5 ஆண்டுகளில் 3,791 மருத்துவர்கள் சிறிலங்காவை விட்டு வெளியேற்றம்
2020ஆம் ஆண்டுக்கும் 2025ஆம் ஆண்டுக்கும் இடையில் 3,791 மருத்துவர்கள் வெளிநாட்டு வாய்ப்புத் தேடி சிறிலங்காவை விட்டுச் சென்றுள்ளதாகவும், இந்த ஆண்டு இதுவரை 280 மருத்துவர்கள் வெளிநாடு செல்ல விண்ணப்பித்துள்ளதாகவும், பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நேற்று அவர், வெளிநாடுகளில் பணிபுரிய ஊதியமில்லா விடுப்பு பெற்ற மருத்துவர்கள் குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளார்.
2020ஆம் ஆண்டுக்கும், 2026 ஜூன் 19ஆம் திகதிக்கும் இடையில், 1,429 மருத்துவ அதிகாரிகள் (MOs) தரத்தில் உள்ள மருத்துவர்களுக்கு வெளிநாட்டு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
2022 க்கும் 2026 ஜூன் 15-ஆம் திகதிக்கும் இடையில் 140 சிறப்பு மருத்துவர்களுக்கு இதேபோன்ற அனுமதி வழங்கப்பட்டது.
வெளிநாடு சென்ற மருத்துவர்களில் கணிசமானோர், சுகாதார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்படும் வெளிநாட்டு சிறப்புப் பயிற்சித் திட்டங்களைத் தொடரும் மருத்துவர்களாவர்.
வெளிநாடு செல்லும் பெரும்பாலான சிறப்பு மருத்துவர்கள், சிறப்புப் பயிற்சிக்காகவே செல்கின்றனர், மேலும் இந்தத் திட்டங்கள் அமைச்சின் மூலம் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
பொது சுகாதாரத் துறையில் பணிச்சூழலையும் தொழில் வாய்ப்புகளையும் மேம்படுத்துவதன் மூலம் மருத்துவர்களின் இடம்பெயர்வைச் சமாளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் பிரதி அமைச்சர் விஜேமுனி தெரிவித்தார்.
