ஈரானிய கப்பலை திருகோணமலைக்கு கொண்டு செல்வதில் சிக்கல்
சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஈரானிய கடற்படைக் கப்பலான ஐஆர்ஐஎஸ் புஷேர், இன்னமும் கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே நங்கூரமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன் இயந்திரக் கோளாறு தீர்க்கப்படாததால், அதனை திருகோணமலை துறைமுகத்திற்குக் கொண்டு செல்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
ஐஆர்ஐஎஸ் புஷேர் கப்பலையும், அதன் குழுவினரை சிறிலங்கா அரசாங்கம் முறையாகப் பொறுப்பேற்றுள்ளதாக சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தக் கப்பலில் இருந்த 208 பணியாளர்கள் (53 அதிகாரிகள், 84 பயிற்சி அதிகாரிகள், 48 மூத்த மாலுமிகள் மற்றும் 21 மாலுமிகள்) கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் கூறியிருந்தார்.
அவர்கள் இப்போது வெலிசற கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கப்பல் திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படவிருந்த போதும், நேற்று கொழும்பு துறைமுகத்தின் வெளிப்புறத்தில் நங்கூரமிட்டிருந்தது.
அதை இழுத்துச் செல்லாமல் நகர்த்த முடியாது என்று கப்பல் பணியாளர்கள் கூறியுள்ளனர்.
கப்பலில் 12 முதல் 14 பணியாளர்கள் வரை இருப்பதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த மாதிரியான ஒரு கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்த வெளியுறவு அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி தேவை என்ற போதும், கப்பல் வந்த போது, துறைமுக அதிகாரசபைக்கு இரண்டு அனுமதிகளும் வழங்கப்படவில்லை.
கப்பல் ஆரம்பத்தில் இருந்தே சிறிலங்கா கடற்படையின் கட்டுப்பாட்டில் இருந்தது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
