சுரேஷ் சாலே எப்படி அரசாங்கங்களை அசைக்கிறார்?
2016 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் நல்லாட்சி அரசாங்கத்தின் போது, சுரேஷ் சாலே என்ற பெயர் நாடு முழுவதும் பரவலாக அறியப்பட்டது.
அந்த நேரத்தில், சாலே இராணுவ புலனாய்வு பணிப்பாளராக பணியாற்றி வந்தார். கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது, அவர் முதலில் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
2015 அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்து, கோட்டாபய ராஜபக்ச, பாதுகாப்புச் செயலர் பதவியில் இருந்து விலகிய போதிலும், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் சிறிசேன, சுரேஷ் சாலேயை, அந்தப் பதவியில் இருந்து நீக்கவில்லை. அவர் இராணுவ புலனாய்வு பணிப்பாளராகவே தொடர்ந்தார்.
சிறிசேன அதிபராக சிறிது நேரத்திலேயே, கோட்டாபய ராஜபக்ச, அவரை அதிகாரப்பூர்வ இல்லத்தில் இரகசியமாகச் சந்தித்தார்.
அவன்ட் கார்ட் சர்ச்சை மற்றும் மிக் விமான கொள்வனவு குற்றச்சாட்டுகள் உட்பட, கோட்டாவுக்கு எதிராக சிறிசேன-ரணில் அரசாங்கம் பல விசாரணைகளைத் தொடர்ந்த காலகட்டத்தில் இது நடந்தது.
கோட்டாபயவை கைது செய்ய புலனாய்வுக் குழுக்கள் தயாராகி வந்த நிலையில், அவர் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் நீதிமன்ற உத்தரவைப் பெற்றார்.
அந்த உத்தரவைத் தொடர்ந்து, அதிபர் சிறிசேன ஒரு ஆச்சரியமான அறிக்கையை வெளியிட்டார். கோட்டாபயவுக்கு ஆதரவாக நீதிமன்றம் எடுத்த முடிவு நீதித்துறையின் சுதந்திரத்தை நிரூபித்துள்ளதாகக் கூறினார்.
பின்னர், அவன்ட் கார்ட் வழக்கு தொடர்பாக கோட்டாபய மற்றும் எட்டு இராணுவத் தளபதிகள் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டபோது, அதிபர் சிறிசேன இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவையும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவையும் கடுமையாக விமர்சித்தார்.
போரை வென்ற போர்வீரர்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதன் மூலம் அவமானப்படுத்தக் கூடாது என்றும், அவர்களை நீதிமன்ற இருக்கைகளில் அமர வைப்பது தேசத்திற்கு அவமானம் என்றும் அவர் வாதிட்டார்.
இந்த உரையின் மூலம், சிறிசேன ரணில் தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராகத் திரும்பினார்.
ராஜபக்ச சகாப்தத்தின் ஊழல்வாதிகள் என்று முன்னர் முத்திரை குத்தப்பட்ட, கோட்டாபய மற்றும் இராணுவத் தளபதிகள் ஒரே இரவில் கதாநாயகர்களாக சித்திரிக்கப்பட்டனர்.
சிறிசேன-ரணில் நிர்வாகத்தை ஆதரித்த, ஐ.தே.க அரசாங்கமும் சிவில் சமூகக் குழுக்களும் குழப்பத்திற்குள் தள்ளப்பட்டன.
சிறிசேன ஒரு அரசியல் குண்டை பற்ற வைத்திருந்தார் – அந்த வெடிப்பு அரசாங்கத்தையே அதிர வைத்தது. ராஜபக்சக்கள் மீண்டும் கதாநாயகர்களாக உருவெடுத்தனர்.
ரணிலுக்கும் ஐ.தே.க.வுக்கும் கிடைத்த தகவல்களின்படி, சிறிசேனவின் கருத்துக்கள் சுரேஷ் சாலே வழங்கிய புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் அமைந்திருந்தன.
கோட்டாபய மற்றும் மூத்த இராணுவ அதிகாரிகளை கைது செய்வது அல்லது விசாரணைக்கு அழைப்பது ஆயுதப் படைகளுக்குள் அரசாங்கத்திற்கு எதிரான அமைதியின்மையைத் தூண்டக் கூடும் என்றும், அத்தகைய பதற்றங்கள் கடுமையான அச்சுறுத்தலாக அதிகரிக்கக் கூடும் என்றும் புலனாய்வுத்துறை எச்சரித்ததாக கூறப்படுகிறது.
இந்த புலனாய்வுத்துறை அறிக்கைக்குப் பயந்தே சிறிசேன, தனது சொந்த அரசாங்கத்தை பகிரங்கமாகத் தாக்கினார் என்று ரணிலின் முகாமுக்குள் நம்பப்பட்டது.
சுரேஷ் சாலே, கோட்டாபய மற்றும் ராஜபக்சக்களின் நலன்களுக்கு ஏற்ப செயற்பட்டதாகவும், சிறிசேன மீது அவர் செல்வாக்கு செலுத்துவதாகவும் ஐ.தே.க. சந்தேகித்தது.
தனிப்பட்ட முறையில், சுரேஷ் சாலேவை உடனடியாக நீக்குமாறு சிறிசேனவை ஐ.தே.க. வலியுறுத்தியது. சிறிசேன ஆட்சிக்கு வருவதற்கு ஆதரவளித்த, சிவில் சமூக செயற்பாட்டாளர்களும், அப்போதைய சக்திவாய்ந்த அமைச்சர் ராஜித சேனாரத்னவும் சாலேவைப் பற்றி பகிரங்கமாக விமர்சனம் செய்தனர்.
புரவேசி பலயாவை பிரதிநிதித்துவப்படுத்தும் பேராசிரியர் சரத் விஜேசூரிய, காமினி வியங்கொட மற்றும் வண. தம்பர அமில தேரர் ஆகியோர், சுரேஷ் சாலேயை நீக்கக் கோரி ஒரு ஊடகச் சந்திப்பை நடத்தினர். ராஜபக்சவினரின் நலன்களுக்கு ஏற்ப, அரசாங்கத்தை கவிழ்க்க அவர் சதி செய்வதாகக் குற்றம்சாட்டினார்.
சாலே யாழ்ப்பாணத்தில் உறுதியற்ற நிலையை உருவாக்க முயற்சிப்பதாகவும், அரசாங்கத்தை சங்கடப்படுத்த முயற்சிப்பதாகவும், ராஜித சேனரத்ன கூறினார்.
அழுத்தங்கள் அதிகரித்த போதிலும், சிறிசேன ஆரம்பத்தில் சாலேயை நீக்க மறுத்து, அவர் துல்லியமான புலனாய்வுத் தகவல்களை வழங்குவதாக வாதிட்டார்.
இருப்பினும், ஐ.தே.க., சிவில் சமூகம், குறிப்பாக அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி.யின் தொடர்ச்சியான அழுத்தங்களை அடுத்து, சிறிசேன இறுதியில் விட்டுக்கொடுத்தார்.
கோட்டாபய சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை ஜே.வி.பி எடுத்திருந்தது. இல்லையெனில், அவர் எதிர்கால அச்சுறுத்தலாக மாறுவார் என்று எச்சரித்தது.
ஜே.வி.பி தலைவர்கள் சிறிசேனவை சந்தித்து, சாலே மூலம் ராஜபக்சக்கள் அவரை கையாள்வதாக வாதிட்டதாக கூறப்படுகிறது. இறுதியில், சாலேயை பதவி விலகுமாறு சிறிசேன கேட்டுக் கொண்டார்.
சாலே விவகாரம், ரணில் அரசாங்கத்தில் முதல் பெரிய விரிசலை ஏற்படுத்தத் தொடங்கியது.
அதன் பின்னர், சிறிசேன கோட்டாபயவுடன் மேலும் மேலும் நெருக்கமாகி, ராஜபக்சக்களுடன் இறுக்கமான உறவுகளை மீண்டும் கட்டியெழுப்ப முயன்றார்.
ஒரு கட்டத்தில், 2019 அதிபர் தேர்தலில் சிறிசேன போட்டியிட்டால், கோட்டாபயவை பிரதமர் வேட்பாளராக முன்மொழிவார் என்று கூறப்பட்டது.
சிறிசேனவின் நெருங்கிய கூட்டாளிகளான எஸ்.பி.திசாநாயக்க மற்றும் ஜோன் செனவிரத்ன ஆகியோர் அதிபராக சிறிசேன, பிரதமராக கோட்டாபய என்ற கருத்தை பகிரங்கமாக முன்வைத்தனர்.
பின்நோக்கிப் பார்க்கும்போது, சிறிசேன-ரணில் அரசாங்கத்தின் முறிவு சாலேயின் சர்ச்சையுடன் தொடங்கியது எனலாம்.
ஜே.வி.பி கணித்தபடி, கோட்டாபய இறுதியில் அதிபரானார். பதவியேற்ற பிறகு அவர், சுரேஷ் சாலேயை, அரச புலனாய்வு சேவையின் தலைவராக நியமித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐ.தே.க.வினால், கோட்டாபய அரசாங்கத்திற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட முதல் பெரிய அரசியல் தாக்குதல், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை மையமாகக் கொண்டிருந்தது.
ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார உள்ளிட்ட, அந்த நேரத்தில் முக்கிய எதிர்க்கட்சி உறுப்பினர்களாக இருந்தவர்கள், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள சூத்திரதாரி அரசாங்கத்திற்குள் இருப்பதாகக் குற்றம்சாட்டினர் – அவர்கள் மறைமுகமாக சாலேயை குறிவைத்தனர்.
“சொனிக்” என்ற வார்த்தையைக் கொண்ட ஒரு மர்மமான செய்தியை அவர்கள் குறிப்பிட்டனர், “சொனிக்” ஒரு மூத்த பாதுகாப்பு அதிகாரி என்று கூறினர்.
இந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுகளைச் சுற்றியே, கோட்டாபய அரசாங்கத்திற்கு எதிரான பொதுமக்களின் கோபம் முதலில் தீவிரமடைந்தது.
கத்தோலிக்க திருச்சபையும் பெரும்பாலும், இதன் அடிப்படையில்தான், நீதிக்கான பரப்புரையை தொடங்கியது.
அரகலய போராட்டங்களுக்கு மத்தியில், கோட்டாபய பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர், ரணில் விக்கிரமசிங்க அதிபரானார். ஹரினும் மனுஷவும் அவரது அரசாங்கத்தில் அமைச்சர்களாக இணைந்தனர்.
ஆனாலும், சுரேஷ் சாலேக்கு எதிராக ரணிலோ அல்லது அவரது நிர்வாகமோ குறிப்பிடத்தக்க வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, அவரைப் பாதுகாத்தனர்.
2016 ஆம் ஆண்டு சாலேயை பதவி நீக்கம் செய்யக் கோரிய அதே ரணிலும் ஐ.தே.க.வும், அவரது பாதுகாவலர்களாக இருந்தனர்.
கத்தோலிக்க சமூகத்தின் கணிசமான ஆதரவுடன் அனுரகுமார திசாநாயக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சாலேயை அரச புலனாய்வு சேவையிலிருந்து நீக்கி, ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள உண்மையான சூத்திரதாரியைக் கண்டுபிடிப்பதாக அவர் உறுதியளித்திருந்தார்.
ஆயினும் சாலேயைப் பதவி நீக்கம் செய்ய அவருக்கு ஒரு மாதம் ஆனது – அவரைக் கைது செய்ய ஒரு முழு ஆண்டு ஆனது. ஏன்?
ஏனென்றால், சுரேஷ் சாலே சாதாரண அதிகாரி அல்ல. அவர் அரசாங்கங்களை அசைக்கக் கூடிய ஒரு அரசியல் குண்டு.
அனுர அதை முழுமையாகப் புரிந்து கொள்கிறாரா என்று இன்னும் தெரியவில்லை.
– உபுல் ஜோசப் பெர்னான்டோ
ஆங்கில மூலம்- மவ்ரட்ட (01.03.2026)
