மட்டக்களப்பு மருத்துவமனையில் முதல்முறையாக சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை
மட்டக்களப்பு போதனா மருத்துவமனையின் முதல்முறையாக சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிறுநீரக சிறப்பு மருத்துவ நிபுணர், எஸ்.பி.ஏ.எம்.முஜாஹித் மற்றும் மருத்துவக் குழுவினர் கடந்த 15ஆம் திகதி நோயாளி ஒருவருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டனர்.
மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆறு நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர், எந்த உடல்நலப் பிரச்சினையும் இல்லாமல் நேற்று அந்த நோயாளி வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார் என, சிறுநீரக சிறப்பு மருத்துவ நிபுணர், எஸ்.பி.ஏ.எம்.முஜாஹித் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள பொதுமக்களிடம், மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து உறுப்புகளை தானம் செய்வது குறித்து பரிசீலிக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
மருத்துவக் குழு மற்றும் மருத்துவமனையின் மீது நம்பிக்கை வைத்ததற்காக நோயாளி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்த மருத்துவர் முஜாஹித், உறுப்பு தானம் மற்றும் மாற்று வசதிகள் குறித்து கிழக்கு மாகாணத்தில் விழிப்புணர்வு இல்லாதிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
விபத்துகளைத் தொடர்ந்து, மூளைச்சாவு ஏற்பட்டால், உறுப்புகள் தொடர்ந்து செயற்படும் என்றும், இதுபோன்ற சமயங்களில், சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம் மற்றும் பிற உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் பல நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்றும் இதுபோன்ற கொடைகள் எமது பகுதியில் மிகவும் அரிதானவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.