சீனாவை எதிர்கொள்ள சிறிலங்காவில் கடல்சார் இருப்பை அதிகரிக்கும் இந்தியா
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில், தனது பொருளாதார இருப்பை வலுப்படுத்தவும், சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்ளவும், இந்தியா தொடர்ச்சியான மூலோபாய முதலீடுகள் மற்றும் கூட்டாண்மைகள் மூலம், சிறிலங்காவில் தனது கடல்சார் இருப்பை அதிகரித்து வருகிறது.
அண்மையில், கொழும்பு கப்பல் கட்டும் நிறுவனத்தின் (Colombo Dockyard PLC) கட்டுப்பாட்டுப் பங்குகளை மசகோன் டொக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் கையகப்படுத்தியது, சிறிலங்கா துறைமுகச் சூழலில் இந்தியாவின் பங்கை வலுப்படுத்திய ஒரு முக்கிய நடவடிக்கையாகும்.
இந்த நடவடிக்கைக்கு வலுசேர்க்கும் வகையில், டிரெட்ஜிங் கோர்ப்பரேசன் ஒவ் இந்தியா (Dredging Corporation of India), அதே கப்பல் கட்டும் தளத்துடன் உலர் நிறுத்துதல் (dry docking), பழுதுபார்த்தல் மற்றும் கப்பல் தொகுதி மேம்பாடுகள் ஆகியவற்றுக்காக ஒரு புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளது. இது செயற்பாட்டு ஒருங்கிணைப்பை மேலும் ஆழப்படுத்துகிறது.
இந்தப் பகுதியில் ஆழமாக வேரூன்றிய சீனாவின் இருப்பு, குறிப்பாக அம்பாந்தோட்டை துறைமுகத்தின் மீதான, அதன் 99 ஆண்டு கால குத்தகை ஆகியவற்றின் பின்னணியில் பார்க்கும்போது, இந்த முன்னேற்றங்கள், பிராந்தியத்தில் ஒரு மூலோபாய காலூன்றலைப் பெறுவதற்கும், நிச்சயமற்ற காலங்களில் அதன் விநியோகச் சங்கிலியைப் பாதுகாப்பதற்கும் எடுக்கப்படும் நடவடிக்கைகளைக் குறிக்கின்றன.
பொருட்களைக் கையாளுதல், எரிபொருள் விநியோகம் மற்றும் தற்போது கப்பல் கட்டும் ஆதரவு எனப் பல அடுக்குகளாக வளர்ந்து வரும் இந்த இந்திய இருப்பை, சிறிலங்காவின் துறைமுக உள்கட்டமைப்பில் சீனாவின் முதலீடுகளுக்கு, ஒரு மூலோபாய சமநிலையாக ஆய்வாளர்கள் பார்க்கின்றனர்.
புவிசார் அரசியலுக்கு அப்பாற்பட்டு, முக்கியமான கடல்வழி விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாப்பதற்கும், இந்தியப் பெருங்கடல் முழுவதும் தனது விநியோகத் திறன்களை விரிவுபடுத்துவதற்கும் இந்தியா மேற்கொள்ளும் முயற்சியையும் இது பிரதிபலிக்கிறது என்று அவர்கள் மேலும் கூறுகின்றனர்.
“சிறிலங்காவின் விநியோகத் துறையில் எங்களின் வளர்ந்து வரும் பங்களிப்பு, சீனாவுடனான ஒப்பீட்டில் ஒரு மூலோபாய மாற்றத்தைக் குறிக்கிறது“ என்று அமிகஸ் குரோத் அட்வைசர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகப் பங்குதாரர் சஞ்சீவ் ஜெயின் கூறுகிறார்.
மேலும், அதானியின் கொள்கலன் முனையச் செயற்பாடுகள் மற்றும் ஐஓசியின் எரிபொருள் முனையம் ஆகியவற்றில் காணப்படுவது போல, பொருட்களைக் கையாளுதல் முதல் எரிசக்தி விநியோகங்கள் மற்றும் இப்போது கப்பல் கட்டும் ஆதரவு வரை- இந்தியாவின் பன்முக இருப்பை நாங்கள் காண்கிறோம்.
