மேலும்

யாழ். பாதுகாப்பு தலைமையகம் மூடப்படவுள்ளதாக கூறப்படுவது பொய்

யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தை அகற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளியாகிய செய்திகள் முற்றிலும் பொய்யானது என்று,  பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகாலசட்ட  நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது தோற்றியுள்ள பதற்ற நிலை தொடர்பாக, சிறிலங்கா அதிபர்  தலைமையில் பாதுகாப்பு சபை கூடி, விரிவாக ஆராயப்பட்டது.

இதற்கமைவாகவே இம்முறையும் அவசரகால சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றுக்கு எதிராக அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தவில்லை.

மக்களுக்கு எதிராக செயற்பட வேண்டிய தேவை எமக்கு கிடையாது.

அவசரகால சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று எதிர்க்கட்சியினர் கூறும் குற்றச்சாட்டை ஆதாரபூர்வமாக நிரூபிக்கவில்லை. வெறும் குற்றச்சாட்டுக்களை மாத்திரமே முன்வைக்கிறார்கள்.

யாழ்ப்பாணம்  பாதுகாப்புப் படைத் தலைமையகத்தை அகற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளியாகிய செய்தி முற்றிலும் பொய்யானது.

குறுகிய அரசியல் இலாபம் தேடும் அரசியல்வாதிகளின் செயற்பாடே இது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணிகள் விடுவிக்கப்படும் போது அனைத்துக் காரணிகளும் விரிவாக ஆராயப்படுகிறது.

தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கியே காணிகள் விடுவிக்கப்படுகின்றன.

பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை நெருக்கடிக்குள்ளாக்கவே ஒரு தரப்பினர் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள் என்றும் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *