கொழும்பு வந்தார் புதிய சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங்
சிறிலங்காவுடன் அபிவிருத்தி மூலோபாயங்களின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் சீனா தயாராக இருப்பதாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தெரிவித்துள்ளார்.
பதவியேற்பதற்காக நேற்று கொழும்பை வந்தடைந்துள்ள அவர், 2025-ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற உயர்மட்ட சந்திப்புகளைத் தொடர்ந்து இருதரப்பு உறவுகள் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவுடன் தோளோடு தோள் நின்று பயணிக்கவும், அபிவிருத்தி மூலோபாயங்களின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், பரஸ்பர வெற்றி மற்றும் பகிரப்பட்ட செழிப்புக்கான பரந்த வாய்ப்புகளைத் திறக்கவும் சீனா தயாராக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2025-ஆம் ஆண்டில் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோர் சீனாவுக்கு மேற்கொண்ட பயணங்கள் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங்குடனான சந்திப்புகள் இருதரப்பு உறவுகளுக்கு “புதிய மூலோபாய வழிகாட்டுதலை” வழங்கியுள்ளதாகவும், சீனத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனா தனது அண்டை நாடுகளின் இராஜதந்திரத்தில் சிறிலங்காவுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கிறது என்று கூறியுள்ள தூதுவர் வெய், இரு நாடுகளையும் அபிவிருத்தி மற்றும் “வெற்றி-வெற்றி ஒத்துழைப்பில்” பங்காளிகள் என்றும் விபரித்துள்ளார்.
தனது பதவிக்காலத்தில் இருதரப்புப் பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்காகப் பாடுபடவுள்ளதாகவும், அவர் உறுதியளித்துள்ளார்.
“எங்களின் பாரம்பரிய நட்பை முன்னெடுத்துச் செல்லவும், பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், சீன நிறுவனங்கள் மற்றும் குடிமக்களின் நியாயமான உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்கவும் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்,” என்று அவர் கூறியுள்ளார்.