இந்தியாவின் இருப்பு என்பது வெறும் வாய்ப்புகளைப் பற்றியது மட்டுமல்ல, வர்த்தகத்திற்கு அவசியமான விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாப்பது மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கப்பல் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புத் திறன்களை விரிவுபடுத்துவது பற்றியதுமாகும் என்றும் அவர் கூறினார்.
அதேவேளை, குளோபல் ட்ரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ் நிறுவனத்தின் நிறுவனர் அஜய் சிறிவஸ்தவா கூறுகையில், “சிறிலங்காவில் இந்தியாவின் வளர்ந்து வரும் விநியோக இருப்பு வரவேற்கத்தக்கது.
ஒரு காலத்தில் சீனா துறைமுக உள்கட்டமைப்பில் ஆதிக்கம் செலுத்த முயன்ற ஒரு பிராந்தியத்தில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதை இது குறிக்கிறது.
ஆனால், இந்தியாவின் மிகப்பெரிய முன்னுரிமை அதன் சொந்த துறைமுகங்களைச் சரிசெய்வதாக இருக்க வேண்டும்.” என்கிறார்.
இந்தியத் துறைமுகங்கள் அதிக செலவு மிக்கவையாகவும், குறைந்த திறன் கொண்டவையாகவும் இருப்பதால், இந்தியாவின் கொள்கலன் பொருட்களைக்களில் சுமார் 40 சதவீதம் இன்னும் கொழும்பு, சிங்கப்பூர் மற்றும் போர்ட் கிளாங் போன்ற வெளிநாட்டு மையங்கள் வழியாகவே அனுப்பப்படுகிறது.
சில இந்தியத் துறைமுகங்களில் கப்பல் தொடர்பான கட்டணங்கள் கொழும்பை விட சுமார் 40 சதவீதம் அதிகமாக உள்ளன, மேலும் குறைந்த மிதப்பு ஆழம் காரணமாக பல துறைமுகங்களால் பெரிய கொள்கலன் கப்பல்களைக் கையாள முடிவதில்லை.
இதன் விளைவாக, விநியோகச் செலவுகள் அதிகரித்து, போக்குவரத்து நேரம் நீண்டு, இந்திய வர்த்தகத்திற்காக வெளிநாட்டுத் துறைமுகங்களையே தொடர்ந்து சார்ந்திருக்க வேண்டியுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
சிறிலங்காவின் கடல்சார் மற்றும் எரிசக்தித்துறைகளில் இந்தியாவின் ஈடுபாடு புதியதல்ல.
ஐஓசி நிறுவனம் 2003-ஆம் ஆண்டிலேயே தனது துணை நிறுவனமான லங்கா ஐஓசி மூலம் தீவு நாட்டில் நுழைந்து, திருகோணமலைத் துறைமுகத்தில் எரிபொருள் நிலையங்களின் வலையமைப்பையும் ஒரு பெரிய எண்ணெய் முனையத்தையும் நிறுவியது.
மிக அண்மையில், 2025-ஆம் ஆண்டில், அதானி போர்ட்ஸ் மற்றும் சிறப்புப் பொருளாதார வலயம், 800 மில்லியன் டொலர் மதிப்பிலான திட்டமான கொழும்பு மேற்கு சர்வதேச முனையத்தைச் செயற்பாட்டுக்குக் கொண்டு வந்தது.
இந்தத் திட்டம் தனது முதல் ஆண்டிலேயே சுமார் பத்து இலட்சம் கொள்கலன்களைக் கையாண்டு, அதன் கொள்ளளவையும் பொருட்களைக் கையாளும் திறனையும் வேகமாக அதிகரித்துள்ளது.
வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவின் பிராந்திய இருப்பை வலுப்படுத்தினாலும், “நீடித்த கடல்சார் சக்திக்கு, உலகளவில் போட்டித்தன்மை வாய்ந்த உள்நாட்டு பொருட்களைக் மாற்று மையங்கள், குறைந்த துறைமுகக் கட்டணங்கள் மற்றும் உள்நாட்டில் நவீன ஆழ்கடல் உள்கட்டமைப்பு ஆகியவை தேவைப்படும் என்று சிறிவஸ்தவா மேலும் கூறியுள்ளார்.
ஆங்கில மூலம் – T E Raja Simhan
வழிமூலம் – The hindu business line
