திருகோணமலை எரிசக்தி கேந்திரம், எண்ணெய் குழாய் இணைப்பு குறித்து பேச்சு
திருகோணமலை எண்ணெய் தாங்கித் திட்டம் மற்றும் இந்தியா-சிறிலங்கா இடையிலான எண்ணெய் குழாய் திட்டம் ஆகியன குறித்து, இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனின் சிறிலங்கா பயணத்தின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு அளித்த செவ்வியில், இந்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி இதனைத் தெரிவித்துள்ளார்.
“திருகோணமலையில் திட்டமிடப்பட்டுள்ள எண்ணெய் கேந்திரம் குறித்து சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுடனான சந்திப்பின் போது, கலந்துரையாடப்பட்டது.
ஐக்கிய அரபு எமிரேட்சும் இணைந்துள்ள இந்தத் திட்டம் குறித்து , 2023 ஆம் ஆண்டு முதல் கலந்துரையாடப்பட்டு வருகிறது.
இதற்கான காலக்கெடு இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும், இது ஒரு குறிப்பிடத்தக்க ஒரு மூலோபாய முயற்சி ஆகும்.
இதுபோன்ற மூலோபாய திட்டங்களில் முன்னேற்றம் காண்பதற்கு இனிமேலும் தாமதிக்க நேரமில்லை.
இந்தத் திட்டத்தை விரைவாகத் தொடங்க வேண்டியதன் அவசியத்தை இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதுபோன்ற ஒரு நேரத்தில் இந்த எரிசக்தி கேந்திரம் கட்டியெழுப்பப்பட்டிருந்தால், அது மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்றும் இந்திய வெளியுறவுச் செயலர் குறிப்பிட்டார்.

