சிறிலங்கா அதிபரின் முன்மொழிவை நிராகரித்தது அரசியலமைப்பு சபை
கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவினால் முன்மொழியப்பட்டவரை, அரசியலமைப்பு சபை நிராகரித்துள்ளது.
சூலானந்த விக்கிரமரத்ன ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, கணக்காய்வாளர் நாயகம் பதவி, 42 நாட்களாக வெற்றிடமாக உள்ளது.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கவலை வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையில், சபாநாயகர் தலைமையில் நேற்றுக் கூடிய அரசியலமைப்புச் சபை கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு, சிறிலங்கா அதிபரால் முன்மொழியப்பட்ட, எச்ரிபி சந்தனவின் பெயரை அங்கீகரிக்க மறுத்துள்ளது.
அவருக்கு ஆதரவாக மூன்று வாக்குகளும், எதிராக ஐந்து வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. ஒரு உறுப்பினர் வாக்களிக்கவில்லை.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தனவின் நியமனத்துக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
கணக்காய்வாளர் திணைக்களத்தில் தகுதியான மூத்த அதிகாரிகள் உள்ள நிலையில், வெளியில் இருந்து இந்தப் பதவிக்கு ஒருவரை நியமிக்க சிறிலங்கா அதிபர் முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நேற்று நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.
அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உரையாற்றிய போது, சிறிலங்கா அதிபரால் முன்மொழியப்பட்டவர், அனுரகுமார திசாநாயக்கவுடன், களனி பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்தவர் என்றும், பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் கணக்காய்வாளராக ஐந்து ஆண்டுகள் மட்டுமே அனுபவம் உள்ளவர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.