மேலும்

கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் நேற்றிரவு பதற்றம்

கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் நேற்றிரவு ஏற்பட்ட அமைதியின்மை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு 10.40 மணியளவில் சிறைச்சாலையில் இருந்த கைதிகள் குழப்பங்களில் ஈடுபட்டதை அடுத்து மேலதிக காவல்துறையினர் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டனர்.

சம்பவத்திற்குக் காரணமாக இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைச் சுவருக்கு மேலாக வீசப்பட்ட சிறிய பொதி ஒன்றை சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைப்பற்றியதை அடுத்து, கைதிகள் சிலர் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, சிறைச்சாலை அறை ஒன்றின் பூட்டை உடைத்து 40க்கும் மேற்பட்ட கைதிகள் வெளியே வந்திருந்ததுடன், சிறைச்சாலை அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அவர்களை மீண்டும் சிறைக் கூடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதற்கிடையில், சிறைச்சாலை வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சிறிலங்காவின் முப்படையினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.

நிலைமையைக் கண்காணிப்பதற்காக சிறிலங்கா விமானப்படையின் ட்ரோன்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *