்பம்- ஒரு மாத அவகாசம் வழங்கிய நீதிமன்றம்
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் அரச புலனாய்வு சேவை தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே மீதான தடுப்புக் காவல் உத்தரவை, கொழும்பு கோட்டை நீதிவான் இசுரு நெத்திகுமரா நீடித்து உத்தரவிட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவு நேற்று மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயை கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சந்தேக நபர் சார்பில் முன்னிலையான சட்டவாளர் அசித் சிறிவர்தன, மூன்றாவது சந்தேக நபரான சுரேஷ் சாலே, இந்தச் சம்பவம் தொடர்பாக நீதிவான் முன்னிலையில் வாக்குமூலம் அளிக்க விரும்புவதாக தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த நீதிவான், நீதிமன்ற நடைமுறையின்படி, வாக்குமூலம் அளிக்க அனுமதி கோரும் சந்தேக நபருக்கு, அதுகுறித்த விடயத்தைப் பரிசீலிப்பதற்கு நியாயமான காலஅவகாசம் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்
அதன்படி, மூன்றாவது சந்தேக நபர் அத்தகைய வாக்குமூலத்தை அளிக்க உத்தேசித்துள்ளாரா என்பதைத் தீர்மானிக்க நீதிவான் அவருக்கு ஒரு மாத கால அவகாசத்தை வழங்கினார்.
சந்தேக நபரின் முடிவு குறித்து மே 20 ஆம் நாள் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும், அவர் பகிரங்க நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்றும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
